பொதுமக்களுக்கு தொல்லை..போக்குவரத்தை நிறுத்தவேண்டாம்..கான்வாய் கார்களை குறையுங்கள்..முதல்வர் உத்தரவு
தான் போகும் பாதையில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும், கான்வாயிலும் அதிக வாகனங்கள் வரக்கூடாது என்றும், வழியில் அளவுக்கு அதிகமாக போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் போலீஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர்கள்
தமிழக முதல்வர்களாக காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி வரை பலர் பொறுப்பு வகித்துள்ளனர். இதில் அவர்களுக்கு இருந்த மக்கள் ஆதரவு காரணமாக பாதுகாப்புக்காக போலீஸார் எடுத்த நடவடிக்கைகள் பல நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக மாறி அதுவே கோபமாகவும் மாறிய வரலாறு உண்டு.

சைரன் வாகனம்
காமராஜர் முதல்வராக இருந்தபோது சைரன் வைத்த வாகனம் வந்தபோது வாகனத்தை நிறுத்தி அந்த அதிகாரியை வரவழைத்து ஏ என்னப்பா நான் என்ன போய் சேர்ந்துட்டேனா சைரன் போட்டு கூட்டிட்டு போற அமர்த்தச் சொல் என்று கண்டித்ததாக சொல்வார்கள்.
இரவு ஒரு ஊரில் தங்கும் விடுதியில் தங்கிய காமராஜர் தூக்கம் வராமல் தோட்டத்து திண்ணையில் படுத்தபோது பின்னால் துப்பாக்கியுடன் காவலுக்கு நின்ற போலீஸைப்பார்த்து இப்படி தலமாட்ல துப்பாக்கியோட நின்னா எப்படியா தூக்கம் வரும் போய் நீயும் ஓய்வெடு என்று அனுப்பியதாக சொல்வார்கள்.

போலீஸ் பாதுகாப்பு
காமராஜருக்குப்பின் பக்தவச்சலம், அண்ணா என பலர் முதல்வராக சில ஆண்டுகளே இருந்தாலும் பொதுமக்களுக்கும் தங்களுக்கும் போலீஸ் இடையில் இருப்பதை தவிர்த்தனர். அதன்பின்னர் முதல்வரான கருணாநிதியின் பாதுகாப்புக்கு முன்னால் ஒரு போலீஸ் வாகனம் மட்டுமே செல்லும்.

முதல்வர் எம்ஜிஆர்
அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆரும் மிகுந்த மக்கள் செல்வாக்கு இருந்தாலும் சாலையில் அவரது காரும் முன்னால் ஒரு டிரக்கர் வாகனமும் மட்டும் செல்லும். அல்லது சில நேரம் அமைச்சர்கள் கார் தொடரும். சாலையில் பொதுமக்களை ஓரமாக நிறுத்தச் சொல்வார்கள்.

ஜெயலலிதாவுக்கு எஸ்.எஸ்.ஜி, கோர்செல் பாதுகாப்பு
எம்ஜிஆருக்குப்பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாதான் முதல்வருக்கு என பாதுகாப்புக்காக தனிப்பிரிவை உருவாக்கினார். இதற்காக அப்போதைய தமிழக ஐபிஎஸ் அதிகாரி (தற்போது ஓய்வுக்குப்பின் காஷ்மீர் ஆலோசகராக உள்ளார்) விஜய்குமார் மூலம் எஸ்.எஸ்.ஜி எனும் பாதுகாப்பு பிரிவை உருவாக்கினார். இதற்காக சிஆர்பிஎஃப் அதிகாரி மனோகரன் தமிழக கேடராக டெல்லியிலிருந்து அழைத்து வரப்பட்டார்.

தொல்லையாகிப்போன போக்குவரத்து நிறுத்தம்
91-96 காலக்கட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருக்காக உருவாக்கப்பட்ட கோர்செல் எனும் பாதுகாப்பு பிரிவும், சென்னை போலீஸாரும் பொதுமக்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தியது சர்ச்சையானது. ஜெயலலிதா வசித்த போயஸ் இல்லத்தில் வசித்த நடிகர் ரஜினிகாந்தே இதில் சிக்கினார்.
பொதுமக்களுக்கு போலீஸார் பாதுகாப்பு என்கிற பெயரில் கொடுத்த தொல்லை அரசுக்கு எதிராகவும், முதல்வருக்கு எதிராகவும் கோபமாக மாறியது. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த கருணாநிதி கோர் செல் எண்ணிக்கையை பாதியாக குறைத்தார் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சென்று வந்தார்.

மாற்றிக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா
2001 -ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இம்முறை மிகவும் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பிரச்சினை வராமல் பார்த்துக்கொண்டார். அதன் பின்னர் எப்போதும் ஜெயலலிதா வாகன கான்வாய் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததில்லை.
ஆனால் கான்வாய் பெரும் ஊர்வலமாக செல்லும். முதல்வர் கார்ப்போன்றே இன்னொரு கார், ஆம்புலன்ஸ், கான்வாய் வாகனங்கள், அதிகாரிகள் வாகனங்கள், உளவுத்துறை அதிகாரி, அமைச்சர்கள் வாகனங்கள் என பெரும் அணிவகுப்பு இருக்கும்.

எடப்பாடியும் அதே வழியில்
அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் கண்ட்ரோல் ரூம் ஒன்றை உருவாக்கி மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாட்டை செய்துக்கொண்டார். முதல்வர் வருவதற்கு பலமணி நேரம் முன்னர் போலீஸார் குவிக்கப்பட்டனர். அவர் வரும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்படும், பல நீளமான கார்கள் அணிவகுப்பையும் பார்க்க முடிந்தது.
அதன் பின் வந்த முதல்வர் ஸ்டாலின் பின்னாலும் இதேப்போன்று கார்கள் அணிவகுப்பு இருந்தது. ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த பாதுகாப்பு போகப்போக அதிகாரிகளின் விசுவாசத்தால் பொதுமக்களுக்கு இடையூறாக மாறியது. பொதுவாக இதுபோன்ற பாதுகாப்பு விவகாரங்களை அப்பகுதியில் உள்ள கூடுதல், இணை ஆணையர்கள், போக்குவரத்து கூடுதல் ஆணையர், இணை ஆணையர்கள் மேற்பார்வையில் நடக்கும்.

ஐபிஎஸ் அதிகாரிகளின் விசுவாசம்
இதில் துணை ஆணையர்களுக்கும் பங்குண்டு. இதில் யாராவது ஒருவர் முதல்வர் செல்லும் பாதையில் பொதுமக்களிடம் கெடுபிடி காட்டினால் அது ஒட்டுமொத்தமாக கெடுபிடிபோல்தான் இருக்கும், முதல்வர் என்னதான் எளிமையாக அனைவரின் கோரிக்கைகளை கவனித்து நிறைவேற்றினாலும் அவர் செல்லும் பாதையில் அலுவல் பணி, அவசரப்பணிக்காக செல்பவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்துவதால் கோபப்படவே வாய்ப்பு அதிகம்.

நீதிபதியே தடுத்து நிறுத்தம்
சமீப காலமாக சென்னையில் அதிகாரிகள் பல இடங்களில் முதல்வர் வருவதற்கு முன்னரும், அவர் கான்வாய் கடந்தப்பின்னரும் போக்குவரத்தை நிறுத்தியது பொதுமக்களிடையே கோபத்தை கிளறியது. பல இடங்களில் முணுமுணுப்புகள் கிளம்பியது. வழக்கம்போல் ஐபிஎஸ் அதிகாரிகள் அதைக்காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.
இதன்விளைவு உயர் நீதிமன்ற நீதிபதியே 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வைக்கப்பட்டு, உள்துறைச் செயலரை அழைத்து விளக்கம் கேட்கும் அளவுக்கு விவகாரம் பெரிதானது. இது முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்களுக்கு தொல்லை கூடாது முதல்வர் எடுத்த முடிவு
தான் செல்லும் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்துவதோ காக்க வைப்பதோ கூடாது, அவசியமான வாகனங்கள் தவிர தனது கான்வாயில் அதிக வாகனங்கள் ஊர்வலமாக வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கண்டிப்பாக பொதுமக்களால் வரவேற்கப்படும்.












Click it and Unblock the Notifications