ஒத்தையா இரட்டையா.. தொகுதி பங்கீடு குறித்து திமுக.. சிறுத்தைகள் நாளை பேச்சுவார்த்தை
நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிகிறது.
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்து திமுக-விசிக இடையே நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்துள்ளதா என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னேயே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடக்க ஆரம்பித்துவிட்டன.
ஏற்கனவே சிதம்பரம் தொகுதியில் நானே போட்டியிடுவேன் என்று போன நவம்பர் மாதம் திருமாவளவன் சொல்லி இருந்தார். இதற்கு திமுக இதுவரை எந்த மறுப்பும் சொல்லாதால், கிட்டத்தட்ட அது கன்பார்ம் என்றே தெரிகிறது. இந்த நிலையில், விழுப்புரம் தொகுதியும் வேண்டும் என்று திருமாவளவன் கேட்டு வருகிறாராம்.

பொன்முடி
ஏனெனில் கடந்த ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த 2 தொகுதிகளில்தான் விசிக போட்டியிட்டது. பொதுவாக ஒரு தொகுதியே ஒதுக்கப்பட்டாலும், எப்போதுமே விழுப்புரம் வேண்டும் என்று திருமாவளவன் கேட்டு வருவார். ஆனால் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மாவட்டம் என்பதால் அது சில சமயம் கிடைக்காமலும் போய் இருக்கிறது.

விசிக தொண்டர்கள்
2009, 2014-ம் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை கருணாநிதி திருமாவளவனுக்கு ஒதுக்கினார். இதற்கு காரணம் வட மாவட்டங்களில் விசிக தொண்டர்கள் இறங்கி வேலை பார்த்ததுதான். அதனால்தான் இந்த முறையும் அதே தொகுதிகளை வேண்டும் என்று திருமாவளவன் கேட்கிறாராம்.

2 தொகுதிகள்
ஆனால் ஒரே ஒரு தொகுதியை திமுக தர முன்வந்ததாக கூறப்படுகிறது. இந்த 2 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை அமைத்து தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டதால், 2 தொகுதிகளுமே வேண்டும் என்று திமுகவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாராம் திருமாவளவன்.

ஒன்றா, இரண்டா?
இதன் பேச்சுவார்த்தைதான் நாளை நடத்துவதாக தகவல்கள் வந்துள்ளன. அப்போது தெரிந்துவிடும் திருமாவளவனுக்கு ஒன்றா, அல்லது இரண்டா தொகுதிகள் என்பது. எப்படியும் சிதம்பரம் தொகுதியில் பாமக நேருக்கு நேராக விசிகவை சந்திக்க போவதால் அங்கு இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

தேமுதிகவா?
ஒருவேளை திருமாவளவனுக்கு விழுப்புரமும் ஒதுக்கப்பட்டால், அதிமுக தரப்பில் வேட்பாளர் யார் என உறுதியாக தெரியவில்லை. வேண்டுமானால் தேமுதிகவுக்கு விழுப்புரம் தரவும் வாய்ப்புள்ளது. எப்படியோ, திருமாவளவனுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு விட்டால் விசிக தொண்டர்கள் களத்தில் இறங்கி ரவுண்டு கட்டி ஓட்டு வேட்டையில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications