அண்ணே அண்ணேனு கூட இருந்தே குழி பறிப்பு! ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல டைம் குறித்து கொடுத்தது யார் தெரியுமா?
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங், இந்த நேரத்தில் இந்த இடத்திற்கு துப்பாக்கி இல்லாமலும் அசால்ட்டாகவும் இருப்பார் என்ற தகவலை கூறியது யார் தெரியுமா? கூடவே இருந்து குழி பறித்துவிட்டதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வேணுகோபால் பெருமாள் தெருவில் கட்டி வரும் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேரை கைது செய்தனர்.
இவர்களில் ரவுடி திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ஆயுதங்களை போலீஸாருக்கு காட்ட சென்ற போது அவர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். அப்போது போலீஸார் அவரை என்கவுன்ட்டர் செய்தனர். இதில் அவர் இறந்தார். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அடுத்தடுத்து கைது நடவடிக்கையாக நடந்து வருகிறது.
திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியாக இருந்த மலர்க்கொடி, அவரது உதவியாளர் ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவின் அஞ்சலைக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள். தலைமறைவாக இருக்கும் அஞ்சலையை பிடித்து விசாரிக்க போலீஸார் முயற்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களில் திருமலை என்பவருக்கும் இந்த கொலையில் முக்கிய பங்கு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதாவது ஆம்ஸ்ட்ராங்கிடம் ரூ 20 லட்சம் மதிப்பிலான துப்பாக்கி இருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி லைசன்ஸுடன் துப்பாக்கியை அவர் வைத்திருந்தார். அவர் எங்கு போனாலும் அந்த துப்பாக்கியுடன்தான் செல்வார். கூடவே அவரை நெருங்கவே முடியாத அளவுக்கு ஆதரவாளர்கள் புடைச்சூழத்தான் செல்வார். ஆனால் வீட்டுக்கு பக்கம் இருக்கும் கடைகள், தான் புதிதாக கட்டும் வீடு ஆகியவற்றுக்கு துப்பாக்கி இல்லாமல்தான் செல்வாராம்.
மேலும் பெரம்பூர் என்பது ஆம்ஸ்ட்ராங்கின் கோட்டையாகவே இருந்தது என்பதால் அவர் அதிக நம்பிக்கையில் துப்பாக்கி இல்லாமலேயே கேஷுவலாக வெளியே செல்வாராம். இவையெல்லாம் எப்படியும் கூட இருக்கும் நெருக்கமானவர்களுக்குத்தான் தெரியும். அப்படி தெரிந்துதான் சரியான நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்துள்ளனர் என போலீஸார் சந்தேகித்தனர்.
அப்போதுதான் திருமலை குறித்த விவரங்கள் அவர்களுக்கு தெரியவந்தது. திருமலை என்பவர் பெரம்பூரை சேர்ந்தவர். அவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். அவர் ஆம்ஸ்ட்ராங்குடன் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் அவர் மீது திருவிக நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறியப்படுகிறார். இவர் மீது இரு கொலை வழக்குகளும் 7 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இவருக்கு வயது 45 ஆகும். இவர் ஆம்ஸ்ட்ராங்கை போல் ஆற்காடு சுரேஷுக்கும் நண்பராம். ஆனால் ஆம்ஸ்ட்ராங்கை விட திக் பிரென்ட் ஆற்காடு சுரேஷ்தானாம். தனது நண்பர் ஆற்காடு சுரேஷ் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் சம்பந்தம் இருக்கலாம் என திருமலையும் கருதி வந்ததாக தெரிகிறது. அதனால் கடந்த ஒரு மாதமாக ஆட்டோவில் ஆம்ஸ்ட்ராங் இருக்கும் பகுதிக்கு சென்று அவருடன் பழகியபடியே நோட்டமிட்டுள்ளார்.
அப்போதுதான் ஆம்ஸ்ட்ராங் இந்த நேரத்திற்கு புது கட்டடத்திற்கு வருவார், அதுவும் துப்பாக்கி இல்லாமல் வருவார் போன்ற தகவல்களை எல்லாம் கூலிப்படைக்கு தகவல் தெரிவித்துள்ளார் என போலீஸார் விசாரணையில் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications