"அதானே சொல்றேன்".. மீண்டும் முளைத்த முடிச்சு.. குழம்பும் "கூட்டணி".. எடப்பாடி பேச்சுக்கு காரணம் இதுவா
சென்னை: அதிமுக - பாஜக இடையே கூட்டணி குழப்பங்கள் நிலவிவரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தவருக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதையடுத்து, கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் எடப்பாடிக்கு குவிந்து வருகிறது.
தற்போது, எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. பொதுச்செயலாளராக பதவியேற்ற தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றியையும் அதில் தெரிவித்து கொண்டுள்ளார்..

ஹேப்பி மகிழ்ச்சி
அந்த அறிக்கையில், "அதிமுக பொதுச்செயலாளராக என்னை, ஏகோபித்த ஆதரவோடு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ள கழகத் தொண்டர்கள், கிளை கழகச் செயலாளர், நகர, பேரூராட்சி வார்டு கழக செயலாளர்கள், மாநகராட்சி வட்டக் கழக செயலாளர்கள் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். சிறந்த முறையில் கழகத்தை வழிநடத்தி மீண்டும் அதிமுக ஆட்சி மலர்வதற்கு இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன் என்ற உறுதியை அளிக்கிறேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

சீனியர்ஸ்
இதுஒருபக்கம் இருந்தாலும், அதிமுக - பாஜக கூட்டணி இடையே சலசலப்புகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன.. அதிலும், இரு கட்சி தலைமைகளிடம் அதிருப்திகள் நிலவுவதாக தெரிகிறது. அதனால்தான், அதிமுகவுடனான கூட்டணி தேவையற்றது... தமிழகத்தில் நாம் வளர வேண்டுமெனில் பாஜக தனித்து நிற்க வேண்டுமென சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வந்தார்.. அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி என்றால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக பணியாற்றுவேன் என்றும் கூறியிருந்தார்.. இதையடுத்து, டெல்லி சென்று மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார் அண்ணாமலை..

ஸ்ட்டிராங்
ஆனால், அவரது கருத்தை டெல்லி மேலிடம் ஏற்றுக்கொள்ளாமல் அண்ணாமலையைச் சமாதானப்படுத்தி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த வாரம் டெல்லியில் ஒரு தனியார் டிவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி தந்திருந்தார். அதில், "தமிழகத்தில் பாஜகவின் கட்டமைப்புகள் வலுவின்றி உள்ளது அதனைச் சரிசெய்வதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறோம். எங்கெல்லாம் பாஜக வலுக்குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் எங்கள் கூட்டணி கைகொடுக்கும் என்பதால் அதிமுகவுடனான கூட்டணியில் தொடர்கிறோம்" என்று கூறியிருந்தார்..

முருகன் கூட்டணி
3 நாட்களுக்கு முன்பு சட்டசபை வளாகத்தில், செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி குறித்து அமித்ஷா இவ்வாறு சொல்லியுள்ளாரே? என்று கேட்டதற்கு, இதைதான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம், நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்.. அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதையடுத்து, அதிமுக - பாஜக இடையே கூட்டணி தொடர்பாக நிலவி வந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவே பார்க்கப்பட்டது. போதாக்குறைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகனும், பாஜக - அதிமுக கூட்டணியை உறுதிசெய்திருந்தார்..

முன்னுரை + முடிவுரை
இதையடுத்து, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "அதிமுகவுடனான கூட்டணி இறுதி, உறுதி என இப்போது கூற முடியாது" என்று கூறியிருந்தது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.. "அகில இந்திய தலைவர்கள் நன்றாகவே யோசித்துவிட்டுதான் கூட்டணி குறித்து முடிவெடுக்கிறார்கள். மாநில தலைவராக என்னுடைய கருத்தை அமித்ஷாவிடம் தெரிவித்திருக்கிறேன். அவர் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று சொன்னாரே தவிர, கூட்டணியை உறுதி செய்யவில்லை.. தேர்தலுக்கு இன்னும 9 மாதங்கள் இருக்கும்போது, கூட்டணி குறித்து முன்னுரையும், முடிவுரையும் எழுத முடியாது. தொகுதி பங்கீடு முடிந்தால்தான், கூட்டணி கட்சி உறுதியாகிவிட்டது என்று சொல்ல முடியும் என்றார்.

பேச்சுவார்த்தை
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைவர்கள் முடிவு செய்வார்கள். மத்தியில் இருப்பவர்கள் தான் கூட்டணியை உறுதி செய்வார்கள். மாநிலத்தில் இருப்பவர்கள் கிடையாது.. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டவர் தான் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக பாஜக தேசிய தலைவர்கள் சொல்லிவிட்டனர். அதிமுகவில் இருந்து விலகிய ஒருசிலரை தவிர அனைவரும் மறுபடியும் இணைய வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று கூறியுள்ளார்.

குழப்ப முடிச்சு
இதற்கு நடுவில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர்கள் தான் முடிவு செய்யுமே தவிர மாநில தலைமை அல்ல என்றும் கூட்டணி தொடர்பாக கருத்து சொல்வது மாநில தலைவரின் விருப்பம் என்றும் கூறியிருக்கிறார். அதாவது, அண்ணாமலையின் கருத்துக்கு பதில் கூறும்விதமாகவே, எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள்தான் முடிவெடுப்பார்கள், மாநில நிர்வாகிகள் யாரும் முடிவெடுக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளதாகவே கருதப்படுகிறது... இப்படி. அடுத்தடுத்த நிகழ்வுகள், அதிமுக - பாஜக என இரு கட்சிகளிலும் பரபரப்புகள் சூழ்ந்து காணப்படுகின்றன.












Click it and Unblock the Notifications