கெட்ட வார்த்தை பேசுவது எமோஷனா? வாயை கொடுத்து வாங்கி கட்டும் நடிகர் மாஸ்டர் மகேந்திரன்
சென்னை: லேபிள் திரைப்படத்தில் அதிகமாக கெட்ட வார்த்தை பேசியதாக வந்த விமர்சனங்களால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், கோபம் வந்தால் கெட்ட வார்த்தைதான் பேசுவார்கள் என பலரும் கூறியதாகவும் விவாத நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கூறியது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் மகேந்திரன் வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறுவயதில் இருந்தே நடித்து வரும் மகேந்திரன் லேபிள் படத்தில் பேசிய கெட்ட வார்த்தைகளால் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். கெட்ட வார்த்தைகள் கோபத்தில் வரத்தான் செய்யும் என்று 95 சதவீதம் பேர் சொன்னதாகவும், சென்னையில் சில ஏரியாக்களில் கெட்ட வார்த்தைகளை தான் பேசுவார்கள் என்றும் கூறினார். மகேந்திரனின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

மாஸ்டர் மகேந்திரன்
சரத்குமாரின் சூப்பர்ஹிட் படமான நாட்டாமை திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். அந்த சிறுவயது கதாப்பாத்திரத்திலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் அளவுக்கு அவரது டயலாக்குகள் அமைந்து இருக்கும். தொடர்ந்து விஜய்யின் மின்சாரக் கண்ணா திரைப்படம் என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் மகேந்திரன் நடிப்பு பேசப்பட்டது. மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மகேந்திரனுக்கு உரிய அங்கீகாரத்தை இது கொடுத்து இருந்தது. விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரமாக நடித்து அசத்தியிருந்தார். இதனை தொடர்ந்து மகேந்திரன் அருண் காமராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து மகேந்திரன் நடித்து இருந்தார்.
கெட்ட வார்த்தைகளால் விமர்சனத்துக்கு உள்ளானேன்
இந்த படத்தில் மகேந்திரன் அதிக கெட்டவார்த்தைகளை பயன்படுத்துவார். படத்தில் வரும் பல காட்சிகளில் கெட்ட வார்த்தைகள் பேசியது, நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த படத்துக்கு பின்னர் பலரும் மகேந்திரனை கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தாராம். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாதத்தில் கலந்துகொண்டபோது மகேந்திரனே கூறியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பேசியது வாயை கொடுத்து வாங்கி கட்டியது போல் ஆகிவிட்டது என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அதாவது தனியார் நிகழ்ச்சியில் பேசிய மகேந்திரன், தான் லேபிள் படத்தில் பேசியிருந்த கெட்ட வார்த்தைகளால் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளானதாகவும், இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
நெட்டிசன்கள் விமர்சனம்
6 மாதங்களாக தான் பார்க்கும் அம்மாக்களிடம் எல்லாம் கெட்ட வார்த்தைகள் பேசுவது தவறா என்று கேட்டதாகவும், அதற்கு 95 சதவீதம் பேர் கோபம் வந்தால் கெட்டவார்த்தைகள் தான் பேசுவார்கள் என்று கூறியதாகவும் தெரிவித்தார். இதற்கு எதிர்தரப்பில் இருந்த ஒருவர், "நீங்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவதை நியாயப்படுத்தாதீர்கள்" என்று கூறினார். அப்போது பேசிய மகேந்திரன், சென்னையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை சொல்லி, இங்கு எல்லாம் சாதாரணமாகவே எல்லாரும் கெட்ட வார்த்தைகள் தான் பேசுவார்கள். அது எமோஷன் என்று பதில் கூறியுள்ளார்.
மகேந்திரனுக்கு சப்போர்ட்
மகேந்திரன் இப்படி பேசியதற்கு தான் தற்போது நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். குறிப்பிட்டு சென்னையில் அந்த ஒரு பகுதியை ஏன் சொல்கிறீர்கள் என்றும், கெட்ட வார்த்தைகள் பேசுவதை ஊக்குவிக்க கூடாது என்றும் கூறி வருகிறார்கள்.
ஒருசில நெட்டிசன்கள் மகேந்திரனுக்கு சப்போர்ட் செய்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வடசென்னை படத்திலும் தான் கெட்டவார்த்தைகள் அதிகம் வரும். அவரையும் கேளுங்களேன் என்றும், வெற்றிமாறனுக்கு ஒரு நியாயம், மகேந்திரனுக்கு ஒரு நியாயமா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications