கொஞ்சம் கூட யோசிக்காதீங்க.. கொஞ்ச கொஞ்சமாகக் கூட தங்கத்தை வாங்குங்க! நிபுணர்கள் கொடுத்த அட்வைஸ்!
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதித்திருக்கும் நிலையில், இந்தியாவில் துணிகள், தோல் பொருட்கள், இறால் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்யும் தொழில்முனைவோர் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் டொனால்ட் டிரம்பின் இந்த முடிவு உலக சந்தைகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் தங்க சந்தை மீது இதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை 2500 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நட்பு நாடான இந்தியாவுக்கு எதிராக வர்த்தகப் போரைத் துவக்கி இருப்பது இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தோல் பொருட்கள், இயந்திரங்கள், ஆயத்த ஆடைகள் அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் பல நகரங்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.
குறிப்பாக தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஆம்பூர் உள்ளிட்ட மண்டலங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. டிரம்ப் அரசு எப்போதும் "அமெரிக்காவுக்கு அதிக நன்மை கிடைக்க வேண்டும்" என்ற கொள்கையை முன்வைத்து வந்தது.

டொனால்ட் டிரம்ப்
அதன்படி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்த 50% வரி முடிவு, இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் வர்த்தகத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய தங்க இறக்குமதி நாடுகளில் ஒன்றாகும். அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் வரி, பொருளாதார அழுத்தம், டாலர் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நேரடியாகப் பாதிக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
அமெரிக்க வரி
டொனால்ட் டிரம்பின் 50% வரி முடிவு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு குறையும் வாய்ப்பு அதிகம். ரூபாய் மதிப்பு குறைந்தால், தங்கத்தின் விலை இந்தியாவில் தானாகவே உயரும். தற்போது ஒரு சவரன் தங்கம் ஏற்கனவே 9,405 என்ற உயர்ந்த விலையில் விற்பனையாகி வருகிறது. டிரம்ப் முடிவின் தாக்கம் தீவிரமாக இருந்தால், அடுத்த மாதங்களில் ஒரு சவரன் தங்கம் குறைந்தது 1,500 முதல் 2,500 ரூபாய் வரை கூடும் என மதிப்பிடப்படுகிறது.
தங்கம் விலை
மக்கள் இப்போது தங்கம் வாங்கலாமா? என்ற கேள்வி இயல்பாகவே எழும் நிலையில், தங்கத்தின் விலை இன்னும் உயரே செல்லும் வாய்ப்பு அதிகம். நீண்டகால முதலீட்டை நினைப்பவர்கள் தற்போது வாங்குவது நன்மை தரலாம். ஆனால் குறுகிய காலத்திற்குள் மீண்டும் விலை குறையும் என எதிர்பார்ப்பவர்கள் சிறிது காத்திருக்கலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்துள்ள 50% வரி முடிவு, இந்திய பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாது, சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
தங்கம் வாங்கலாமா?
குறிப்பாக திருமணம், விழாக்கள் போன்றவற்றிற்கு தங்கம் வாங்கும் இந்தியர்கள் விலையேற்ற சுமையைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்கின்றனர். அதே நேரத்தில் தொடர்ந்து விலை உயர்வு அடைய வாய்ப்புள்ளதால், முதலீட்டைத் தவிர்த்து குடும்பத் தேவைக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் தாமதிக்காமல் வாங்குவது பொருத்தமாக இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் தங்க விலையில் 10 முதல் 15% கூடுதல் உயர்வு ஏற்படும் என பல்வேறு சர்வதேச ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, தங்கம் வாங்க விரும்புவோர் படிப்படியாக வாங்குவதுதான் சிறந்தது.












Click it and Unblock the Notifications