அமைச்சர் சரத்குமாரை போலவே.. செல்போனில் பவுடரை நுணுக்கி கிண்டல் செய்த திமுகவினர்!
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்தியதாக அமைச்சர் சரத்குமாரை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க திமுக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரியில் அமைச்சரை கிண்டல் செய்யும் விதமாக திமுகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் சரத்குமார் செய்தது போன்றே கையில் செல்போன், ஐநூறு ரூபாய் மற்றும் பவுடர், கிரெடிட் கார்டை வைத்துக்கொண்டு கிண்டல் செய்து நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.
அமைச்சர் சரத்குமார் வெள்ளை பவுடர் ஒன்றை வைத்திருக்கும் வீடியோ தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சரத்குமார் தன் குழந்தைக்கு மாத்திரையை தான் அப்படி தூள் ஆக்கி கொடுத்ததாக கூறினார். எனினும் அவரதும் விளக்கம் நம்பும்படியாக இல்லை என திமுகவினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

அமைச்சர் போன்றே செய்து காட்டி போராட்டம்
மேலும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் போதை பொருள் பயன்படுத்தும் அமைச்சரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக திமுக இளைஞரணியினர் கிருஷ்ணகிரியில், அமைச்சர் சரத்குமார் செய்தது போன்றே கையில் செல்போன் மற்றும் பவுடர், கிரெடிட் கார்டை வைத்துக்கொண்டு கிண்டல் செய்து நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.
அமைச்சரை பதவி நீக்கு என கோஷம்
அந்த வீடியோவில், போதை அரசின் அராஜகம் ஒழிக.. ஒழிக.. நடிக்காதே, நடிக்காதே டிரக்ஸ் வைத்துக்கொண்டு நடிக்காதே.. டிரக்ஸ் வைத்துக்கொண்டு மாட்டிக்கொண்டு, மாத்திரை என்று நடிக்காதே.. போதை அரசே.. போதை அரசே.. மக்களை ஏமாற்றாதே..
பதவி நீக்கு.. பதவி நீக்கு.. போதை அரசே பதவி நீக்கு.. கைது செய், கைது செய்.. போதை அமைச்சரை கைது செய்.. " என கண்டன கோஷங்களை எழுப்புகின்றனர். அப்போது அவர்கள் அமைச்சர் சரத்குமார் ஐபிஎல் ஸ்டேடியத்தில் செய்தது போன்றே, கையில் ஒரு செல்போனையும், ஒரு கையில் கிரெடிட் கார்டையும் வைத்துக்கொண்டு பவுடரை அங்கும் இங்குமாக இழுத்து காண்பித்தனர். அங்கிருந்த இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் இவ்வாறு செய்து காண்பித்தனர்.
இது மட்டும் இன்றி சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. எனினும் சென்னையில் பல்வேறு இடங்களில் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேகர்பாபு, மா சுப்பிரமணியன் போராட்டம்

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள், "வெளுத்துப் போச்சு வெளுத்துப் போச்சு, உங்கள் சாயம் வெளுத்துப் போச்சு, கைது செய், கைது செய்.. போதை ஆசாமிகளை கைது செய்.. சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.." என்ற கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இதே போன்று சென்னை சென்னை புரசைவாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சேகர்பாபு உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.















Click it and Unblock the Notifications