ஸ்டாலினும் எடப்பாடியும் சேர்ந்து ஓபிஎஸ்க்கு செய்த தரமான சம்பவம்.. 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா'
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடியும் சேர்ந்து சட்டசபையில் ஓபிஎஸ்க்கு செய்த தரமான சம்பவம் தான் பெரிய பேசுபொருளாகி உள்ளது. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற வார்த்தைகள் தான் இதற்கு மிகச்சரியாக பொருந்தும்.
அதிமுக 2021 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்வு செய்யப்பட்டனர். இதனிடையே அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சினை காரணமாக துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார்.

புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவராக மதுரையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் அ.தி.மு.க. சார்பில் கடிதம் கடந்த 2012ம் ஆண்டு இறுதியில் கொடுக்கப்பட்டது.
ஆனால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து வந்தார். இதுகுறித்து சட்டசபை கூடும் போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி, இருக்கையை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் கோரிக்கை பரிசீலனையில் மட்டுமே இருந்தது.. எடப்பாடியின் கோரிக்கை பல மாதங்களாக நிறைவேறாமல் இருந்தது.
இதற்கிடையே சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து சபாநாயகர் அப்பாவுவிடம் நேற்று எழுந்த இந்த கோரிக்கையை மீண்டும் வைத்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக 4 முறை கடிதம் கொடுத்திருக்கிறோம். எங்கள் கட்சி உறுப்பினர்களால் ஆர்.பி.உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதை நிறைவேற்றித் தரவேண்டும்" என்றார்.
அந்த நேரத்தில் உடனே எழுந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஏற்கனவே, இதே அவையில் முன்னாள் சபாநாயகர் தனபால் தந்த தீர்ப்பு இருக்கிறது. எனவே, எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று வேண்டுகோள் வைத்தார்.
அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, "நிச்சயம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதல்வர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் உறுதியளித்தார். இந்நிலையில், அதிமுக துணை எதிர்கட்சி தலைவராக இருந்த ஒ.பன்னீர்செல்வம், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், சட்டப்பேரவையில், அவரின் இருக்கை 206-ல் இருந்து 207-ஆக மாற்றப்பட்டுள்ளது. புதிய எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு 206 இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் நீக்கப்பட்ட பிறகு அவரது சரிவு தொடங்கியது. நீதிமன்ற தீர்ப்புகள் காரணமாக அதிமுக கரை வேட்டியை கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை இழந்த போதிலும், எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக அவரது இருக்கையின் அருகிலேயே சட்டசபையில் அமர்ந்து வந்தார். இப்போது திமுகவும் அதிமுகவும் சேர்ந்து அதற்கு முடிவு கட்டி இருக்கின்றன. அண்மைக்காலமாக பாஜக ஆதரவாளர் போல் பேசி வருவதாக அதிமுக கடுமையாக குற்றம்சாட்டி வந்த நிலையில், அவரது இருக்கையை மாற்ற திமுக உதவியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பது போல் ஓ பன்னீர்செல்வத்திற்கு இன்று சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications