• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஸ்டாலினுக்கு இப்படி செய்வார்களா .. மம்தா போல் பாஜக அரசை எதிர்க்கணும்.. திமுகவை சாடும் சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: 'ஒன்றியம்' எனும் வார்த்தையைக்கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியைப் போல உளமார, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க திமுக அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தனித்துவ வலிமையில்லாத நிலையில் அதிமுகவின் தோளேறி பின்வாசல் வழியாக ஆட்சியதிகாரத்தைப் பிடிக்கத் துடிக்கும் பாஜகவை முதன்மை எதிரியாகக் கட்டமைத்து, அதனையொட்டிய பரப்புரைகளை முன்வைத்து அதன் விளைவாக ஆட்சியதிகாரத்திற்கு வந்த திமுக, இன்றைக்கு பாஜக இட்ட பாதையில் செல்வதும், அவர்களை மென்மையானப்போக்கோடு அணுகுவதும் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

நாட்டின் பன்முகத்தன்மையை முற்றாகச் சிதைத்தழித்து, ஒற்றைமயத்தை முற்றுமுழுதாகக் கட்டியெழுப்பி அதிகாரப்பரவலையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் குலைத்து, தேசிய இனங்களை, 'இந்து' எனும் மாய வலைக்குள் வீழ்த்திட முயலும் பாஜகவை வலிமைகொண்டு மூர்க்கமாக எதிர்த்து அரசியல் செய்யாது, பாஜக செய்யும் அரசியலுக்குள் கரைந்துபோகும் திமுகவின் செயல்பாடுகள் யாவும் வழமையான பிழைப்புவாதமாகும்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இந்திய அரசியலமைப்புச்சாசனத்தில் கூறப்பட்ட ‘ஒன்றியம்' எனும் சொல்லைப் பயன்படுத்தியதைத் தாண்டி திமுக அரசு, பாஜகவை எதிர்த்து வீரியமாய்ச் செய்திட்ட அரசியலென்ன? 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் பாஜகவுக்கெதிராக நாடெங்கிலும் எழுந்த எதிர்க்கட்சிகளின் அணிச்சேர்க்கையை, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முந்திக்கொண்டு அறிவித்து முறியடித்த ஐயா ஸ்டாலின், தற்போது அதன் நீட்சியாகவே பாஜகவை பகைக்காது அரசியல் செய்ய முனைகிறார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

 எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

பாஜகவின் தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கிளையான சேவா பாரதியானது சேவை அரசியல் எனும் பெயரில் மக்களிடையே ஊடுருவி, இந்துத்துவ வேர்ப்பரப்பலையும், பிரித்தாளும் அரசியலையும் செய்து வருவது நாடறிந்தது. மோடி அரசால் நிகழ்த்தப்பட்டு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமியர்களைப் பலிகொண்ட குஜராத் இனப்படுகொலை முதல் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட சாத்தான்குளம் படுகொலைவரை சேவா பாரதியின் பின்புலமுள்ளது என்பது தெரிந்தும், அதனை ஊடுருவ வழிவகைச் செய்வதன் அபாயத்தை உணர்ந்து கேரளத்தை ஆளும் கம்யூனிச அரசு அதற்கு முட்டுக்கட்டை போட்டிருப்பதறிந்தும், தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கொரோனாவுக்கு எதிரான தன்னார்வ இயக்கங்களின் கலந்தாய்வுக்கூட்டத்தில் சேவா பாரதியை அழைத்தது ஏன்? அதன் பின்புலத்திலுள்ள அரசியலென்ன? சேவா பாரதி நடத்திய நிகழ்வில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர் பெருமக்களும் பங்கேற்றுச் சிறப்பித்தது ஏன்?

ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தோடு திமுகவுக்கு என்ன தொடர்பு? ‘ஆர்.எஸ்.எஸ்.ஸும் திராவிடர் கழகம் போல ஒரு சமூக அமைப்புதான்' என ஐயா கருணாநிதி அவர்கள் கூறியது நினைவுக்கு வந்துவிட்டதோ? அதன் விளைவாகத்தான், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் வருகைக்கு திமுக அரசாங்கம் அவ்வளவு முதன்மைத்துவம் வழங்கியதா? உயரடுக்குப் பாதுகாப்பில் இருக்கும் எத்தனையோ பேர் வந்ததே தெரியாமல், தமிழகத்திற்கு வருகைப் புரிந்துவிட்டுத் திரும்பும்போது மோகன் பகவத்துக்கு மட்டும் இப்பேர்பட்ட சிறப்புச்சலுகை எதற்காக? சமூக வலைத்தளங்களில் உத்தரவுக்கடிதத்தின் நகல் வெளியாகி எதிர்ப்பினையும், கண்டனத்தினையும் எதிர்கொண்ட பிறகு, வேறு வழியின்றிதானே அரசியல் நெருக்கடி காரணமாக உத்தரவுக்கடிதம் அனுப்பிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? இல்லாவிட்டால், சேவா பாரதியை சத்தமின்றித் தலைமைச்செயலகத்திற்கு அழைத்தது போல மோகன் பகவத்துக்கு எல்லா மரியாதையும் செய்தல்லவா அனுப்பியிருப்பார்கள்? இப்போதும் என்ன குறைவு?

சாலைப்பராமரிப்பு

சாலைப்பராமரிப்பு

அதிகாரியைக் கண்துடைப்புக்கு நீக்கிவிட்டு, மோகன் பகவத்தின் வருகைக்கு எவ்விதக்குறையும் வைக்காதுதானே நடத்தினார்கள்? சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்றவை மக்களின் அத்தியாவசிய அடிப்படைத்தேவைகள். அதனைச் செய்வதற்குத்தான் வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது; அரசாங்கம் எனும் கட்டமைப்பு இயங்குகிறது. அதனைச் சரிவர மக்களுக்குச் செய்து தருவதுதான் மக்களாட்சி; மக்களுக்கான ஆட்சி. அடிப்படை உள்கட்டமைப்புகளுள் ஒன்றான சாலையைச் செப்பனிட்டு, சீரமைத்து, தெருவிளக்குக்கம்பங்களை உரிய முறையில் பராமரித்திட கடந்த அதிமுக அரசுதான் முன்வரவில்லையென்றால், தற்போது வந்திருக்கிற திமுக அரசிலும் அதே நிலைதான் தொடர்கிறது. மோகன் பகவத்தின் வருகை இல்லையென்றால், சாலைப்பராமரிப்பு செய்யப்பட்டிருக்காது; அதே குண்டு குழியுமான சாலையும், எரியாத தெருவிளக்குக்கம்பங்களும்தான் இருக்குமென்றால் அதென்ன சனநாயகம்? மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மக்களின் அரசு, மக்களின் நலனுக்காகத்தானே அதையெல்லாம் செய்திருக்க வேண்டும்? அதனைவிடுத்து, மக்களுக்காகச் செய்ய வேண்டிய பணிகளைத் தனியொரு மனிதருக்காகச் செய்வார்களென்றால் ஆட்சியதிகாரம் மக்களுக்கானதுதானா?

டெல்லியில் முக்கியத்துவம்

டெல்லியில் முக்கியத்துவம்

நாளை ஐயா ஸ்டாலின் அவர்கள் டெல்லிக்குச் சென்றால் இதேபோலச் சாலைகளைச் சீரமைத்து, தெருவிளக்குகளைப் பராமரித்து இவ்வளவு மரியாதையும், முன்னுரிமையும் வழங்கப்படுமா? தமிழக முதல்வர்கள் யாருக்காகவாவது டெல்லியில் அப்பேர்ப்பட்ட முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறதா? இல்லை! இனியாவதுதான் வழங்கப்படுமா? இத்தகைய புறச்சூழல் இருக்க மோகன் பகவத்துக்கு எதற்கு அவ்வளவு முதன்மை வசதிகள்? அவர் ஒரு அமைப்பின் தலைவர் என்பதைத்தாண்டி, அவருக்கான சமூக அங்கீகாரமென்ன? அவரென்ன தேச விடுதலைப்போராட்ட வீரரா? தேச விடுதலைக்கே எவ்விதப் பங்களிப்பையும் செய்யாது வெள்ளையர்களின் அடிவருடிகளாகச் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர்தானே, அத்தகைய பின்புலம் கொண்டவரைக் கொண்டாடுவதற்கு என்ன தேவையிருக்கிறது? அதுவும் ஆரியத்தை ஆதிமுதல் எதிர்த்து வரும் தமிழர் நிலத்தில் இவரை வரவேற்று உபசரிக்க என்ன அவசியம் வந்தது? பதில் சொல்வாரா ஐயா ஸ்டாலின்?

 எழுவர் விடுதலை

எழுவர் விடுதலை

அறிஞர் அண்ணாவின் வழியில் நடத்துவதாகக் கூறும் திமுக, அண்ணாவின் உயிலென வர்ணிக்கப்படக்கூடிய மாநிலத்தன்னாட்சியை நிலைநாட்டத் தயங்குவது ஏன்? எழுவர் விடுதலையில் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோ அல்லது 161வது சட்டப்பிரிவின்படி மீண்டும் தீர்மானம் இயற்றியோ எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டிய திமுக, அது எதனையும் செய்யாது, தனக்கு அதிகாரமில்லை எனும் ஆளுநரின் உண்மைக்குப் புறம்பான கூற்றை ஏற்பது போல, ஒப்புக்கு குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி அனுப்பிவிட்டால் போதுமா? அந்தக் குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்தபோது ஐயா கருணாநிதியின் படத்தைச் சட்டப்பேரவையில் திறந்து வைக்க அழைப்புவிடுத்த ஐயா ஸ்டாலின், எழுவர் விடுதலை குறித்து ஒருவார்த்தைகூடப் பேசாததன் மூலம் குடியரசுத்தலைவருக்குக் கடிதம் அனுப்புவது வெற்று நாடகம் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டார்தானே? மாநில அதிகார வரம்புக்குட்பட்டுச் சிறைத்துறை நிர்வாகமும், சிறைவாசிகளுக்கு விடுப்பு வழங்கக்கூடிய வாய்ப்பும் இருக்கும்போது அவ்வுரிமையைப் பயன்படுத்தி ஏழு தமிழர்களையும் நீண்ட சிறைவிடுப்பின் கீழ் விடுவித்து மாநிலத்தன்னுரிமையை நிலைநாட்டலாமே? அதில் என்ன தயக்கம் ஐயா ஸ்டாலினுக்கு? காங்கிரசு கோபித்துக்கொள்ளும் என்றா? பாஜகவைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்றா? அதனால்தான், முருகனுக்கும், அக்கா நளினிக்கும் சிறைவிடுப்பை மறுத்தார்களா?

வாக்குறுதிகள்

வாக்குறுதிகள்

முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கெதிராகத் தீர்மானமியற்றி, குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப்பெற்று தமிழகத்திற்கான விலக்கைச் சாத்தியப்படுத்துவோம் எனக்கூறிய திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னானது? தீர்மானமே இயற்றப்படவில்லையே, அப்புறம் எங்கே ஒப்புதல் தரக்கூறி குடியரசுத்தலைவருக்கு அழுத்தம் கொடுப்பது? எத்தனை எத்தனை சமரசங்கள்? ஏமாற்று வாக்குறுதிகள்? கூடங்குளம் அணு உலைக்கெதிராகப் போராடியவர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற்ற திமுக அரசு, கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்திற்கு அதிமுக அரசு கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெறவில்லையே அது ஏன்? என்ன காரணம்? ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கவிட மாட்டோம் என வாக்குறுதி அளித்து, தங்கை ஸ்னோலினின் உருவப்படத்தைக் காண்பித்து மக்களிடம் வாக்குகளைப் பெற்ற திமுக, ஆக்சிஜன் உற்பத்தியெனும் வேதாந்தா குழுமத்தின் பச்சைப்பொய்யை ஏற்று அதனை மூட மறுப்பது ஏன்? தங்கை ஸ்னோலினின் தாயார் இந்நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வாரா? ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காகத்தான் திறக்கப்பட்டதா? வாதிட திமுக தயாரா? தற்போது நியூட்ரினோ ஆலைக்கு இடப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. திமுக அரசு அதுகுறித்து வாய்திறக்கவில்லையே? பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் சென்னை மாநகரையே அழித்துவிடும் என எச்சரிக்கிறோம். அதுகுறித்து திமுக எவ்வித அக்கறையும் காட்டவில்லையே? இதுதான் ஐயா ஸ்டாலின் அவர்கள் கூறிய விடியலா? நீட் தேர்வு, எழுவர் விடுதலை, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம், நியூட்ரினோ என தமிழகத்தின் முதன்மைச்சிக்கல்கள் யாவற்றிலும் பாஜக நினைப்பதே நடக்கிறதே அது எப்படி? இதுதான் பாஜகவை திமுக எதிர்க்கிற இலட்சணமா? இதுதான் மாநிலத்தன்னாட்சியை நிலைநாட்டும் அண்ணாவின் வழிவந்த ஆட்சியா?

நடவடிக்கை

நடவடிக்கை

தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் அண்ணன் ஜவாஹிருல்லாவே காவல்துறையினரிடம் புகாரளித்தும், அது இரு சமூகங்களிடையே பிளவை உண்டாக்க முனைகிறது என எச்சரித்தும் அந்தப் புகார் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? முதல் தகவல் அறிக்கையே பதிவுசெய்யாதது ஏன்? எச்.ராஜாவை ‘வெறிநாய்' என்று காட்டமாக விமர்சித்துவிட்டதாலேயே வேலை முடிந்துவிட்டதென எண்ணிவிட்டதா திமுக அரசு? வழக்கும், கைதும் தேவையில்லையா? ‘இசுலாமிய இயக்கங்கள் இராமநாதபுரத்தில் இந்து கோயில்களை இடிக்கின்றன' எனச் சுப்ரமணிய சுவாமி இசுலாமிய இயக்கங்கள் மீது மிகப்பெரும் பழியையும், அவதூறையும் வீசியபோதும், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாதது எதனால்? பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைக் கைதுசெய்யக் காட்டிய முனைப்பில் ஒரு விழுக்காடுகூட எச்.ராஜா, சுப்ரமணியசுவாமி விவாகரத்தில் காட்டாததுதான் திமுகவின் மதவாத எதிர்ப்பு அரசியலா? இவ்வாறாக, ஏராளமான வினாக்கள் வரிசைகட்டி நிற்கின்றன. எதற்கும் திமுக அரசு விடையளிக்கவுமில்லை; விடியலைத் தரவுமில்லை.

மம்தா

மம்தா

ஆகவே, இனிமேலாவது, ‘ஒன்றியம்' எனும் வார்த்தையைக்கூறியே, ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், மேற்கு வங்கத்தை ஆளும் அம்மையார் மம்தா பானர்ஜியைப் போல உளமார ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க முன்வர வேண்டும் எனவும், மோடி அரசின் நாசகாரத்திட்டங்களிலிருந்தும், சட்டங்களிலிருந்தும், தமிழ்நாட்டைப் பேணிக்காத்து மாநிலத்தின் மண்ணுரிமையையும், தன்னுரிமையையும் நிலைநிறுத்த வேண்டுமெனவும் மாநிலத்தை ஆளும் திமுக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.இவ்வாறு சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
naam tamilar party co ordinator Seaman said that DMK should continue to oppose the BJP government like Mamata without saying 'Union'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X