பாக்கெட் தோசை மாவு வாங்குறீங்களா? ரெடிமேட் இட்லி மாவில் கலக்கப்படும் அந்த ஒரு பொருள் இதுதானா
சென்னை: பாக்கெட் மாவு என்று இன்றைய அவசர உலகில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.. பெரும்பாலான வீடுகளில் உள்ள கிச்சனில் ஃபிரிட்ஜை திறந்தால் டக்கென்று கண்ணில் படுவது ரெடிமேட் பாக்கெட் தோசை மாவுதான். இந்த பாக்கெட் மாவு நமக்கு பெருமளவு கை கொடுத்து உதவுகிறது என்றாலும், ஆரோக்கியம் சார்ந்த சில முக்கியமான விஷயங்களையும் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏன் தெரியுமா?
வேலைக்கு போகும் பெண்களுக்கும், தனியாக ரூம் எடுத்து தங்கி படிக்கும் இளைஞர்களுக்கும் இந்த பாக்கெட் மாவு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறிவிட்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அத்தனை மாவு பாக்கெட்களும், அனைத்து நாட்களிலுமே நல்லதுதானா?

நாம் வீட்டில் அரைக்கும் மாவு 2 அல்லது 3 நாட்களில் புளித்துவிடும்.. இதுவே பாக்கெட்டில் அடைக்கப்பட்டு வரும் மாவு ஒரு வாரம் வரை கூடத் தாங்குகிறது, இதற்கு காரணம், அதில் சேர்க்கப்படும் சில பதப்படுத்திகள் மற்றும் ரசாயனங்கள் தான்.
புளித்துவிடும் தோசை மாவு
கடைகளில் விற்கப்படும் மாவு சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்கவும், அதன் சுவையைக் கூட்டி வைக்கவும் தயாரிப்பாளர்கள் அதில் சாதாரண அளவை விட அதிகமாகவே உப்பை சேர்த்து விடுகிறார்கள்.. இதிலுள்ள அதிகப்படியான சோடியம், ரத்தக்கொதிப்பு, இதய நோய் உள்ளவர்களுக்கும் அவ்வளவாக நல்லது கிடையாது.
அடுத்ததாக மாவு சீக்கிரமாக புளித்து உப்பலாக வர வேண்டும் என்பதற்காகவே ஒருசில நிறுவனங்கள் செயற்கை ஈஸ்ட் அல்லது சமையல் சோடாவை பயன்படுத்துகிறார்கள். இதைத் தொடர்ந்து சாப்பிடும்போது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகள் நிறைய பேருக்கு ஏற்படுத்தி விடுகிறது.
பிளாஸ்டிக் கவரிலேயே நுண் துகள்கள்
அரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து, அரைத்து, அது இயற்கையாக புளிக்கும் போதுதான் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகின்றன. ஆனால், பாக்கெட் மாவு நீண்ட நாட்கள் தாங்க வேண்டும் என்பதற்காகவே பல வேதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவதால், இயற்கையான சத்துக்கள் முழுமையாக கிடைப்பதில்லை.
அதுமட்டுமல்ல, மாவு அரைக்கப்பட்ட பிறகு அது பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்டு பல நாட்கள் வைக்கப்படுகிறது. மாவிலுள்ள புளிப்புத் தன்மை, அந்த பிளாஸ்டிக் கவரிலேயே இருக்கும் போது, பிளாஸ்டிக்கில் உள்ள நுண் துகள்கள் மாவில் கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். லட்சக்கணக்கான பாக்கெட்டுகளை தயாரிக்கும் பெரிய நிறுவனங்களில் எந்த அளவுக்கு தூய்மை பராமரிக்கப்படுகிறது என்பதும் நமக்கு தெரியாது.
பாக்கெட் மாவில் கவனம்
சில நேரங்களில் லாப நோக்கத்திற்காக மலிவான ரக அரிசிகளையும், தரம் குறைந்த உளுந்தையும் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
அதனால் இந்த பாக்கெட் தோசை மாவை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும், சில முன்னெச்சரிக்கை விஷயங்களை நாம் எடுக்கலாம். அவசரத்துக்கு மட்டும் இதை பயன்படுத்திக் கொண்டு, மற்ற நேரங்களில் வீட்டிலேயே மாவு அரைக்க பழகிக்கொள்ளலாம்.
அவசரத்துக்கு ரெடிமேட் மாவு
ஒருவேளை அவசரத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை வந்தால், கவரைத் திறந்ததும் மாவை உடனடியாக ஒரு சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரத்திற்கு மாற்றிவிடுவது நல்லது. தோசை ஊற்றுவதற்கு முன்பாக, மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி அல்லது சீரகம் கலந்து சுட வைத்தால், அது செரிமானத்திற்கு ஓரளவுக்கு உதவி செய்யும்.
என்னதான் டெக்னாலஜி நம் வேலையை எளிதாக்கினாலும், நம்முடைய ஆரோக்கியம் நம் கையில் தான் இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது...!!












Click it and Unblock the Notifications