தலைக்கு மேல "அது" வேற தொங்குதே.. மலர்ந்த "தாமரை"யில் தடுமாறுகிறதா இலை.. பணிகிறாரா எடப்பாடி பழனிசாமி?
சென்னை: 4 மாநில தேர்தல் முடிவுகளால் மீண்டும் கெத்து காட்டி கொண்டிருக்கிறது பாஜக.. இந்த அபார வெற்றியானது, பாஜகவை அவாய்ட் செய்யும் கட்சிகளுக்கு ஒரு அபாய மணி போலவே ஒலிக்க துவங்கியிருக்கிறதாம். அந்தவகையில், அதிமுக என்ன செய்ய போகிறது?
அதிமுகவை பொறுத்தவரை, எப்போதுமே பெண்கள் வாக்கு வங்கி அதிகம்.. திமுகவை பொறுத்தவரை, எப்போதுமே சிறுபான்மையினர் வாக்கு வங்கி அதிகம்..

ஆனால், இந்த முறை, பெண்கள் வாக்கும்சரி, சிறுபான்மையினர் வாக்கும்சரி, ஒருசேர திமுக பக்கம் சென்றுள்ளது, அதிமுகவுக்கான சறுக்கலாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
ரத்தத்தின் ரத்தங்கள்: ஏற்கனவே, 4 ஆக கட்சி உடைந்துள்ள நிலையில், அதிருப்திகள் பல வெடித்துள்ளன.. நிர்வாகிகள் பலர் சோர்ந்து போயுள்ளனர்.. இதில் வாக்கு வங்கியும் சரிந்து கொண்டிருப்பதை கண்டு, ரத்தத்தின் ரத்தங்கள் கலங்கி போயுள்ளனராம். அதனால்தான், பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிடுவது என்ற "ரிஸ்க்" முடிவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
"சிறுபான்மையினர் ஓட்டுக்களை மட்டுமே குறி வைத்து, இப்படி ஒரு முடிவை எடப்பாடி எடுத்திருந்தாலும், ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் ஓட்டு போட மாட்டார்கள், அதுவும் சட்டென மனம்மாறி, வரப்போகும் தேர்தலிலேயே ஓட்டுப்போட மாட்டார்கள்.. பாஜகவை கழட்டிவிடுவது என்ற முடிவில், அதிமுக தொடர்ந்து உறுதியாக இருக்குமானால், வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் வேண்டுமானால், அதிமுகவுக்கு சிறுபான்மையினர் ஓட்டு ஓரளவு கிடைக்கும்" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ஆனால், திமுகவோ, அதிமுகவின் முடிவை, கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜக விஷயத்தில் அதிமுக மீதான நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பி வருகிறது. ஆளுநரை பற்றியோ, பிரதமர் பற்றியோ, பாஜகவின் திட்டங்களை பற்றியோ, இதுவரை அதிமுகவிலிருந்து யாருமே வாய் திறக்கவில்லை.. எந்தவிதமான எதிர் கருத்துக்களையும் சொல்லவில்லை என்பதை, திமுக சுட்டிக்காட்டியே உள்ளது.
பாஜக: போதாக்குறைக்கு, அதிமுகவில் உள்ள பாஜக ஆதரவு தலைவர்களே, எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம். காரணம், பாஜகவுடனான கூட்டணி முடிவை, அவர்கள் ஏற்க மறுக்கிறார்களாம்.. அதனால், பாஜகவை கடுமையாக தாக்கி பேசவும் முடியாமல், அதிமுகவின் பாஜக ஆதரவாளர்களை கடிந்து கொள்ளவும் முடியாமல், சிறுபான்மை வாக்குகளை மொத்தமாக இழக்கவும் முடியாமல், இருதலை கொள்ளியாய் எடப்பாடி பழனிசாமி தவித்து வருவதாக சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான், இன்றைய தினம் 4 மாநில தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.. தெலுங்கானா மண்ணில் காலூன்ற எந்த காலத்திலும் வாய்ப்பில்லை என்பதைதான் இந்த முடிவு நிரூபிக்கிறது..
தெலுங்கானாவில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு, படுபரிதாபமான நிலைமையில் பாஜக இருந்தாலும், மற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜகவின் விஸ்வரூபமானது, நாட்டையை மலைக்க செய்து வருகிறது.
சமரசம்: இந்த தேர்தலின் முடிவுகள், வரப்போகும் எம்பி தேர்தலுக்கான அச்சாரமாகவும் கருதப்படுகிறது.. அத்துடன் பாஜகவின் வளர்ச்சியும், செல்வாக்கும் மேலும் அதிகரித்துள்ளதாகவும் கணக்கிடப்படுகிறது. இந்த அளவுக்கு பலம்பொருந்திய பாஜகவை, அதிமுக தரப்பும் கவனித்தபடியே உள்ளது.
அந்தவகையில், தன்னுடைய கூட்டணி முடிவில் இப்போதும் உறுதியாக இருக்குமா? அல்லது இந்த நாட்டை ஆளப்போவது மீண்டும் பாஜகதான் என்ற அச்ச உணர்வில், தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யுமா? அல்லது அதிமுகவின் பல தலைவர்களின் தலைக்கு மேல் ஏகப்பட்ட "கத்திகள்" தொங்கி கொண்டிருக்கும்போது, பாஜக அல்லாத கூட்டணி சாத்தியமா? என்பதெல்லாம் நமக்கு தெரியவில்லை.
சறுக்கல்: ஒருவேளை, கூட்டணி முறிவு என்று அறிவித்துவிட்டு, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க நேர்ந்தால், அது அதிமுகவுக்கான இன்னொரு சறுக்கலாக கருதப்படும்.. அத்துடன் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பக்கத்தன்மையையும், அதிமுக தொண்டர்களிடம் குலைத்துவிடக்கூடும்.
ஆக, சிறுபான்மையினர் வாக்கு வேண்டுமென்றால், பாஜகவை ஒதுக்கி வைத்துதான் ஆக வேண்டும் அல்லது பாஜக தயவு வேண்டுமானால், சிறுபான்மையினர் வாக்குகளை இழக்கவும் தயாராவதுடன், பலம்பொருந்திய திமுகவையும் எதிர்க்க முடியாத நிலைமையும் அதிமுகவுக்கு வந்துவிடும்..
அதுமட்டுமல்ல, பாஜகவை முழுமையாக விலக்கி வைக்கும் சூழலில், அதிமுகவிலிருந்தே சில தலைவர்கள் பாஜக பக்கம் தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. இப்படி ஒரு பேச்சு ஏற்கனவே பலமுறை வெடித்துள்ளது என்பதால், எனவே, இவர்களையும் சமாளித்து தன்பக்கம் இழுத்து கொள்ள வைக்க வேண்டியிருக்கிறது.. இவைகளில் என்ன முடிவெடுக்கபோகிறது அதிமுக? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications