இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிகிச்சை!.. டபுள் பலூன் எண்டோஸ்கோபி.. ‘கலைஞர்’ மருத்துவமனை சாதனை
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன்முறையாக அதிநவீன அதிநவீன எண்டோஸ்கோபி கருவியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அமைத்துள்ளது கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அறிவிப்பு வெளியிடப்பட்டு, 15 மாதங்களில் இம்மருத்துவமனை ரூ 230 கோடி செலவில் 1000 படுக்கைகள் வசதிகளுடன் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

இதனைக் கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத் தார். அந்த விழாவில் ஸ்டாலின் பேசும்போது, "தமிழ்நாட்டு முதலமைச்சராக மட்டுமில்லை; கலைஞரின் மகன் என்ற பூரிப்பு உணர்வோடு இதனை நான் திறந்துவைத்திருக்கிறேன்.
இந்த வளாகத்திற்கு கிங்ஸ் இன்ஸ்டிடியூட் என்று பெயர். இதுவும் பொருத்தமானதுதான். கலைஞர் என்றாலே 'கிங்'தான். அவர் வாழ்ந்த காலம் முழுவதுமே கிங் ஆகவும் கிங் மேக்கர் ஆகவும் இருந்தார். அந்த வலையில் கிங் ஆராய்ச்சி வளாகத்திற்கு இதனைவிடப் பொருத்தமான பெயரும் இருக்க முடியாது" என்றார்.

இம்மருத்துவமனையில் உள்ள 24X7 அவசர சிகிச்சைப் பிரிவில் கதிரியக்க வியல், இருதய நெஞ்சக அறுவை சிகிச்சைப் பிரிவு, இதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, குடலியல், புற்றுநோயியல், இரத்த நாளம் அறுவை சிகிச்சை, நீரிழிவியல், இரத்த அறிவியல் என 20 பிரிவுகள் தனித்தனியே இயங்கி வருகின்றன.
இந்நிலையில் வேறு எந்த மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகளிலும் இல்லாத குடல் இரைப்பை உள்நோக்கி கருவியான டபுள் பலூன் எண்டோஸ்கோபி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் சிறுகுடலில் ஏற்படும் ரத்தக்கசிவு மற்றும் அடைப்புகள் ஆகியவற்றுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும்.
குடல் மற்றும் இரைப்பை மருத்துவத்துறைத் தலைவர் டாக்டர் ராம்குமார். "தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளில் கூட இந்த டபுள் பலூன் எண்டோஸ்கோபி வசதி என்பது இல்லை. இந்த டபுள் பலூன் எண்டோஸ்கோபி சிகிச்சை வசதி கலைஞர் மருத்துவமனையிலும் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையிலும் மட்டுமே இருக்கின்றது.
இதன் மூலம் வாய் முதல் மல வாய் பகுதிவரை உள்ள 7 முதல் 8 மீட்டர் வரை உள்ள அனைத்து பாகங்களையும் இந்த 4 வகையான எண்டோஸ்கோபியை வைத்து நாம் பார்வையிட முடியும்.

மேலும் இந்தக் கருவியானது அந்தப் பகுதிகளில் உள்ள சிக்கலை மிகத்துல்லியமாக நமக்கு அடையாளம் காட்டி விடும் என்பது கூடுதல் சிறப்பு" என்கிறார்.
இதைப்போன்றே அதிநவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியும் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது குறித்து கதிரியக்கத்துறை உதவி பேராசிரியை டாக்டர் ராகவி, "வழக்கமான மூளையில் அல்லது ஸ்பைன் ஆகிய பகுதிகளில் ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கவேண்டும் என்றால், குறைந்தது 25 நிமிடங்கள் வரை நேரம் செலவாகும்.
ஆனால், இந்த அதிநவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி மூலம் 10 நிமிடத்தில் முழுமையான ஸ்கேனை செய்துவிட முடியும்.

பழைய முறையில் நாம் எடுக்கும் ஸ்கேன் அறிக்கையை நாம்தான் துல்லியமாக 'மார்க்' போட்டுக் கணிக்க வேண்டும். எந்த இடத்தில், என்ன பிரச்சினை என்பதை எண்கள் இட்டுக் கணிக்க வேண்டும்.
ஆனால், அதிநவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியில் நோயாளியின் ஸ்கேனை பதிவேற்றம் செய்துவிட்டால் போதும். அது தானாகவே எண்களை இட்டுச் சரியாகக் கணித்து, என்ன பிரச்சினை என நமக்குச் சொல்லிவிடும்" என்கிறார்.
பல லட்சம் அல்லது பல ஆயிரங்கள் செலவு செய்து செய்யப்படும் அதிநவீன சிகிச்சைகள் அனைத்தும் இந்தக் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகவும் அல்லது குறைந்த கட்டணத்துடனும் செய்யப்படுகிறது.

இந்திய அளவிலுள்ள பல மாநில அரசு மருத்துவமனைகளில் அடிப்படை சரியான வசதிகள்கூட செய்யப்படாமல் பின் தங்கிக் கிடக்கும் போது, தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு என்பது மிகச் சிறந்து விளங்குகிறது என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதும்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான திராவிட இயக்க கட்சிகளின் ஆட்சியில் இமாலய அளவுக்குத் தமிழ்நாடு அரசு மருத்துவனைத் தரம் உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு மருத்துவத்துறையில் எந்தளவுக்கு உலகநாடுகள் அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதைக் குறித்து தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம், அவரது சமூகவலைத்தள பக்கத்தில் உலக அளவிலான ஒரு புள்ளிவிவரம் பற்றி இவர் ஒரு தகவலைப் பதிவிட்டுள்ளார். அதில் உலக அளவில் 1000 பேருக்கு எத்தனை மருத்துவர்கள் உள்ளனர் என்பதைப் பற்றிய விவரத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது ஆயிரம் பேருக்குத் தமிழ்நாட்டில் 4 மருத்துவர்கள் உள்ளனர். அதே ரஷ்யாவில் 3.8 என்ற அளவில் மருத்துவர்கள் உள்ளனர். லண்டனில் இதன் அளவு 2.9 ஆக உள்ளது. அமெரிக்காவில் 2.6. ஜப்பானில் 2.5. சிங்கப்பூரில் 2.5. பிரான்சில் 2.3. தெற்கு கொரியாவிலும் இதே அளவுதான்.
இதைவிடக் கொடுமை பெரிய நாடாக மதிக்கப்படும் சீனாவில் ஆயிரம் பேருக்கு 2 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இந்தியாவில் இதன் அளவு, அதாவது ஆயிரம் பேருக்கு எத்தனை மருத்துவர்கள் எனக் கணக்கிட்டால் அதன் அளவு, 0.8 ஆக உள்ளது.

ஆனால், அந்த இந்தியாவிற்குள் உள்ள தமிழ்நாடு ஆயிரம் பேருக்கு 4 மருத்துவர்களை உருவாக்கி சுகாதாரத்துறையில் உலகிற்கே முன்னோடியாக விளங்கி வருகிறது.
ஆக, தமிழ்நாட்டில் இருக்கின்ற மருத்துவர்கள் பற்றிய புள்ளிவிவரத்தை எடுத்துக்கொண்டால். சிங்கப்பூரைவிட, மலேசியாவைவிட, லண்டனைவிட, ஏன் அமெரிக்காவைவிட, ஜெர்மனியைவிட அதிகம் உள்ளனர்.

அந்தளவுக்குத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. அதுதான் உண்மை.












Click it and Unblock the Notifications