விஜய் முன்னாள் மேனேஜருக்கு பொறுப்பு கொடுத்த திமுக.. ஓபிஎஸ் அணியில் இருந்து வந்தவருக்கும் பதவி!
சென்னை: திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பிடி செல்வகுமாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிடி செல்வகுமாருக்கு திமுக வர்த்தகர் அணியின் துணைச் செயலாளர் பொறுப்பும், திமுக இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் சுப்புரத்தினத்திற்கு செய்தி தொடர் துணைத் தலைவர் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், மாற்றுக் கட்சிகளில் இருந்து ஆளுங்கட்சியான திமுகவில் ஏராளமானோர் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், சுப்பு ரத்தினம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இணைந்தனர். இதில் மனோஜ் பாண்டியனுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

அதேபோல் வைத்திலிங்கம் மகன் பிரபுவுக்கு ஒரத்தநாடு தொகுதியை ஒதுக்க திமுக தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் சுப்புரத்தினம் மட்டுமே பொறுப்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தார். ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் முக்கிய செய்தி தொடர்பாளராக சுப்புரத்தினம் இருந்து வந்தார். ஓபிஎஸ் அணிக்காக பல்வேறு விவாதங்களிலும் பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில் திமுகவில் சுப்புரத்தினத்திற்கு செய்தி தொடர்பு துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் முன்னாள் மேலாளர் பிடி செல்வகுமார் டிசம்பர் மாதத்தில் திமுகவில் ஐக்கியமானார். அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக தேர்தலிலும் போட்டியிட்டு பணியாற்றி இருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல செல்வாக்கு இருப்பதால், பிடி செல்வகுமாரை திமுக அங்கீகரித்துள்ளது. அதன்படி பிடி செல்வகுமாருக்கு வர்த்தகர் அணியின் துணைச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்து திமுகவில் இணைந்த மருது அழகுராஜ் மாநில செய்தித் தொடர்புக் குழுவின் துணைத் தலைவராக நியமித்தது. இதனால் அதிமுகவில் இருந்தும், மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்த பலருக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டு வருவது பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications