"அதிமுக ஒருங்கிணைப்பாளர்" என படித்த வைத்திலிங்கம்.. உடனே தடுத்து நிறுத்திய ஓபிஎஸ்.. என்னாச்சு
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் என வைத்திலிங்கம் பேசத் தொடங்கிய போது பக்கத்தில் இருந்த ஓபிஎஸ் தடுத்து அதையெல்லாம் படிக்க வேண்டாம் என்றார்.
ஓபிஎஸ் எப்போது பேசினாலும் நான்தான் ஒருங்கிணைப்பாளர் என கூறி வந்த நிலையில் தற்போது அது போல் கூற வேண்டாம் என அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. ஒற்றைத் தலைமைக்கான யுத்தத்தில் இந்த பிரிவு நடந்துள்ளது.

அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக கழகத்தின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ் பல முறை நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிய நிலையில் அவருக்கு தொடர்ந்து தோல்வியே கிடைத்தது.
பொருளாளர் அந்தஸ்து, அதிமுக அலுவலகத்தின் மீதான உரிமை உள்ளிட்டவை அனைத்துமே எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாகவே சென்றன. இந்த நிலையில் ஓபிஎஸ் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் மதுரையில் பொதுக் கூட்டம் நடத்துகிறார்.
இந்த பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் தனது செல்வாக்கை நிரூபிப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை ஓபிஎஸ், வைத்திலிங்கம், பண்ருட்டி ராமசந்திரன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் விசாரணை தாமதமாகி வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகளாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது திமுக மீது கோபத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விசாரணை மாடங்களும் , விசாரிக்கப்படும் அமைப்புகள் மாறுகிறதே தவிர இந்த வழக்கின் சூத்திரதாரி யார் என்பதும் இந்தக் குற்றத்தை முன்னின்று நடத்திய கொடூரன் யார் என்கிற முடிச்சும் இன்று வரை அவிழ்க்கப்படவில்லை என்றார்.

இந்த பிரஸ்மீட்டில் வைத்திலிங்கம் பேசுகையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் என தொடங்கினார். உடனே பக்கத்தில் இருந்த ஓபிஎஸ் அவரை தடுத்து நிறுத்தி அதையெல்லாம் படிக்க வேண்டாம் என கூறிவிட்டார். இதையடுத்து வைத்திலிங்கமும் அதை விட்டுவிட்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மரியாதைக்குரிய அண்ணன் ஓபிஎஸ் என பேச்சை தொடர்ந்தார்.
கட்சியை விட்டு யாரை நீக்குவதாக இருந்தாலும் அதில் எடப்பாடிக்கு உரிமையில்லை என்றும் நான்தான் ஒருங்கிணைப்பாளர் என்றும் எப்போதும் கூறி வரும் ஓபிஎஸ் இன்று திடீரென அந்த வார்த்தையை படிக்க வேண்டாம் என கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் பிரஸ் மீட்டை சந்தித்துக் கொண்டிருக்கும்போதே அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications