பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 4 சவரன் நகை திருட்டு.. சிக்கிய திமுக பெண் ஊராட்சி தலைவி
சென்னை: தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். அரசியல் செல்வாக்குடன் குற்றங்கள் நடப்பதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம், 4 சவரன் நகையை திருடிய வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அவரின் பின்னணி அதிர்ச்சியை கிளப்புகிறது.
அரசியல்வாதிகள் என்றாலே குற்ற வழக்குகள் இருப்பது சர்வ சாதாரணம். இதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கு இல்லை. பிரதான அரசியல் கட்சிகளில் உள்ள பலர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. சமீபத்தில் கூட திமுக அமைச்சர்கள் மீதான வழக்கு விபரங்கள் நேற்று வெளியாகியிருந்தது. இதேபோல நாடு முழுவதும் (மத்திய, மாநில) அமைச்சர்களில் 47 சதவீதம் பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்ணிடம் நகை திருட்டு
வழக்குகள் மூலம் அரசியல் தொடர்பு உருவாகி பதவியை பிடித்தவர்கள் உள்ளனர். சிலர் பதவிக்கு வந்த பிறகும் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தொடர்ந்து வருகிறார்கள். மிகவும் அரிதாக அவர்கள் சிக்கவும் செய்வார்கள். அந்த வகையில் திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர், ஒருவர் பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் கடந்த ஜூலை மாதம் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு பேருந்தில் சென்றுள்ளார். அவர் மீண்டும் சென்னை வருவதற்காக பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்து கோயம்பேடு அருகே சென்றபோது அவரின் 4 சவரன் நகை திருடப்பட்டதாக அவர் கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவியில் பகீர்
காவல்துறையினர் சிசிடிவிகளை ஆய்வு செய்தனர். அதில் நகையை திருடியவர் திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு ஊராட்சிமன்ற தலைவராக இருந்த பாரதி என்று தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல்துறையினர் கூறுகையில், "வரலட்சுமி கோயம்பேட்டில் இறங்கி, வீட்டுக்கு செல்லும் முன்பு பையை பார்த்தபோது அதில் இருந்த கம்மல், வளையல் உள்ளிட்ட 4 சவரன் நகை திருடுபோனது தெரிந்தது.
அவர் அளித்தப் புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தோம். அதில் தான் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பாரதி நகையை திருடியது தெரிந்தது. பாரதி திமுகவைச் சேர்ந்தவர். அவர் மீது வேலூர், ஆம்பூர் காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. தனிப்படை காவல்துறை நரியம்பட்டில் வைத்து பாரதியை கைது செய்துள்ளோம்.
திமுக ஊராட்சிமன்ற தலைவர்
தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். வேலூர் மாவட்டத்தில் மட்டுமே அவர் மீது 4 வழக்குகள் உள்ளன. இதற்காக சில முறை கைதும் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி, வரலட்சுமியின் நகைகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறியுள்ளனர். நகை திருட்டு வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications