நெல்லையில் வெறியாட்டமாடும் ஒரு சாதி.. எல்லா சாதிக்கும் பிரச்சினை! சண்டைக்கு வந்த டாக்டர்.கிருஷ்ணசாமி
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, பெரும்பத்து கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தை புதிய தமிழகம் கட்சி சார்பாக வன்மையாகக் கண்டிப்பதாகவும், நாங்குநேரியில் மீண்டும் மீண்டும் தொடரும் கொலை வெறியாட்டங்களை தடுத்து நிறுத்த காவல்துறை தயங்குவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர் (பறையர்), உடையார், நாடார், பிள்ளைமார், பிராமணர், விஸ்வகர்மா எனப் பல்வேறு சமூக இளைஞர்கள் பல வருடங்களாகச் சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்கு தடையற்ற வன்முறையில் ஈடுபடுவதால், மற்ற சமூகங்கள் தங்கள் சொந்தக் கிராமங்களிலேயே வாழ முடியாமல் ஊரைக் காலி செய்துவிட்டுப் போகும் அவல நிலைகளை காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் எண்ணற்ற முறை எடுத்துச் சொல்லியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.

நாங்குநேரி இரட்டைக் கொலை
இதன் விளைவாக ஏழை எளிய மக்களும், குறிப்பாக இளைஞர்களும் வியாபாரிகளும், அராஜகப் போக்குக் கொண்ட கும்பலால் எவ்விதமான காரணமும் முன்விரோதமும் இன்றி கொல்லப்படுவதும், கொடும் தாக்குதலுக்கு ஆளாவதும் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, நாங்குநேரியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு சின்னதுரை என்ற பள்ளி மாணவன் கொடூரமாகத் தாக்கப்பட்டு நூலிழையில் உயிர் தப்பினார்.
சாதி வன்முறை
நேற்று நாங்குநேரி பெரும்பத்து பகுதியில் தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒன்பது பேர் கொண்ட ஆயுதக் கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி, சரமாரியாகத் தாக்கியதன் காரணமாக, ஜான் மார்க் என்ற ஆதிதிராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்தவரும், திருநாத் கடா என்ற வட மாநிலத்தைச் சேர்ந்தவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆறு பேர் பலத்த காயமுற்றுள்ளனர்; இரண்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
திருநெல்வேலி சம்பவம்
கடந்த வருடம் நடந்த நாங்குநேரி வாகைக்குளம் தீபக் படுகொலையிலேயே உண்மைக் குற்றவாளிகளையும், அவர்களுக்குப் பின்புறமாக இருந்தவர்களையும் கைது செய்ய வலியுறுத்திய போதும், கைது செய்யப்பட்ட சிலரையும் 90 தினங்களில் பிணையில் விடுதலை செய்தார்கள். அவர்கள் அனைவரும் இன்றுவரை தலைமறைவாக இருந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
டாக்டர் கிருஷ்ணசாமி
மேலும் வன்முறைக் கும்பல்கள் அதிகரித்து ஏழை, எளிய மக்கள் மீது இது போன்ற தாக்குதல்களைச் செய்து எதற்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக வலம் வருகிறார்கள். சின்னத்துரை மீதான தாக்குதலுக்கு ஆறுதல் அளிக்க சென்றுவிட்டு, நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு நாம் சென்றதை கூட சில வன்முறை கும்பல்கள் எதிர்த்தார்கள்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரே அவ்விடத்தில் இருந்தும், நமக்கு பாதுகாப்பு அளித்து கோவிலுக்கு அழைத்துச் செல்ல முன்வரவில்லை.
அராஜக வன்முறை
நாங்குநேரி பகுதியில் நடைபெறும் இதுபோன்ற அராஜக வன்முறை செயல்களால் மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் வனிகர்கள் மனதில் ஒரு அச்சத்தை உருவாக்கி, அதன் மூலம் அவர்களுடைய உடமையைக் கைப்பற்றுவதும், பிற சமூக மக்களை அப்பகுதியிலிருந்து துடைத்தெறிவதும் தான் அவர்களின் தலையாய நோக்கமாகும். இது குறித்து நாங்கள் பலமுறை வலியுறுத்தி இருக்கிறோம்; எனினும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை;
சமூகநீதி
நடுநிலை பேசும் சமூகநீதி பற்றாளர்களும் கண்டுகொள்ளவில்லை. இனியாவது திருநெல்வேலி, நாங்குநேரியில் வன்முறையில் ஈடுபட்டு வரும் வன்முறை கும்பல்களின் செயல்களை அறவே ஒழித்துக் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இச்சம்பவத்தில் மரணமெய்தியவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சமும், காயமுற்றவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சமும் வழங்க வேண்டுமென மாநில அரசை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications