சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா
சென்னை: 1991இல் நடைபெற்ற தேர்தலில் திமுக ஆட்சிக் கலைப்புக்கு ஆதரவாக இருந்த மனநிலையை ராஜீவ் காந்தி படுகொலை அதிமுகவுக்கான ஆதரவான அலையாக மாற்றியது. 91 தேர்தலில் திமுக இண்டு தொகுதிக்குள் சுருண்டது.
1991 அதிமுகவுக்கு ஆதரவான அலை வீசியது என்பதைவிட திமுகவுக்கு எதிராகச் சுனாமியே கிளம்பியது என்று சொல்வதே சரியாக இருக்கும். எம்.ஜி.ஆரின் அதிகாரப்பூர்வமான வாரிசு ஜெயலலிதாதான் என்பது உறுதியாகி இருந்தது. அவர் பேச்சுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்டுப்பட்டுக் கிடந்தது. ராஜீவ் காந்தியே ஜெயலலிதாவின் சொற்படிதான் முடிவுகளை எடுக்கிறார் என்ற முணுமுணுப்புகள் அரசியல் வட்டாரத்தில் சர்வசாதாரணமாகப் புழங்கின.

எனவே ஜெயலலிதாவுக்கு ஆதரவான அலைக்கு முன்பு கருணாநிதியின் நிலை என்னவாகும் என உடன்பிறப்புகளே அஞ்சினர். தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருந்தது. பள்ளிப்பாளையம் காவிரிப் பாலத்தின் அருகே ஒரு பெரிய கூட்டம் ஜெயலலிதாவை வரவேற்கக் காத்திருந்தது. உச்சி வெயில் உடலை வாட்டிவதைத்தது. மக்கள் சோர்ந்துவிடவில்லை. காலை 11 மணி வருவதாக இருந்த ஜெ, இரண்டு மணியைக் கடந்தும் காட்சி தரவில்லை. அப்படி கூட்டம் கலையவில்லை.
13 ஆண்டுகால திமுகவின் சோர்வு
திமுகவினர் இடையே முன்பே ஒரு சோர்வு நிலவியது. எம்.ஜி,ஆர் கட்சி ஆரம்பித்த பின் 13 ஆண்டுகாலம் அதிகாரத்தை திமுகவினரால் சுவைக்க முடியாமல்போனது ஒரு காரணம். ஆட்சிக் கலைப்பு பிரதான காரணம். கருணாநிதி ஆளுமை இழந்து வருவதாக அவரது கட்சியினரே எண்ணத் தொடங்கியிருந்தனர். இதனால் திமுகவின் தேர்தல் பணிகள் அடிமட்டத்தில் மெத்தனப் போக்கு இருந்தது.
ஆட்சிக் கலைப்பு என்பது திமுகவை ஒரு தேச விரோத கட்சியாகக் கட்டம் கட்ட உதவியது. இதற்கே தேர்தலுக்கு முன்னதான இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சியில் பெரிய அளவு ஊழல் புகார்கள் இல்லை. சமுதாய நலத்திட்டங்கள் பல செயல்பாட்டுக்கு வந்தன. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரப்பட்டது. பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம், மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் ஆகியவை இவற்றில் அடக்கம். ஆனாலும் ஓட்டு இத்திட்டங்கள் பலனளிக்கவில்லை.
"விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய கருணாநிதிதான், 1972இல் கட்டணக் குறைப்புக் கேட்டுப் போராடிய விவசாயிகள் 9 பேரைச் சுட்டுத்தள்ளினார்" என விவசாயச் சங்க பிரதிநிதிகள் கொந்தளித்துப் பேசிவந்தனர். ஆகவே, "போட்டியிலிருந்து விலகிக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப் போகிறேன்" என்றார் கருணாநிதி. இதனால் மீதமுள்ள உடன்பிறப்புகளின் ஸ்வரம் குன்றிப்போய்விட்டது. பலரும் அதற்கு 'தோல்வி பயம்' எனப் பொழிப்புரை எழுதினர். திமுகவுக்குள் கோஷ்டி பூசல் உச்சத்தில் நிலவியது. நிர்மலா சுரேஷுக்கு சீட்டுக் கொடுத்தது பெரிய ரகளையானது.
திமுக ஆட்சியில் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்ட அரிசி, பாமாயில் தரமற்று இருந்தன என்பதைத்தாண்டி, விநியோகம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை என சீர்கேடு நிலவியது. ஆற்காடு வீராசாமியிடமிருந்த துறையை பிடுங்கி பொன் முத்துராமலிங்கத்திடம் தரப்பட்டும், பெரிய முன்னேற்றங்கள் இல்லை.
திமுக ஆட்சிக் காலத்தில் சட்டசபையில் ஜெயலலிதாவிடம் துரைமுருகன் நடந்துகொண்ட விதம் நாகரிகமாக இல்லை என மக்கள் மத்தியில் ஒரு பொதுவான மனநிலை உண்டானது. அவருக்கு எதிராகக் கட்சி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என ஊடகங்கள் கூறின. தலைவரி கோலமாக ஜெயலலிதா அலங்கோலமாக்கப்பட்ட காட்சி ஊடகங்களில் அவர் மீது ஒரு அனுதாபத்தை உண்டாக்கி இருந்தது. திமுகவை 'துச்சாதன கும்பல்' என அதிமுக பரப்புரை செய்தது.
ஹைதராபாத்தா? பெங்களூரா?
மாறாக 'ஜெயலலிதா முதல்வரானால் பாதி நாட்கள் ஹைதராபாத்தில் இருப்பார். மீதி நாட்கள் பெங்களூரூவில் இருப்பார்' என திமுக பரப்புரை செய்தது. அப்போது அவருக்கு அங்கே தோட்டங்கள் இருந்தன. அதற்காகவே அடிக்கடி அவர் அதிமுக தலைமை அலுவலகம் பக்கம் வந்தார். தொண்டர்களைச் சந்தித்தார். திமுகவுக்கு முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். 'ஆட்சிக்கு வந்தால் மலிவு விலை மதுக்கடைகளை மூடுவேன்' என ஜெ கூறியது பெண் வாக்காளர்களைக் கவர்ந்தது.
திமுக ஆட்சிக் கலைப்பு கருணாநிதி மீது ஒரு கருணையைக் கவிழச் செய்தது. ஆனால், 1991 மே 21 ஆம் தேதி பிரச்சாரத்திற்காகத் தமிழ்நாட்டிற்குப் பிரச்சார பயணம் மேற்கொண்டிருந்த ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு சதி செயலுக்கு உயிர்ப்பலியானார். அப்போது எழுந்த அனுதாப அலையை திமுகவினால் சமாளிக்க முடியாமல் போனது.
தமிழ்நாட்டில் வீசிய ராஜீவ்காந்தி அலை!
இந்த 91 தேர்தலில் அதிமுக ராஜீவ்காந்தி படுகொலைக் காட்சியைச் சுவரொட்டியாக மாநிலம் முழுக்க ஒட்டி, அந்தச் சதிக்கு திமுகவே உடந்தை என வாக்காளர்களை நம்பச் செய்தது. முன்னதாகவே ஜெயலலிதா, ராஜீவ் கூட்டணிக்கு ஓர் ஆதரவு காணப்பட்ட நிலையில், ராஜீவ்காந்தியின் படுகொலை பேரலையாக அதிமுகவுக்கு ஆதரவாக வீசியது. இத்தேர்தலில் அதிமுக 164 தொகுதிகளில் வென்றது. பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதா 67,680 வாக்குகளை வாங்கி வெற்றியை உறுதிசெய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி. ராஜேந்தர் 30,465 வாக்குகளை வாங்கினார்.
காங்கேயம் தொகுதியில் நின்ற ஜெயலலிதா 69.050 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இரட்டைத் தொகுதிகளிலும் அவர் வாகை சூடினார். வெற்றிக்குப் பின் பர்கூர் தொகுதி பதவியை ராஜினாமா செய்தார். அங்கே நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் இ.வீரப்பன் என்பவர் ஜெயலலிதாவை விட (98,783) அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து நின்ற அருணாசலம் பெற்ற ஓட்டுக்கள் 1072 தான்.
மொத்தம் 168 தொகுதிகளில் போட்டியிட அதிமுக 164 இடங்களைக் கைப்பற்றியது. முந்தைய தேர்தலில் ஜெயலலிதா அணி வெறும் 27 சீட்டுகளையே வென்றிருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்குள் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி 1952இல் இருந்து தேர்தல் அரசியலில் அனுபவம் பெற்றிருந்த கருணாநிதியைவிட உச்சத்திற்குச் சென்றது. 91 தேர்தலில் திமுக இண்டு தொகுதிக்குள் சுருண்டது.
மு.கருணாநிதி துறைமுகம் தொகுதியில் 30,932 வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் சுப்புவை (30,042) மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். ஆனாலும், அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் நேர்ந்தது. பின் திமுக வேட்பாளர் கருணாநிதி பெற்ற வாக்குகளில் பாதியை (19,347) பெற்று மீண்டும் சுப்புவை வீழ்த்தினார். தமிழ்நாட்டில் ராஜீவ் படுகொலைக்கு எதிராக அலை வீசிய காலத்திலும் காங்கிரஸ் கட்சியினால் துறைமுகம் மற்றும் எழும்பூர் ஆகிய தொகுதிகளில் வெல்ல முடியவில்லை. எழும்பூரில் இளவழுதி 23,139 வாக்குகள் பெற்று காங் வேட்பாளர் யசோதாவை (21,936) தோற்கடித்தார்.
எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கியது முதலே திமுகவின் சரிவு ஆரம்பித்துவிட்டது. 91இல் அதிமுக 44.4% ஓட்டுகளைப் பெற்றது. திமுக 22.5%தான். 1997இல் அதிமுக 30.4%. திமுக 24.9%.தான். 80இல் அதிமுக 38.8%. திமுக 22.5% பெற்றது. 84இல் அதிமுக வாக்கு சதவீதம் 37.1 ஆனது. திமுக 29.5% ஆனது. 89இல் அதிமுக அணி உடைந்ததால் திமுக வாக்குகள் 32.4% அக உயர்ந்தது. அப்போதும் அதிமுக அணிக்குப் பெரிய நட்டம் இல்லை. 30.7% பெற்றது. 1991இல் அதிமுக வாக்குகள் 44.4% ஆக எகிறியது. திமுக மீண்டும் பழைய 22.5% அளவுக்குக் குறைந்தது.
எழுதியவர்: கடற்கரய்












Click it and Unblock the Notifications