உங்கள் வாகனங்களை நாய்கள் துரத்துவது ஏன் தெரியுமா?.. தெரிந்து கொள்ளலாம் வாங்க
சென்னை: இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நாய்கள் துரத்துவதற்கான காரணம் ஏன் என்று பலருக்கும் தெரியாது. நிபுணர்கள் கூறுவது என்ன என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக நாய்கள் என்றாலே மக்களுடன் மிகவும் அன்பாகவும், நட்பாகவும் பழகக்கூடிய ஒன்றாகும். வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என அனைத்து நபர்களிடம் பாசமாக பழகக்கூடிய தன்மை கொண்டது. சோகம், மகிழ்ச்சி என்று நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு வீட்டு விலங்கு என்று சொல்லலாம். ஒரு நேரம் பிஸ்கட் அல்லது சாப்பாடு போட்டால் கூட நன்றி உணர்வோடு நம் வீட்டுக்கு முன் அமர்ந்து காவல் காக்கும் நன்றி உணர்வுமிக்க ஜீவன்.

இது ஒருபுறமிருக்க சில நேரங்களில் இந்த நாய்களே நமக்கு எமனாகவும் மாறிவிடும் என்று சொல்லலாம். நாய் குறுக்கே வந்ததால் வாகன விபத்து, நாய் துரத்தியதால் வாகன விபத்து என்பதையும் நாம் அதிகளவில் பார்த்திருப்போம். சில நேரங்களில் வாகனங்களின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நாய்கள் துரத்துவதை நாம் பார்த்திருப்போம். கார்கள் பின்னால் ஓடுவதற்கு தங்களுடைய முழு பலத்தையும் நாய்கள் பயன்படுத்துகின்றன.
நாய்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் துரத்துவதற்கான காரணம் என்ன என்று தெரியுமா வாங்க விரிவாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நாய்கள் மனிதர்களுடன் நட்புணர்வு பேணும் ஜீவன்தான். கார்களை, வாகனங்களை துரத்தும்போது நாய்கள் உங்களைத் துரத்துவதாக எண்ணுகின்றனர். ஆனால், அப்படியில்லை என்கின்றனர் நிபுணர்கள். நாய்கள் பொதுவாகவே மோப்ப சக்தி அதிகமாக கொண்டவை
சில நேரங்களில் உங்களின் வாகனங்களின் டயர்களில் நாய்கள் சிறுநீர் கழிப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த சிறுநீரின் வாசனை டயரில் இருப்பதால், நீங்கள் வேறு பகுதிகளில் வண்டிகளில் செல்லும்போது அந்த வாசனையை மற்ற நாய்கள் விரைவாக கண்டறிந்து கொள்கின்றன. இந்த வாசனையை மோப்பம் பிடித்துதான் நம்முடைய இடத்திற்கு வேறு நாய்கள் வருகிறது என்ற எச்சரிக்கை உணர்வால்தான் இருசக்கர வாகனம், கார்களுக்குப் பின்னால் நாய்கள் துரத்துகின்றன.
வேறு பகுதியைச் சேர்ந்த நாய்கள் தங்களுடைய பகுதிகளுக்கு வந்தாலே போதும் அந்த தெருவைச் சேர்ந்த நாய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அதனை குரைத்து விரட்டிவிடும். ஒவ்வொரு நாய்களுமே தங்களுக்கென்று தனி பகுதியை வைத்துக் கொள்ள விரும்புகின்றன. பிற பகுதியைச் சேர்ந்த நாய்கள் தங்களுடைய பகுதிகளுக்கு வருவதை ஒருபோதும் நாய்கள் விரும்புவதில்லை. இதனால்தான் மற்ற நாய்களைக் கண்டாலே பிற நாய்கள் ஒன்று கூடி குரைக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
உங்களுடைய கார், இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்லும்போது டயரில் இருந்து வரும் மற்றொரு நாயின் வாசனை வீசும்போது தங்கள் பகுதிக்கு புதிதாக வேறொரு நாய் வருவதாக நினைக்கின்றன. உங்கள் வாகனம் கடக்கும்போது வாசனை வந்தவுடன் மற்ற நாய்கள் தாக்க தயாராகி துரத்த ஆரம்பிக்கின்றன. இதைப் பார்த்து உங்களை தாக்க நாய்கள் துரத்துவதாக நீங்கள் எண்ணுகின்றனர்.
நாய்கள் துரத்தும் சமயங்களில் பலர் அச்சமடைந்து வாகனங்களை வேகமாக இயக்கத் தொடங்கும்போது எதிர்பாராத விதமாக சாலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன. நாய்கள் சிறுநீர் கழிப்பது நாய்கள் துரத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும், சில நேரங்களில் வாகனங்கள் அதிவேகமாக சாலையில் செல்வது, வித்தியாசமான சப்தம் மிகுந்த ஒலிகளை எழுப்புவதும் நாய்கள் துரத்துவதற்கான காரணமாகும். நாய்கள் வேட்டையாடும் குணம் கொண்டவை என்பதால் வாகனங்களின் இயக்கத்தை இரைகள் ஓடுவதுபோல நினைத்தும் சில நேரங்களில் துரத்துகின்றன.












Click it and Unblock the Notifications