யாரு சாமி நீ! கிரெடிட் கார்டு வாங்கிய வங்கியிடமே இழப்பீடு.. சென்னை நுகர்வோர் கோர்ட் சூப்பர் தீர்ப்பு
சென்னை: சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகிறார்.. அவர் கிரெடிட் கார்டு வாங்கிய வங்கியிடமே இழப்பீடு வாங்க போகிறார். சென்னை நுகர்வோர் நீதிமன்றம் சூப்பர் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிரெட்டி கார்டு வைத்துள்ளவர்களுக்கு இந்த தீர்ப்பு நிச்சயம் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. என்ன வழக்கு என்பதை பார்ப்போம்.
இன்றைய சூழலில் கிரெடிட் கார்டு இல்லாதவர்கள் பெருநகரங்களில் மிக குறைவு. இஎம்ஐயில் தான் பலரது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. ஏசி தொடங்கி ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்மார்ட் டிவி, செல்போன், ஃபர்னிச்சர் என எல்லாமே கிரெடிட் கார்டு இஎம்ஐயில் தான் பலர் வாங்குகிறார்கள். சிலர் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய செலவுகள் தொடங்கி, அவசரத்திற்கு ஊருக்கு போக டிக்கெட் போடுவது வரையிலும் கிரெடிட் கார்டை பயன்படுத்துகிறார்கள். பக்கத்து வீடுகளில் கைமாற்றாக கடன் வாங்குது போல் இந்த கிரெடிட் கார்டுகள் இருந்தாலும், இதை சரியாக பயன்படுத்தாமல், தவறாக பயன்படுத்துவதால், பலரும் சிக்கலில் சிக்கி தவிக்கிறார்கள். கிரெடிட் கார்டில் என்னென்ன செலவு செய்கிறோம் என்பதை பற்றி தெளிவு இல்லாததால் இன்றைக்கு பலரது வாழ்க்கை சேமிப்புகள் இல்லாத வாழ்க்கையாக மாறி வருகிறது.. இந்நிலையில் கிரெடிட் கார்டு குறித்து சென்னை நுகர்கோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதற்காக அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், 'நான், கடந்த 2000-ம் ஆண்டு முதல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகிறேன். கிரெடிட் கார்டு மூலம் மேற்கொண்ட செலவு மற்றும் பணம் செலுத்திய விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரினேன்.
இந்த தகவல்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என தேசியமயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகம் தெரிவித்தது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வங்கி கணக்கு விவரங்களை கோரினால் வழங்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கிறது. கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை வங்கி நிர்வாகம் வழங்காததால் அந்நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் தேவராஜன் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன் மற்றும் வி.ராமமூர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், "தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர் தேவராஜன் வங்கியிடம் விவரங்களை கோர முடியாது என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை வழங்க வங்கி நிர்வாகம் மறுத்தாலும், சேவை வழங்குனர் என்ற அடிப்படையில் இந்த தகவல்களை வழங்குவது வங்கியின் கடமையாகும். எனவே, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக வங்கி நிர்வாகம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும். மனுதாரர் கோரும் கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்கு வழங்க வேண்டும்" இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications