பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம்.. நிறுத்தி வைத்த போராட்டக் குழு.. முக்கிய அறிவிப்பு
சென்னை: காஞ்சிபுரத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து சுமார் 70 கிமீ தொலைவிலும் உள்ள பரந்தூர் பகுதியில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் சுமார் 2,172.72 ஹெக்டேர் பரப்பளவில் அமைய உள்ளது. இது மீனம்பாக்கத்தில் உள்ள தற்போதைய விமான நிலையத்திலிருந்து சுமார் 42 கிமீ தொலைவில் அமைய உள்ளது. இதற்கு எதிராக போராடி வந்த போராட்ட குழுவினர் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கிய பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 20 கிராமங்களை உள்ளடக்கிய 5,476 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதில் பாதிக்கப்படக்கூடிய கிராம மக்கள், அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஏகனாபுரம் கிராமத்தில் 1,019 நாட்களாக விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் நேற்று வரை நடந்தது.

இந்தநிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்பதற்றம் ஏற்பட்டிருப்பதால். ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்று வந்த பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு தொடர் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கூறி போராட்டக் குழுவினர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
போராட்டக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்கள் ஜனநாயக மாண்பை காக்கும் வகையில் அறவழியில் 1,019 நாட்களாக தொடர்ந்து போராடி வந்தோம். இப்போது நம்முடைய தாய்நாடு இந்தியா, பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
தாய் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமைதியான சூழ்நிலை திரும்பும்போது பரந்தூர் புதிய விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டம் மீண்டும் அதே எழுச்சியுடன் தொடங்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications