மாடு முட்டிய அரும்பாக்கம் சிறுமிக்கு 4 தையல்கள்! ஐசியூவில் எப்படி இருக்கிறார்? மருத்துவர் விளக்கம்
சென்னை: பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சிறுமியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் ஹர்ஷின் பானு. இவருக்கு 9 வயதில் ஆயிஷா என்ற மகளும் 5 வயது மகனும் உள்ளனர். இவர்களை ஹர்ஷின் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு நடந்து வந்தார்.

அப்போது ஆர் பிளாக் இளங்கோ தெருவில் நடந்து சென்ற போது அங்கு நின்றுக் கொண்டிருந்த மாடு சிறுமி ஆயிஷாவை முட்டி தள்ளியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹர்ஷின் தனது மகளை காப்பாற்ற போராடினார். ஆனால் மாடு சிறுமியை கடுமையாக தாக்கியது.
இதை எதிர்வீட்டில் இருந்த சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் பலர் ஓடி வந்து மாட்டின் மீது கற்களை வீசியும் கட்டையை தூக்கி வீசியும் குழந்தையை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் ஒரு நிமிடத்திற்கு விடாத அந்த மாடு சிறுமியை தாக்கியது. அடிக்க போனவர்களையும் துரத்துவது போல் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிறுமிக்கு 4 தையல்கள் போடப்பட்டன. இந்த நிலையில் இது குறித்து இது தொடர்பாக சிறுமி ஆயிஷா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் சக்கரவர்த்தி கூறுகையில் மாடு முட்டியதில் காயமடைந்த குழந்தை ஆயிஷா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அதிர்ஷ்டவசமாக உடலுக்குள் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வெளிக்காயங்கள்தான் அதிகமாக இருக்கிறது. சிறுமியின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு கண்காணிப்பர். இன்று மாலையே சிறுமி ஆயிஷா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். மாடு முட்டியதால் குழந்தை அச்சத்தில் இருக்கிறார். அவருக்கு உளவியல் மருத்துவர் மூலம் கவுன்சிலிங் செய்ய போகிறோம்.
ஆயிஷா உணவு எடுத்துக் கொள்கிறார். சாதாரணமாக பெற்றோருடன் பேசி வருகிறார். எல்லாவற்றுக்கும் மேல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார். மாடு முட்டி குழந்தை காயமடைந்த நிலையில் மாட்டின் உரிமையாளர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ரூ. 2000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாடு முட்டி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications