மூன்றாவது முறை எம்.எல்.ஏ.. முதல்முறை அமைச்சர்! "ஸ்டாலினின் நம்பிக்கை”.. டிஆர்பி ராஜா பற்றி தெரியுமா?
சென்னை : தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இணைகிறார் மன்னார்குடி எம்.எல்.ஏவான டி.ஆர்.பி.ராஜா. மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜா, திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள நிலையில், முதல் முறையாக தற்போது கேபினட்டில் இணைகிறார்.
திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கடந்த மே 7 ஆம் தேதி அடியெடுத்து வைத்தது. இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கும் டி.ஆர்.பி.ராஜா வரும் மே 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அவர் பதவியேற்ற பிறகு அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா குறித்த தகவல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
டி.ஆர்.பி.ராஜா, திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு - ரேணுகாதேவி தம்பதியரின் மகன். 1976 ஜூலை மாதம் 12ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் தளிக்கோட்டையில் பிறந்தவர். டிஆர்பி ராஜா படித்தது சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை உளவியல்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டிஆர்பி ராஜா. தற்போது மாநில திட்டக்குழுவின் உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், புதிய அமைச்சரவை மாற்றத்தில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு இடம் கிடைத்துள்ளது.
2021ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர்கள் அணியின் முதல் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டார். திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அப்பதவியில் இருந்து விலகிய நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார் டிஆர்பி ராஜா.
திமிக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகப் பொறுப்பேற்றது முதல் ஐடி விங் 2.0 என்ற பெயரில் பல்வேறு புதிய முன்னெடுப்புகளைச் செய்தார் டிஆர்பி ராஜா. செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாகக் கொண்டாடி, ட்விட்டர் ஸ்பேசசில் தினம் ஒரு தலைவர் உரையாடல் என சமூக வலைதளத்தில் திமுகவின் இருப்பை வலுப்படுத்தினார்.
பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி, திமுக தலைவரும் - தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா, தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். டி.ஆர்.பி ராஜா அமைச்சராவதன் மூலம் டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கிறது.












Click it and Unblock the Notifications