நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ!
சென்னை: திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு நன்னிலம் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் அக்கட்சியின் தலைவர் முகமது முபாரக் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நன்னிலம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் முகமது முபாரக் போட்டியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்த எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சி கோரிக்கையின் அடிப்படையில் நன்னிலம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் எஸ்டிபிஐ கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக நன்னிலம் தொகுதியில் முகமது முபாரக் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் முகமது முபாரக் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 2026 சட்டசபைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எஸ்டிபிஐ இடம்பெற்று நன்னிலம் தொகுதியில் போட்டியிடுகிறது. எஸ்டிபிஐ கட்சிக்கு நன்னிலம் தொகுதியை ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
எஸ்டிபிஐ தேசிய தலைமை என்னை நன்னிலம் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது. நன்னிலம் தொகுதியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருக்கும் அதிமுக நிர்வாகி, அந்த தொகுதியை கைவிட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணி மக்களின் மதிப்பை பெற்றுள்ள கூட்டணி.
அதேபோல் சிறுபான்மை சமூக மக்களுக்கான கட்சிகளான ஐயூஎம்எல், மமக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இணைந்துள்ளன. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதை போல் 200க்கும் அதிகமான தொகுதிகளில் ஒன்றாக வெல்வோம். நிச்சயமாக நன்னிலம் தொகுதியிலும் திமுக நிச்சயமாக வெல்லும். திமுக கூட்டணியின் வெற்றிக்காக எஸ்டிபிஐ உறுப்பினர்கள் கட்டாயமாக உழைப்பார்கள்.
மே 4ல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை மக்கள் தருவார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்று மாநில செயற்குழு எடுத்த தீர்மானம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை.. திமுக கூட்டணி அத்தனை தொகுதிகளிலும் வெல்வோம். இது மதவாதத்திற்கும் மதச்சார்பற்ற கூட்டணிக்கும் இடையிலான தேர்தல் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications