கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கும் வாக்களிக்க அனுமதி.. கல்வியாளர்கள் சங்கமம் அதிர்ச்சி
சென்னை: கொரோனோ தொற்று உள்ளவர்களை வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கல்வியாளர்கள் சங்கமம் மின் அஞ்சல் மூலம் அவசரக் கோரிக்கை வைத்துள்ளது.
கல்வியாளர்கள் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. அத்தேர்தலில் வாக்களிக்கும் நேரம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரம் வாக்குப்பதிவு செய்வதற்கான நேரமாக தலைமைத் தேர்தல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுள்ள நோயாளிகளும் நேரடியாக வாக்குப் பதிவு மையத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். கடைசி ஒரு மணி நேரம், அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார். இது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
நோய்த்தொற்று உள்ளவர்கள் என்பதை அறிந்தும் அவர்களை வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிப்பது என்பது பேராபத்தை விளைவிக்கும். அதே நேரத்தில் அவர்களுடைய வாக்களிக்கும் உரிமை என்பதும் பறிபோகக்கூடாது.
கொரோனோ தொற்று உள்ளவர்களுக்கு தபால் ஓட்டுக்கள் வழங்க அனுமதி அளிப்பதுடன், அதற்கு உரிய வழிவகைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
கொரோனோ இன்றைக்கு அபாயகரமான தொற்றுநோயாக இருப்பதால், வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிப்பதும், வாக்குப்பதிவு எந்திரத்தை தொட அனுமதிப்பதும் நோய்த்தொற்றில்லாத வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும், பிற வாக்காளர்களுக்கும் நோயைக் கடத்துவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதால், வாக்குப்பதிவு மையத்திற்குள் கொரோனா தொற்றுள்ளவர்களை அனுமதிக்கும் முடிவினை உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்












Click it and Unblock the Notifications