பாப்பிரெட்டிபட்டியில் போட்டியிடுகிறாரா சவுமியா அன்புமணி? காதோரம் கனகாம்பரம்!
சென்னை: தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியில் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி மீண்டும் தேர்தல் களத்தில் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவரது மகள் சஞ்சுத்ராவும் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்க உள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டின் வடமாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் வன்னியர் சமுதாயத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். மக்கள்தொகை அடிப்படையில் தமிழகத்தின் மிகப்பெரிய சமுதாயமாக வன்னியர்கள் விளங்குகின்றனர். இச்சமுதாயத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்காகவும் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகவும் டாக்டர் ராமதாஸ் பாமக கட்சியை நிறுவினார்.

கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை முதலமைச்சராக்கும் நோக்கத்துடன் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் தற்போது பாமக சொற்ப இடங்களுக்காக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பெரிய கட்சிகளை நம்பியிருக்கும் நிலையில் உள்ளது. இந்த சூழலை மாற்ற வேண்டும் என்று ராமதாஸ் விரும்புகிறார். இதை "படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தை" என்று அண்மையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தருமபுரி தேர்தல் வரலாறு
டாக்டர் ராமதாஸின் கட்சிக்கு தருமபுரி மாவட்டத்தில் கணிசமான செல்வாக்கு உள்ளது. இன்றும் ராமதாஸ் மீது அன்பும் பாசமும் கொண்ட ஆதரவாளர்கள் அப்பகுதியில் அதிக அளவில் உள்ளனர். 2014 லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி வெற்றி பெற்றார். ஆனால் 2019 தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில்குமாரிடம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2024 லோக்சபா தேர்தலில் மேலும் தோல்வி ஏற்படாமல் இருக்க அன்புமணி தானே போட்டியிடாமல் தனது மனைவி சவுமியாவை களத்தில் இறக்கினார். அவர் திமுக வேட்பாளருக்கு கடும் போட்டி கொடுத்து 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
சட்டசபை தேர்தலில் சவுமியா
2019ல் பாமக தோல்வியடைந்தாலும் தருமபுரியில் கவுரவமான வாக்குகளைப் பெற்றது. தருமபுரி மக்கள் பாமகவை கைவிடமாட்டார்கள் என்று கூறலாம். இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் சவுமியாவை தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட வைக்க பாமக தலைமை முடிவு செய்துள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டிதான் குறி
2024 லோக்சபா தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் பாமகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. இதனால் அத்தொகுதியில் சவுமியா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சவுமியா தொடர்ந்து வருகை தந்து வருகிறார். அப்பகுதியில் கனகாம்பரம் சாகுபடி அதிகம் இருப்பதால் உள்ளூர் பெண்கள் அப்பூவை தலையில் சூடுவார்கள். சவுமியாவும் கனகாம்பரம் பூவை சூடிக்கொண்டு "நானும் உங்களில் ஒருத்தி" என்ற அணுகுமுறையில் வாக்குசேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதி பெண்களின் மனதில் சவுமியா இடம்பிடித்துவிட்டார் என்று கூறலாம்.
தருமபுரியில் முகாம்
அதேபோல் இளைய மகள் சஞ்சுத்ராவையும் அரசியல் களத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. 2024 லோக்சபா தேர்தலின்போது சஞ்சுத்ரா அப்பகுதி மக்களுடன் நெருக்கமாக பழகியுள்ளார். அங்கேயே அவரும் சவுமியாவும் வீடு எடுத்து தங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால் சஞ்சுத்ராவும் அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது












Click it and Unblock the Notifications