தமிழர்கள் மீதான வன்மம்.. பிரதமர் மோடி தனது மாண்பை இழந்துவிடக் கூடாது.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
சென்னை: பீகாரில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு தமிழர்களின் மீதான வன்மத்தை வெளிப்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பீகாரில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் அத்தனை கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய பிரச்சாரத்தில் பேசுகையில், கர்நாடகா, தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் பீகார் மக்களை அவதூறு செய்கின்றனர். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒடிசா மாநிலத் தேர்தலின் போது பூரி ஜெகன்நாதர் கோயிலின் கருவறை சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது என்று மோடி சாடி இருந்தார். இப்படி தொடர்ச்சியாக பிரதமர் மோடி தமிழர்களையும், தமிழ்நாட்டையும் தேர்தல் பிரச்சாரங்களில் பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு தமிழனாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க நாடு இந்தியா.
இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும். நாட்டின் நலன் மீது பிரதமரும் பாஜகவினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications