சென்னை கொடுங்கையூர் பெண் மர்ம சாவில் ட்விஸ்ட்! மதுவில் தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற மருத்துவர் கைது
சென்னை: சென்னை கொடுங்கையூர் இளம்பெண் நித்யா மரணத்தில் திடீர் ட்விஸ்ட்டாக அவருக்கு மதுவில் தூக்க மாத்திரை கொடுத்து கொன்றதாக அவருடைய முன்னாள் லிவ் இன் பார்ட்னர் மருத்துவர் சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த பாஸ்கர்- வரலட்சுமியின் மகள் நித்யஸ்ரீ. இவருக்கு 26 வயது. இவர் சென்னை அம்பத்தூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நித்யாவின் பெற்றோர் சென்னையில் இருந்தாலும் அவர்களுடன் நித்யா தங்கவில்லை.
அதற்கு பதிலாக கொடுங்கையூரில் வாடகைக்கு வீட்டை எடுத்து தனியாக வசித்து வந்தாராம். இந்த நிலையில் நித்யாவுக்கு பாலமுருகன் என்பவருடன் காதல் ஏற்பட்டதாம். பாலமுருகன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு வேலை தேடி வருகிறாராம்.
பாலமுருகன்
இந்த நிலையில் பாலமுருகனை தனது வீட்டிலேயே நித்யஸ்ரீ தங்க வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இருவரும் லிவிங் டு கெதர் முறையில் இருந்தனராம். இந்த நிலையில் நேற்று முன் தினம் இவரை பார்க்க பெற்றோர் வருவதாக பாலமுருகனை வெளியே தங்கிக் கொள்ளுமாறு நித்யா சொன்னாராம்.
நித்யா வீட்டில்
இதனால் பாலமுருகன் அன்று இரவு மட்டும் தன் வீட்டில் தங்கியிருந்துவிட்டு நேற்று காலை நித்யா வீட்டிற்கு சென்றாராம். அங்கு கதவு திறந்து கிடந்தது. உள்ளே படுக்கையில் மயங்கிய நிலையில் நித்யா கிடந்தாராம். படுக்கை அறையில் தூக்க மாத்திரைகள் கிடந்தன.
போலீஸுக்கு தகவல்
இதனால் பதறிய பாலமுருகன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின்படி கொடுங்கையூர் போலீஸார் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பரிசோதித்து பார்த்த போது நித்யா ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
பிரேத பரிசோதனை
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலமுருகனிடம் நடத்திய விசாரணையில், பிப்ரவரி 26 ஆம் தேதி அம்பத்தூரில் நித்யா தங்கியிருந்த போது வீட்டில் தாலி கட்டி ஒன்றாக வசித்ததாகவும் வேலைக்கு செல்லும் போது தாலியை கழற்றி வைத்துவிட்டு பணிக்குச் சென்றதாகவும் வீட்டின் லாக்கரில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் காணவில்லை என்றும் பாலமுருகன் தெரிவித்திருந்தார்.
நித்யா கழுத்தில் இருந்த 25 பவுன் நகைகள்
இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரில், நித்யாவின் கழுத்தில் 25 பவுன் நகைகள் இருந்ததாகவும் அதை பாலமுருகன் திருடிவிட்டு மகளை கொன்றிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர். இது குறித்து கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சென்னை கொடுங்கையூரில் இளம் பெண் நித்யாவுக்கு, மருத்துவர் சந்தோஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது.
பணம், நகை
சந்தோஷ்குமாரிடம் பணம், நகைகளை நித்யா மிரட்டி வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பாலமுருகன் இல்லாத நேரத்தில் சந்தோஷ்குமார் நித்யாவின் வீட்டிற்கு வந்தாராம். அங்கு சந்தோஷ்குமார் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது.
குளிர்பானம்
அப்போது நித்யாவிடம் குளிர்பானம் என பொய் சொல்லி மதுவை கொடுத்து, அதில் நைசாக தூக்க மாத்திரையையும் சந்தோஷ்குமார் கலந்து கொடுத்து குடிக்க சொன்னதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து நித்யா மயங்கியதும் அவரை கொன்றுவிட்டு அவர் வீட்டில் இருந்த 25 பவுன் நகைகளை சந்தோஷ்குமார் திருடிச் சென்றாராம்.
நண்பர் முஜிபுர் பாஷாவும் கைது
பின்னர் அந்த நகைகளை தனது நண்பர் முஜிபுர் பாஷா என்பவர் வீட்டில் மறைத்து வைத்திருந்தாராம். இதையடுத்து சந்தோஷ்குமாரையும் முஜிபுரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தோஷ்குமாருடன் நித்யா ஏற்கெனவே லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications