வாசலில் போட்ட அரிசி மாவு கோலம்.. நொடியில் குழுமிய சிட்டுக்குருவிகள்.. என்னாச்சு தெரியுமா? ஆஹா அருமை
சென்னை: இணையத்தில் சிட்டுக்குருவி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.. இதனை பார்த்த பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்தும் வருகிறார்கள். என்ன காரணம்?
வீட்டில் கோலம் போடுவது என்பதே பெண்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாகும். குறிப்பாக மார்கழி மாதத்தில் கோலம் போடுவது நல்லது. ஏனென்றால், காலை நேரத்தில் கோலம் போடும்போது, சூரிய கதிர்கள் உடலில் நேரடியாக விழும். இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியது.. முழுமையான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது...

உடற்பயிற்சி: இதனால் உடலிலுள்ள நரம்புகளின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்.. நினைவாற்றல் பெருகும்... அத்துடன், குனிந்து வாசல் பெருக்குதல், குனிந்து கோலமிடுதல் போன்றவையெல்லாம் யோகாசன நிலையாக உள்ளது. இதனால், இடுப்பு பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கோலம்போடுவது, சிறப்பான யோகாசனமாக அமைந்துவிடுகிறது.
பெரும்பாலும், கிராமங்களில் வீடுகளில் அரிசி மாவில் கோலம் போடுவார்கள்.. இதற்கு ஆன்மீகத்தில் சிறப்பான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.
ஆசீர்வாதம் : அதாவது அரிசி மாவு கோலத்தில் இருக்கும் வெண்மை நிறமானது பிரம்மாவையும், அந்த கோலத்தை சுற்றிலும் இடும் காவி நிறம், சிவனையும், கோலத்தின் நடுவில் சாணத்தில் பூசணி பூ மகாலட்சுமியும் சிறப்பிக்கவே வைக்கப்படுகிறது.. இதனால், இந்த தெய்வங்கள் எல்லாம் சேர்ந்து அந்த குடும்பத்தை ஆசீர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அரிசி மாவில் கோலம் போடும்போது, எறும்பு உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு உணவாகிறது. ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்கு அர்த்தமாம்.. ஜீவராசிகளின் பசியை போக்கும் புண்ணியமும் கிடைக்கும். அதனால்தான், அரிசி மாவில் கோலம் போட சொல்கிறார்கள். வாசலில் கோலம் போடுவதால் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம்.
பறவைகள்: ஆனால், இன்றைய காலகட்டத்தில் பலரும் கலர் பொடிகளில் கோலம் போட்டு வருகிறார்கள்.. இதற்கு பதிலாக அரிசி மாவில் கோலம் போட்டால், எறும்புகள் மட்டுமல்ல பறவைகளும் பசியாறிவிடும். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது? எந்த ஊர் என்று தெரியவில்லை.. வீட்டு வாசலில் அரிசி மாவு ஒன்றில் கோலம் போடப்பட்டுள்ளது.. சிறிய அளவில்தான் கோலம் காணப்படுகிறது.. ஆனால், நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் திடீரென பறந்து, அந்த கோலத்தின் மீதுள்ள அரிசி மாவை சாப்பிடுகின்றன.
சூப்பர் வீடியோ: கிரீச் சத்தத்துடன் ஒலி எழுப்பியவாறே சிட்டுக்குருவிகள், அரிசியை கொத்தி தின்கின்றன. கோலத்தையே மூடிவிடும் அளவுக்கு சிட்டுக்குருவிகள் ஒன்றாக திரண்டு, அரிசியை சாப்பிட்டுவிட்டு, பிறகு ஒன்றாகவே சேர்ந்து பறந்துவிடுகின்றன.
இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.. முன்பெல்லாம் அரிசி மாவு கோலங்களை அதிகமாக பெண்கள் போடுவார்கள். அதேபோல, வீடுகளில் சமைப்பதற்கு முன்பு வாசலில் அமர்ந்து அரிசி புடைப்பார்கள்.. இதில் சிதறி விழும் அரிசியை கொத்தி தின்பதற்காகவே சிட்டுக்குருவிகள் அதிகமாக வரும்.. இப்போது இந்த பழக்கமெல்லாம் குறைந்து வருகிறது.
இந்த, அரிசி மாவு சாப்பிடும் சிட்டுக்குருவி வீடியோ வைரலாகி வருகிறது. நம் முன்னோர்கள் அரிசி மாவில் கோலம் போடச்சொன்னது ஏன் தெரியுமா? என்று கேட்டு இந்த வீடியோவினை இணையவாசிகள் ஷேர் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications