என்ன செய்வீங்களோ தெரியாது.. ஓட்டு மாம்பழத்திற்கு விழணும்.. ராமதாஸ் கெடுபிடி.. வெடிக்கும் விவாதம்
சேலத்தில் ராமதாஸ் பேசிய பேச்சு விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது
சென்னை: கர்நாடகாவில் 40 எம்எல்ஏ சீட் ஜெயித்த குமாரசாமி 3 முறை முதல்வராகிவிட்டார்.. அவரது அப்பா பிரதமரே ஆகியிருக்கிறார்... அதனால் உங்க ஒத்துழைப்பு எனக்கு முக்கியம்... எந்த கட்சியில் வன்னியர்கள் இருந்தாலும், ஓட்டு மட்டும் மாம்பழத்திற்கு போட வேண்டும்" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
வடமாவட்டங்களில், பாமக தன்னுடைய செல்வாக்கை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. அதேபோல தென்மாவட்டங்களிலும் பலத்தை பரப்ப வேண்டிய நெருக்கடிக்கும் ஆளாகி உள்ளது.
இதன்காரணமாகவே, அக்கட்சியின் முக்கிய கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.. அந்த கூட்டங்களில் எல்லாம், முக்கிய வேண்டுகோள்களையும், குறிக்கோள்களையும் டாக்டர் ராமதாஸ் விடுத்து வருகிறார்..

கோட்டை
குறிப்பாக, "42 வருடங்கள் மக்களுக்காக பாடுபட்டிருக்கிறேன்.. அன்புமணியை கோட்டையில் அமரவைப்பது உங்கள் கையில் தான் உள்ளது... ஒவ்வொரு தொகுதியிலும் 1 லட்சம் வாக்குகளை பெற வேண்டும்... நாம் ஆண்ட பரம்பரை வழியில் வந்தவர்கள், ஆனால், இன்று அடுத்தவர்களுக்கு நாம் துதி பாடிக்கொண்டிருக்கிறோம்.. அன்புமணிதான் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு பிரச்சாரம் செய்ய வேண்டும்... 60 இடங்களில் சுலபமாக வெற்றிபெற்றால் அன்புமணி முதல்வராகி ஆள முடியும்... அன்புமணி மாதிரி ஒரு திறமைசாலி யாரும் கிடையாது... விரைவில் கோட்டையில் பாமக கொடி பறக்கும்" என்று பேசியிருந்தார்.

பாமக பொதுக்குழு
அதே தொணியில்தான் நேற்றும் சேலத்தில் பேசியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.. சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது... இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார்.. அப்போது ராமதாஸ் பேசும்போது, "நான் உங்களை சரியாக வழிநடத்தவில்லையா? என்ன தவறு செய்து விட்டேன்? வன்னியர்கள் மட்டும் 2 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களை நம்பி தானே கட்சியை ஆரம்பித்தேன்?

அப்பா பிரதமர்
கர்நாடகாவில் 40 எம்எல்ஏ சீட் ஜெயித்த குமாரசாமி 3 முறை முதல்வராகிவிட்டார்... அவர் அப்பா பிரதமரே ஆகியிருக்கிறார்.. நீங்கள் ஒன்று சேர்ந்து பாமகவிற்கு ஆதரவு அளித்திருந்தால், இங்கும் அதுபோல் நடந்திருக்கும். அதனால், முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நீங்கள்தான் இருக்கிறீர்கள்... எந்த கட்சியில் வன்னியர்கள் இருந்தாலும், ஓட்டு மட்டும் மாம்பழத்திற்கு போட வேண்டும்... அப்படி மட்டும் செய்தால், 70 முதல் 80 எம்எல்ஏ வரமுடியும்... பிறகு மற்ற சமூகத்தினரும் ஏற்று கொள்வார்கள்" என்றார்.

முக்கியத்துவம்
மற்றொரு பக்கம், ராமதாஸ் தன்னுடைய கட்சியில் அனைத்து சாதியினருக்கும்தான் முக்கியத்துவம் தந்த வருகிறார் என்று அடித்து சொல்கிறார்கள்.. இந்த மாற்றத்திற்கு காரணம், ஜெய் பீம் விவகாரத்தில் பாமக, சாதி அரசியலைத்தான் கையில் எடுத்தது பாமகவுக்கே மைனஸ் ஆக போய்விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்துதெரிவித்து வந்தநிலையில்தான், பாமக தன்னுடைய அரசியலை மாற்றி அமைக்க துவங்கியதாக கூறுகிறாரக்ள.. குறிப்பாக புதிய மாவட்ட செயலர்கள் பட்டியலில், எம்எல்ஏக்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது..

அன்புமணி
மற்ற ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது.. எனவேதான், அன்புமணி தலைமையில் ஆட்சி என்பதில் உறுதியாக இருப்பவர்களை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டும் வருகிறார்கள் என்றும், சமீபத்தில் கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவி ஒழிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டதே இதற்கு சாட்சி என்றும் மற்றொரு தரப்பினர் ராமதாஸை ஆதரித்து கருத்து தெரிவிக்கிறார்கள்.. இப்படி இருவேறு கருத்துக்களுடன் பாமகவின் தற்போதைய அரசியல் நகர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications