"டாப் 2 சீமான்?".. அதைவிடுங்க.. "முஸ்லிம் + முதலியார்" ஓட்டு.. யாருக்கோ வயிற்றில் புளியை கரைக்குதே
திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பெற போவது சீமானா? அதிமுகவா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: வரும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த அளவுக்கு வாக்கு வங்கியை தக்க வைக்க போகிறது? திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை அள்ள போவது யார்? என்ற பல ஆர்வம் மிகுந்த கேள்விகள் களத்தில் உலா வருகின்றன.
கடந்த 2021 தேர்தலில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றன
இதுவரை தனித்து தேர்தல்களை சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் காங்கிரசின் தோல்விக்கு காரணமாக இருந்துள்ளதை மறுக்க முடியாது. கடந்த முறை, இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பிடித்திருந்தது நாம் தமிழர் கட்சி..

2வது இடம்
பாஜகவை போலவே, காங்கிரஸையும் பொதுவான அரசியல் எதிரியாக கருதிவரும் நாம் தமிழர் கட்சி, இந்த முறை ஈரோடு தேர்தலில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது.. அத்துடன் சீமானின் பேச்சுக்களும் வீர்யம் பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி அள்ள போக்கும் வாக்குகள் யாருடையதாக இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. கொஞ்சம் முயற்சி செய்தால், சீமான் இந்த முறை தேர்தலில் 2வது இடத்துக்கே வந்துவிடக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்ல தொடங்கிவிட்டனர். அப்படியானால் இதற்கு என்ன காரணம்? சீமானுக்கு சாதகமாக களத்தில் உள்ள சூழ்நிலைகள் என்னென்ன என்பதையும் ஆராய வேண்டி உள்ளது.

சிங்கிள் சிங்கம்
சீமானை பொறுத்தவரை, வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல், எந்த ஒரு தேர்தலையும் புறக்கணிக்கவும் செய்யாமல், அதேசமயம் யாருடனும் கூட்டணிக்கும் இணங்காமல், "சிங்கிள் சிங்கமாக" களவாடி வருவது பலராலும் கவனிக்கப்பட்டு வரும் விஷயம்.. தமிழ் தேசியத்தை முன்வைப்பது ஒருபக்கம், திராவிட அரசியல் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைப்பது மறுபக்கம் என இரு துருவங்களில் அவரது அரசியல் விடாமல் பயணப்பட்டு வருகிறது.. பாஜகவின் பி டீம் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருந்து வரும் சீமான், இந்த முறைதான் வெளிப்படையாக தன்னுடைய பேச்சில் அதற்கு பதிலையும் சொல்லி உள்ளார்.

முஸ்லிம் வேஷம்
நேற்றுமுன்தினம் சீமான் பேசும்போது, எப்ப பார்த்தாலும், "சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும், சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும்"-ன்னு ஒவ்வொரு முறையும் இவங்க சொல்லிட்டே இருக்காங்க.. பிஜேபிக்கு போடாதே என்று தைரியமாக சொல்ல முடியாத நீங்கள், சீமானுக்கு போட்டால் பிஜேபி வந்துடும் என்று சொல்வது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? எனக்கு ஓட்டுப்போட்டால், நான்தானே வருவேன்? என் வீட்டில் ஸ்விட்ச் போட்டால், என் வீட்டிலதானே விளக்கு எரியும்? உன் வீட்லயா எரியும்? ஒரு குடையை உங்களால கருப்பாக மோடிக்கு முன்னாடி பிடிக்க முடிந்ததா? எதிர்க்கட்சியாக இருந்தால் "கோ பேக்"? ஆளும் கட்சியாக இருந்தால் "வெல்கம்"??" என்று கேள்வியும் எழுப்பியிருந்ததை பாஜக உள்ளிட்ட கட்சிகள் கவனிக்காமல் இல்லை.

மாமன் மச்சான்
அதனாலேயே என்னவோ, இஸ்லாமியர்களுக்கு ஆதரவான பேச்சு ஈரோடு பிரச்சாரத்தில் சீமானிடம் அதிகமாக கேட்க முடிந்தது.. "எப்பவுமே என் மாமன், மைத்துனர் எல்லாம் என்னை நோன்பு கஞ்சிய குடிக்க கூப்பிடுவாங்க.. ஆனால், நான் போகமாட்டேன்.. வரமாட்டேன்னு சொல்லிடுவேன்.. "ஒருநாள் முஸ்லிம் வேலை"யை என்னால பார்க்க முடியாது.. அந்த வேஷத்தை என்னால போட முடியாது.. ஏன் என்றால், "நான் உன் உணவுக்கானவன் அல்ல.. உன் உணர்வுக்கானவன்.. உன் உரிமைக்கானவன்.. உன் உயிரானவன்.. ஒவ்வொரு கிறிஸ்தவர், இஸ்லாமியர் வீட்டுக்குள்ளேயும் போயி, "சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும்"ன்னு இப்படியே இவங்க சொல்லிட்டு இருக்காங்க" என்று குமுறி வெடித்ததையும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கவனிக்காமல் இல்லை.

முதலியார் பேச்சு
இதன்காரணமாகவே, சீமானுக்கு பாஜக அதிருப்தி ஓட்டுக்கள் + சிறுபான்மையினர் ஓட்டுக்கள் + திமுகவின் அதிருப்தி ஓட்டுக்கள் + இளைஞர்களின் ஓட்டுக்கள் என நாலாபக்கமும் சாதகமான ஓட்டுக்கள் விழ வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.. வழக்கமாக, சாதிய ஓட்டுக்களை குறி வைத்து, எப்போதுமே சீமான் அரசியல் செய்வதில்லை .. ஆனால், இந்த முறை, ஈரோட்டில் முதலியார் சமூக வேட்பாளரை களமிறக்கி உள்ளதுடன், முதலியார் சமூக பெருமைகளையும் பேசியது, சீமானின் புதுவித அரசியலாக பார்க்கப்பட்டது.. சீமானின் முதலியார் சமூக பேச்சுக்கு கிடைத்த ஆதரவை பார்த்து இது எதிர்க்கட்சிகளுக்கு லேசாக வயிற்றில் புளியையும் கரைத்துவிட்டுள்ளது.

ஸ்வீட்பாக்ஸ்
அதேசமயம், ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள், அதிமுகவிற்கு முழுமையாக செல்லாமல், சீமான் கட்சிக்கும் தமிழர் கட்சிக்கும் பிரிந்து செல்வதை திமுக கூட்டணிக்கு சாதகமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. திமுகவுக்கு மாற்று என்று பாஜக சொல்கிறது, அதிமுகவும் சொல்கிறது, என்றாலும், இதையே சீமானும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.. இரு திராவிட கட்சிகளும் தங்களின் பிரச்சாரங்களையும், வியூகங்களையும், முன்னெடுத்து வருவதுடன், ஸ்வீட்பாக்ஸ் உள்ளிட்ட இதர விஷயங்களில் கவனம் செலுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறது.

சீமான் தம்பிகள்
ஆனால், சீமானின் தம்பிகளோ, சாலை வசதி, குடிநீர் வசதி, டாஸ்மாக் அகற்றம், பெண்கள் பாதுகாப்பு போன்ற மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய விஷயங்களை கையில் எடுத்து, பிரச்சாம் செய்து, எளிமையாக ஓட்டுக்களை கேட்டு வருகிறார்கள்.. எப்போதும் இல்லாத அளவுக்கு, இளைஞர்கள், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் வரவேற்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிகிறது.. எனினும், இதெல்லாம் வாக்குகளாக மாறுமா? என்பதுதான் தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும், தங்களுடைய அதிருப்தி ஓட்டுக்கள் அதிமுகவுக்கு மட்டுமே போகாமல், சீமானுக்கும் செல்ல உள்ளது, திமுகவுக்கு ஒருவித நிம்மதி உணர்வை தந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications