தமிழகத்தில் 200 பெண்களுக்கு ரூ 50 ஆயிரம் மானியம்! தகுதிகள் என்னென்ன? பெற வழிமுறை என்ன?
சென்னை: தமிழக அரசு மகளிர் மேம்பாட்டிற்காக புதியதொரு திட்டத்தின் கீழ் ரூ 50 ஆயிரம் மானியத்தை வழங்குகிறது. இந்த மானியத்தை யார் யார் எப்படி பெறலாம் என்பதை பார்க்கலாம். தமிழகத்தில் மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ 1000 வழங்கி வரும் நிலையில் இந்த மானியத் தொகையும் பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு வீட்டில் ஒரு பெண் படித்தால் அந்த ஊரே படித்தது போல் என்பார்கள். அது போல் எல்லா நாடுகளிலும் பெண்கள் வளர்ச்சி, முன்னேற்றம் என்பது பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் முதல்முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்கள் தங்களுக்கு தெரிந்த தொழில்களை வட்டியில்லா எளிய தவணை முறையில் செலுத்தும் வகையில் அரசு உதவி வருகிறது.

அது போல் தாலிக்கு தங்கம் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், புதுமை பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை என வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பெண்கள் சிறு தொழில் செய்ய உதவி செய்யும் வகையில் ரூ 50 ஆயிரம் மானியம் வழங்கும் புதிய திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த துறை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவையில் சமூக நலத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் முக்கியமாக 200 பயனாளிகளுக்கு தலா ரூ 50 ஆயிரம் வழங்க ரூ.1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு, நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவை கடைகள் போன்ற சுய தொழில் செய்ய உதவி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சமூக நல ஆணையர், ஆதரவற்ற மகளிர் நலவாரிய வங்கிக்கணக்கில் ரூ.1.61 கோடி இருப்பதாகவும், இதில் மானியம் வழங்க தேவைப்படும் ரூ.1 கோடியை செலவு செய்ய அனுமதியளிக்க கோரிய நிலையில், தமிழக அரசு ரூ.1 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த மானியத்தை பெற, வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியத்தை பெற 25 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். இந்த மானியத்தை பெற ஒருமுறை மட்டுமே தகுதியுடையவர் ஆவார். கைம்பெண்கள், நலிவுற்றவர், ஆதரவற்றவர் உள்ளிட்டோருக்கு மட்டுமே கிடைக்கும். இந்த மானியத்தை பெற பிறப்பு சான்று, வருவாய் சான்று , குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வசிப்பிட முகவரிக்கான சான்று உள்ளிட்டவை தேவைப்படும்.












Click it and Unblock the Notifications