மதுரையை நீங்கள் புறக்கணித்தால்.. தேர்தலில் மதுரை மக்கள் திமுகவை புறக்கணிப்பார்கள்! -டாக்டர் சரவணன்
சென்னை: மதுரைக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வராமல் புறக்கணித்தால், தேர்தலில் மதுரை மக்கள் திமுகவை புறக்கணிப்பார்கள் என அதிமுக மருத்துவரணி இணை செயலாளர் மதுரை சரவணன் விமர்சித்துள்ளார்.
கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தை தவிர மதுரைக்கு வேறு எந்த வளர்ச்சித் திட்டங்களையும் திமுக அரசு கொண்டுவரவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள அவர் இது தொடர்பாக ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

''கடந்த ஜனவரி 7,8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டார்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6.64 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தோம். இதன் மூலம், 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதன் மூலம் மதுரை மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று பார்த்தால் பூஜ்ஜியம் தான் கிடைக்கிறது. ஏனென்றால் மதுரைக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. ''
''கடந்த 2022ஆம் ஆண்டு மதுரையில் தென்மண்டல தொழில் மாநாடு நடைபெற்றது. அதில் 600 கோடியில் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்படும், இதன் மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் கூறினார். அந்த அறிவிப்பு இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
குறிப்பாக மதுரையில் 50,000 சிறு நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் ஏறத்தாழ ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.''
''தற்போது மின் கட்டண உயர்வால் இந்த சிறு ,குறு நிறுவனங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்போது 10 சதவீத சிறுகுறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் தொழில் துவங்கும் வண்ணம் எடப்பாடி பழனிசாமி மானியங்களை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம், விமான நிலைய விரிவாக்கத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி, சுற்றுச்சாலைகள் தரத்தை உயர்த்தி மட்டுமல்லாது ஆயிரம் கோடியில் மதுரையில் ஸ்மார்ட் திட்ட பணிகள் செய்து கொடுத்தார். இதன் மூலம் மதுரையில் தொழில் தொடங்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கினார்.''
''அதேபோல் மதுரை தூத்துக்குடி வரை எக்கனாமிக் காரிடார் என்ற தொழில் தொழில் வழித்தடத்தை அம்மா வழியில் செயல்படுத்தினார். ஆனால் ஸ்டாலின் மதுரையில் கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தை தவிர எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மதுரையில் 30 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். குறிப்பாக ஏழு லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள்.''
''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவோம் என்று கூறினார்கள். அப்படி பார்த்தால் தோராயமாக மக்கள் தொகை அடிப்படையில் மதுரையில் 40 ஆயிரம் பேருக்கு இதுவரை வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்க வேண்டும் ஆனால் ஒரு நபருக்கு கூட வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. தொடர்ந்து மதுரை மக்களை நீங்கள் புறக்கணித்தால் வருகின்ற தேர்தலில் மக்கள் உங்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.''












Click it and Unblock the Notifications