வண்டலூரில் டபுள் சர்ப்ரைஸ்.. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஸ்கை வாக்குடன் ரெடி.. சென்னைக்கு ஹேப்பி
சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட நிலையில், அதன் அருகிலேயே புதிய ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது.. வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே அமையுள்ள இந்த ரயில் நிலையம், பேருந்து நிலையத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளின் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இது எப்போது திறக்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பெரும் முயற்சியாக, வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வந்தது..

சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் 394 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த நவீன பேருந்து முனையத்தில் இருந்து இப்போது 80 சதவீதத்திற்கும் மேலான அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன..
நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்லும் இந்த முனையத்திற்குச் செல்வதில், தொடக்கத்தில் பல்வேறு சவால்கள் நிலவின.. குறிப்பாக, சென்னை மாநகரின் மையப்பகுதியிலிருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு போகவே, ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக செலவிட வேண்டிய சூழல் இருந்தது..
கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
அதுமட்டுமல்ல, பேருந்து முனையத்தின் அருகிலேயே தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதை இருந்தபோதிலும், அங்கு ரயில்வே ஸ்டேஷன் இல்லாதது பயணிகளுக்கு பெரும் குறையாகவே இருந்தது..
இதனால் எலக்ட்ரிக் ரயில்களில் வரும் பயணிகள் வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ, அல்லது ஓலா, ஊபர் போன்றவற்றுக்கு கூடுதல் செலவு செய்து பஸ் ஸ்டாண்டை அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. இந்த போக்குவரத்து சிக்கலை தீர்க்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும் கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது..
இதையடுத்து, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தெற்கு ரயில்வேயால் தொடங்கப்பட்டன.. 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில் 3 நவீன பிளாட்பார்ம்களுடன் கூடிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்துள்ளன..
ஜிஎஸ்டி சாலை - பிரம்மாண்ட ஸ்கைவாக்
பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் நிலையத்தையும், ஜிஎஸ்டி சாலையின் மறுபுறம் அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டையும் இணைக்கும் வகையில் பிரம்மாண்டமான ஸ்கைவாக் அமைக்கும் பணிகள் சிஎம்டிஏ சார்பில் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இந்த நடைப்பாலத்தின் 2 பக்கமும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக லிப்ட் வசதிகளும் அமைக்கப்பட உள்ளன..
மேற்கண்ட ஒட்டுமொத்தப் பணிகளும் இந்த மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் நிறைவடைந்துள்ளன. அதாவது ரயில்வே தரப்பில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன. மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் பணி நடைபெறுகிறது. இந்நிலையம் விரைவில் திறக்கப்படும்" என்றார்.
இந்த தகவல் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இந்த ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வருவதால் எண்ணற்ற நன்மைகள் பயணிகளுக்குக் கிடைக்கப் போகின்றன..
வண்டலூர் - ஊரப்பாக்கம்
முதலாவதாக, சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயண நேரம் பாதியாகக் குறையும்.. இரண்டாவதாக, வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்தில் இறங்கி ஆட்டோக்களுக்கு அதிகப் பணம் செலவழிக்கும் தேவையற்ற கூடுதல் செலவுகள் தவிர்க்கப்படும்.. மேலும், ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்..
அடுத்ததாக, ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ஆகாய நடைமேம்பாலம் மூலம் இணைக்கப்படுவதால், பயணிகள் சாலையைக் கடக்க வேண்டிய ஆபத்தான சூழல் மறைந்து, பாதுகாப்பான முறையில் பேருந்து முனையத்தை அடைய முடியும். மொத்தத்தில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் லட்சக்கணக்கான பயணிகளின் சிரமங்கள் குறையும் என்றும் நம்பப்படுகிறது...!!












Click it and Unblock the Notifications