3 லட்சம் பேர் கூடியது எப்படி? சொல்லட்டுமா? விஜய் வெல்ல முடியாது? பாஜக உடைத்த ரகசியம்
சென்னை: விஜய்யின் மாநாட்டிற்கு இரண்டரை லட்சம் பேர் எப்படி வந்தார்கள் என்பதைப் பற்றி பாஜகவைச் சேர்ந்த இராம ஸ்ரீநிவாசன் ஒரு கணக்குப் போட்டு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் தலைமையில் வலிமையான கூட்டணி அமைக்கப்பட்டு பெரும்பான்மை பலத்துடன் நல்லரசை அமைப்போம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இரண்டு நாட்கள் முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்றும் அதைப்போன்ற ஒரு தோற்றத்தை உள்நோக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கிறார்கள் என்றும் புஸ்ஸி ஆனந்த் குற்றஞ்சாட்டி இருந்தார்.

மற்றொரு பக்கம் அதிமுகவுடன் விஜய் பேசிய பேரம் படியவில்லை என்று சிலர் கருத்து கூறி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'கூட்டணி வைக்க 100 கோடி பணம் கேட்கிறார்கள்' என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் பொத்தாம் பொதுவாகப் பேசி இருக்கிறார்.
இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன், 'விஜய்யுடன் எந்தப் பெரிய கட்சியும் கூட்டணி வைக்க முன்வரமாட்டார்கள்' என்ற ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். மேலும் அவர் விஜய்யின் விக்கிரவாண்டி மாநாட்டிற்கு வந்த கூட்டம் எப்படி வந்தது என்பது பற்றிய ஒரு கணக்கைச் சுட்டிக்காட்டிப் பேசி இருக்கிறார். இராம ஸ்ரீநிவாசன் அளித்துள்ள பேட்டியில், "பலரும் அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைப்பார் என்று பேசி வந்தார்கள். ஆனால், அதை இல்லை என்று விஜய் மறுத்துவிட்டார். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அவர் மறுத்திருக்கலாம்.
எந்தக் கட்சியும் விஜய்யுடன் கூட்டணி வைக்காது என்பதுதான் எனது கணிப்பாக இருக்கிறது. மக்கள் கூட்டணி ஆட்சியா? அதிகாரத்தில் பங்கு தருகிறார்களா? குறைந்த பட்ச செயல் திட்டம் போடுகிறார்களா? இதை எல்லாம் மக்கள் பார்க்க மாட்டார்கள். அது அவர்களுக்குப் புரியாது. இந்தக் கட்சி வெற்றி பெற்றால் யார் முதல்வர்? அதைத்தான் மக்கள் கவனிப்பார்கள்?
அதிமுக 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சி. அது விஜய்தான் முதல்வர் என்பதை ஏற்குமா? அப்படி ஏற்றால் அந்தக் கட்சியின் நிலை அவ்வளவுதான். அதேபோல் விஜய் எடப்பாடிதான் முதல்வர் என்பதை ஏற்றுக் கொண்டால், அவரது கதையும் முடிந்துவிடும்.
கடந்த 2019 தேர்தலில் 4% வாக்குகளைப் பெற்றார் கமல்ஹாசன். இன்றைக்கு எங்கே இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? அவர் கட்சியின் சின்னம் டார்ச் லைட். அந்த டார்ச் லைட்டை வைத்து அவரை தேடவேண்டிய நிலைதான் இன்று நிலவுகிறது. எனவே சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வரும்போது ஒரு பிம்பத்தோடு வருகிறார்கள். அதே மாதிரிதான் இப்போது விஜய். அவரது கட்சியில் உள்ள பாதிப் பேருக்கு ஓட்டே கிடையாது. காவல்துறை அறிக்கைப்படி விக்கிரவாண்டிக்கு 3 லட்சத்திற்குக் குறைவாகவே கூட்டம் வந்துள்ளது.
ஒரு சின்ன கணக்குப் போட்டுப் பார்ப்போம். விஜய் படம் 250 தியேட்டர்களில் வெளியாகிறது. முதல் நாள் 5 ஷோ போடுகிறார்கள். ஒருநாளைக்கு சுமார் 1000 பேர் படம் பார்ப்பார்கள். 250 X 1000 என்றால் ஒரு நாளில் இரண்டரை லட்சம் பேர் பார்ப்பார்கள். இது முழுக்க ரசிகர் கூட்டம். அவர்கள்தான் மாநாட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் யாரும் விஜய் கட்சியின் கொள்கைக்காக வந்தவர்கள் கிடையாது.
முதல் நாள் காட்சிக்கு 1000 ரூபாய் செலவழித்து விஜய்யின் படத்தைப் பார்த்தவர்கள், அதே பணத்தைச் செலவழித்து விஜய்யை நேரில் பார்ப்பதற்காக விக்கிரவாண்டி வந்துள்ளனர். அதுதான் உண்மை. விஜய் ரசிகர் என்பதற்கு சமூகத்தில் என்ன மதிப்பு இருக்கிறது சொல்லுங்கள்? வீட்டில் இருப்பவர்களே விஜய் ரசிகரை மதிக்கமாட்டார்கள். அதான் யதார்த்தம்.
எம்.ஜி.ஆர் சினிமாவில் இருக்கும்போதே மக்களுக்கு நல்லது செய்தார். அவரை ஒரு நல்ல மனிதராக மக்கள் நம்பினார்கள். அதன்பின் அவர் அரசியலுக்கு வந்ததும் ஆதரித்தார்கள். விஜய் ஒன்றும் எம்.ஜி.ஆர். அல்ல. எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கிய போது நான் 4 ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது பள்ளிக்கு விடுமுறை விட்டார்கள்.
ஒருவரைக் கட்சியில் விட்டு நீக்குவது உட்கட்சி பிரச்சினை. அதற்குப் பள்ளிக்கு விடுமுறை விடுவார்களா? எம்.ஜி.ஆரை நீக்கிய போது திமுகவுக்குள் எந்தக் கொந்தளிப்பும் இல்லை. மக்கள் கொந்தளித்தார்கள். அதற்கு மக்களிடம் எதிர்ப்பு இருந்தது. ஆகவே பள்ளிக்கு விடுமுறை விட்டார்கள். இதைப் போன்று வேறு யாருக்குமே நடக்கவில்லை.
எனவே எம்.ஜி.ஆரை ஒருபோதும் விஜய்யுடன் ஒப்பிடவே கூடாது. அவர் வேறு. இவர் வேறு. எம்.ஜி.ஆரை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். விஜய்யை எந்தக் கட்சி தலைவராக ஏற்கும்? சீமான் ஏற்பாரா? ராமதாஸ் ஏற்பாரா? பாஜக ஏற்குமா? திருமாவளவன் ஏற்பாரா? யார் ஏற்பார்கள்? பெரிய கட்சிகள் எதுவும் விஜய் கூட்டணியை ஏற்கமாட்டார்கள். சாதிரீதியான சின்ன அமைப்புகள் அவர் பக்கம் போகலாம்.
விஜய் கட்சியில் ஒரு புதுமையும் இல்லை. மக்கள் எதைப் பேசினால் விரும்புவார்களோ அதை விஜய் பேசுகிறார். ஈவெராவை ஏற்றுக் கொள்கிறோம் என்கிறார். அவரை ஏற்காத கட்சி பாஜக மட்டும்தான். திமுக, அதிமுக, காங்கிரஸ் எனப் பல கட்சிகள் ஈவெராவை ஏற்றுக் கொண்டுள்ளன. கம்யூனிஸ்ட்டுகள் கூட பெரியாரை ஏற்று கொண்டுவிட்டன. சீமான் மட்டும்தான் பெரியாரை விமர்சிக்கிறார். விஜய் எதைச் சொன்னால் ஆதரவு கிடைக்குமோ அதை அப்படியே பேசுகிறார். அங்கே என்ன புதுமை இருக்கிறது? " என்கிறார்.












Click it and Unblock the Notifications