விஜய்க்கா அரசியல் தெரியல? அடிச்சுத் தூக்குறாரே! தனிப்பெரும்பான்மையை நோக்கி தவெக! கருகும் இரட்டை இலை
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தனிப் பெரும்பான்மையை நோக்கி முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் நகர்வுகளை வேகப்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் மாறும் கூட்டணி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா என அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் தவெகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கி வரும் நிலையில், இடைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வென்று விட்டால் 5 ஆண்டுகள் எவ்வித சிக்கலும் இன்றி ஆட்சியில் நீடிக்கலாம் என விஜய் திட்டமிட்டுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
நடைபெற்று முடிந்த 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதே நேரத்தில் திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது தவெகவின் பலம் 107 ஆக இருந்தது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான எண்ணிக்கையை எட்டுவதற்கான பலம் இல்லை.
தவெக
இதனையடுத்து, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. ஆனால் ஆட்சி அமைந்த பிறகும் பரபரப்புகள் ஓயவில்லை. குறிப்பாக அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் தமிழக அரசியலையே திருப்பிப் போட்டது.
அதிமுக
குறிப்பாக அதிமுக முக்கிய முகமாகப் பார்க்கப்பட்ட எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுக கூடாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பகளுக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யத் தொடங்கினர். விராலிமலை தொகுதியைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
ஏற்கனவே மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்திருந்தனர். இந்த ராஜினாமாக்கள் காரணமாக இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. அந்த தொகுதிகளில் தவெக சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்த தவெக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ராஜினாமா செய்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்களில் சிலர் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், அதே தொகுதிகளில் மீண்டும் அவர்களே தவெக வேட்பாளர்களாக களமிறங்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டணி மாற்றங்கள்
இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் கூட்டணியிலும் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளான, காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் நேரடியாகவே தவெகவுக்கு ஆதரவு தெர்வித்துள்ளன. இடதுசாரி கட்சிகளுக்கும் திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களும் தவெக ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர். இதனையடுத்து தவெக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகின்றன.
தனிப்பெரும்பான்மை
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் தனிப் பெரும்பான்மையை நோக்கி முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நகர்ந்து வருவதாக தகவல்கள் உலாவுகின்றன. தற்போதைய சூழலில், சட்டப்பேரவையில் தனிப் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவை. தற்போது தவெகவின் பலம் 107. அதற்கு ஆதரவு தெரிவித்து வரும் முன்னாள் அமமுக எம்.எல்.ஏ.வும் தற்போது சுயேச்சை உறுப்பினரான காமராஜை சேர்த்தால் எண்ணிக்கை 108 ஆக உள்ளது. மீதமுள்ள எண்ணிக்கையை எட்ட இடைத்தேர்தலே முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இடைத் தேர்தல்
திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஏழு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால் அதன் பலம் மேலும் உயரும். அதன்பிறகும் தேவையான எண்ணிக்கையை எட்டுவதற்காக மேலும் சில கட்சி தாவல்கள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் விஜய் தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர் தவெகவினர்.












Click it and Unblock the Notifications