தங்கம் விலை 60,000 த்தை தாண்ட என்ன காரணம்.. டிரம்ப் வந்த உடனே பார்த்த வேலை.. தவிக்கும் இந்திய மக்கள்
சென்னை: தங்கம் விலை ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை தாண்டி வரலாறு படைத்துள்ள நிலையில், இது சாதாரணமாக இந்த உயரத்திற்கு வரவில்லை. இதன் பின்னணியில் அமெரிக்காவும் உள்ளது. அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் எப்போது எல்லாம் பயப்படுகிறார்களோ, அப்போது எல்லாம் தங்கம் விலை உயர தொடங்கிவிடும். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற போது சட்டென இறங்கிய தங்கம், அவர் பதவியேற்ற அடுத்த நாளே உலகின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் விலை இப்படி உயர முக்கிய காரணம் என்கிறார்கள்..
தங்கம் விலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 50 ஆயிரம் என்கிற அளவில் இருந்தது.. ஆனால் 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே ரூ.55 ஆயிரம் என்ற நிலையை அடைந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்ததால், ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தங்கம் விலை ஜூலை மாத இறுதியில் ஒரு பவுன் தங்கம், ரூ.51 ஆயிரத்துக்கு கீழாக வந்தது.

மேலும் விலை குறையும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தலைகீழாக மாறியது. அடுத்த இரண்டு மாதத்தில், அதாவது கடந்த செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்துக்கு உயர்ந்தது.
தங்கம் விலை அதன்பிறகு ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்தது. அக்டோபர் மாதத்தில் ஒரு பவுன் ரூ.57 ஆயிரம், ரூ.58 ஆயிரம், ரூ.59 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 455-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 640-க்கும் விற்பனையாகியது. ஆனால் விலை ஏற்ற, இறக்கத்துடனே இருந்தது. ரூ.60 ஆயிரத்தை தொடவில்லை..
இதனிடையே டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தங்கம் விலை நவம்பரில் சற்று குறைந்தது. தங்கம் விலை நவம்பர் மாதம் 15ம் தேதி அன்று ஒரு பவுன் 55 ஆயிரத்து 560 என்கிற அளவில் குறைந்து இருந்தது. அதன்பிறகு டிசம்பரில் மெல்ல மெல்ல ஏறிக்கொண்டே சென்றது. இதனிடையே ஜனவரியான இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் அதன் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு பவுன் ரூ.60 ஆயிரம் என்ற நிலையையும் தாண்டியது.
அதன்படி, கடந்த ஜனவரி 21ம் தேதி 22 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 450-க்கும், ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. ஆனால் ஜனவரி 22ம் தேதியான நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.75-ம், பவுனுக்கு ரூ.600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 525-க்கும், ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில், உச்சத்தை தொட்டு புதிய வரலாறு படைத்தது. ஆனால் ஜனவரி 23ம் தேதியான இன்று 22 கேரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 525-க்கும், ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை பொறுத்தவரை 2020ம் ஆண்டில் வெறும் 30 ஆயிரம் என்கிற அளவில் இருந்தது. ஆனால் 2025ம் ஆண்டில் தங்கம் விலை அப்படியே 60000 என்கிற அளவில் டபுள் ஆகி உள்ளது. இதேபோல் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 50 ஆயிரம் என்கிற அளவில் இருந்த நிலையில் வெறும் 10 மாதத்தில் 10 ஆயிரம் வரை உயர்ந்து தற்போது ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்துக்கு வந்துள்ளது.
தங்கம் விலை உயர பல்வேறு காரணிகள் உள்ளது என்றாலும், சர்வதேச அளவில் தங்கம் விலை உயரவும், குறையவும் அமெரிக்கா முக்கிய காரணமாக உள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டு, அவர் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவியேற்றார்.
டிரம்ப் பதவியேற்றதும் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாக நினைத்து தான், தங்கம் விலை அதிகரித்தது. எதிர்பார்த்ததை போலவே, அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, இறக்குமதி வரி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அதிபர் டிரம்ப் பதவியேற்ற அன்றே வெளியிட்டார்.
மேலும் சீனா, இந்தியாவுக்கு எதிராக சில வரிகளையும் விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டிரம்பின் பல்வேறு அதிரடி அறிவிப்புகள், அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அவர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்ய தொடங்கிவிட்டார்கள்.. இதுதான் தங்கம் விலை அதிகரிக்க காரணம் என்று தங்க நகை வியாபாரிகள் கூறினார்கள் .












Click it and Unblock the Notifications