தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்க.. பொன்முடி முன் பேசிய ஆளுநர்.. பாய்ந்து வரும் திமுக.. மோதல்!
சென்னை: தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக ஆளுநர் ஆர். என் ரவி பேசியதற்கு எதிராக திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
சமீப காலமாக தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் பேசி வருகிறார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய கல்விக்கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கில் சமீபத்தில் பேசிய ஆளுநர் ரவி, புதிய தேசிய கல்விக்கொள்கை வந்தால் நாடு வேகமாக வளர்ச்சி பாதைக்கு செல்லும். புதிய கல்விக்கொள்கையை எல்லோரும் படிக்க வேண்டும்.
Recommended Video
விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கை சுமூகமாக நடைமுறைக்கு வரும். கல்வி கொள்கைகளை அரசியல் ரீதியாக பார்க்க கூடாது . 74 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் பெரிய மாற்றம் இல்லை.

ஆளுனர் ரவி
நம்மளுடைய கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் ஆகியவை பல்வேறு அரசாங்கங்களால் ஏற்கனவே மறைக்கப்பட்டது. இந்த மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டு எடுக்கும் வகையில் புதிய தேசிய கல்விக்கொள்கை அமையும், என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக பேசினார்.

தேசிய கல்விக்கொள்கை
அதில், புதிய கல்விக் கொள்கை தொலைநோக்கு, மாற்றத்திற்கான கல்வியை நோக்கமாகக் கொண்டது. இது மாணவ, மாணவியருக்கு கூடுதல் ஆற்றலை, அறிவை வழங்கும். நமது கல்வியில் புதிய மாற்றங்களை முன்னெடுக்கும்வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியில் மாற்றம் கொண்டு வருவதே இந்தியாவின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் படிப்பை பாதியில் கைவிட்டாலும், மீண்டும் தொடர புதிய கல்வி கொள்கையில் வாய்ப்பு இருக்கிறது.

ஆட்சியர்களுக்கு அறிவுரை
மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு புதிய கல்விக் கொள்கை தவிர்க்கப்படுகிறது. முதலில் அந்த கொள்கை என்னவென்று அரசியல் தலைவர்கள் படிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை பாருங்கள், இங்கு யாரும் அதை முழுமையாக படிக்கவில்லை. அதை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அறிந்து, அதிலுள்ள சிறப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பின்பே அதில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றார்.

பொன்முடி
இந்த நிகழ்வில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். உயர் கல்வித்துறை அமைச்சர் பல்கலைக்கழக இணை வேந்தர் என்ற முறையில் அவரும் கலந்து கொண்டார். அவரிடம், தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்.. அமைச்சர் பொன்முடியிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான் என்று மேடையிலேயே ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்தார். இந்த நிலையில், தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக ஆளுநர் ஆர். என் ரவி பேசியதற்கு எதிராக திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ராஜிவ் காந்தி
திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜிவ் காந்தி தெரிவித்துள்ள கருத்தில், தமிழ்நாடு ஆளுநர் மேதகு ரவி அவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்கள் மன்றத்தில் தேர்தலில் நின்று வென்று தன் நெடுநாள் ஆசையான புதிய கல்வி கொள்கையினை நிறைவேற்றட்டும்! அதுவும் தன் சொந்த மாநிலத்தில்! ஆளுநர்களுக்கு கொள்கையினை கொண்டு வர அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிகாரம் இல்லை, என்று கூறியுள்ளார்.

டிஆர்பி ராஜா
திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தெரிவித்த கருத்தில், மாண்புமிகு கவர்னர் இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது. அவர் எடுத்துக்காட்டாக கூறும் பிற்படுத்தப்பட்ட இந்தி மாநிலங்களில் இருக்கும் அதிகாரிகளை விட தமிழ்நாட்டில் நல்ல திறமையான அதிகாரிகள், நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு வரலாற்று ரீதியாக இந்த தேசத்திற்கு ஆட்சி அதிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுத்த மாநிலம் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications