இனிமேல் சொத்து வரியும் உயர்கிறது.. ஏப்ரல் மாதம் ரெடியா இருங்க.. வீட்டு வரி எவ்ளோ ஏறுகிறது தெரியுமா?
சென்னை: மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு வருடந்தோறும் சொத்து வரியை உயர்த்த அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், புதிய தகவல் ஒன்று வட்டமடித்து வருகிறது.
மாநகராட்சிகளை பொறுத்தவரை, முக்கிய வருவாய் மூலமாக இருப்பதே சொத்து வரிகள்தான்.. சென்னையை மட்டும் எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட 13 லட்சம், சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைத்து வருகிறது.. வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள் மூலம் வருடத்துக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டும் வருகிறது..

திடக்கழிவுகள்: இதுபோன்று கிடைக்கும் வருவாயை வைத்துதான், பொதுமக்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள், சாலைகளை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற மிக மிக அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவேதான், சொத்துவரி மற்றும் தொழில்வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.. குறிப்பாக, அரையாண்டு துவங்கும் முதல் 30 நாட்களில், சொத்துவரி செலுத்துவோருக்கு, வரியில் 5 சதவீதம், அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது..
தனிவட்டி: ஆனால், சொத்து வரியை செலுத்தாவிட்டால், அந்த உரிமையாளர்கள் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரியை செலுத்த வேண்டிவரும்.. அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்தியவர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ5 ஆயிரம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதற்கு பிறகு செலுத்தப்படும் சொத்துவரிக்கு, 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படுகிறது.
இதைத்தவிர, நீண்டகாலமாக யாரெல்லாம் சொத்துவரி செலுத்தவில்லையோ, அவர்களின் பட்டியல்கள், மாநகராட்சியின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டும் வருகிறது.
அனுமதி : இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2025 - 26ம் நிதியாண்டில், சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த, தமிழக அரசிடம் நகராட்சி நிர்வாகத்துறை அனுமதி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு வருடந்தோறும் சொத்து வரியை உயர்த்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எனவேதான், கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், 600 சதுரடிக்கு குறைவான குடியிருப்புகளுக்கு, 25 சதவீதமும், 601 - 1,200 சதுரடி வரை என்றால், 50 சதவீதமும், 1,201 - 1,800 சதுரடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 75 சதவீதமும், 1,800 சதுரடிக்கு மேலாக இருந்தால், 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது.
வணிக கட்டிடங்கள்: அதேபோல, வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 100 சதவீதமும்; தொழிற்சாலை, கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 75 சதவீதமும் உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு சொத்துவரி உயர்த்தப்படவில்லை..
சென்னை, நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்கள் கடந்த 2023ல் வெள்ள பாதிப்பால் சொத்து வரியை உயர்த்த அரசு அனுமதிக்கவில்லை. எனவேதான், அடுத்த வருடம் அதாவது 2025 - 26ம் நிதியாண்டில் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிதி பற்றாக்குறை: நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால், சொத்து வரியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி, சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். எனினும், சொத்து வரி உயர்வு அரசின் கொள்கை முடிவை சார்ந்தது என்பதால், அரசின் அனுமதி கோரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications