சென்னை, தாம்பரம் பகுதி மக்களே.. குடிநீர் குறித்து மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் சென்னை-தாம்பரம் பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளை போல் சென்னை தாம்பரம் பகுதிகளில் இல்லை.. இங்கு தினமும் தண்ணீர் விநியோகம் செய்யப்படும். கோடை காலங்களில் கூட தினசரி தண்ணீர் விநியோகம் இருக்கும். அதேநேரம் பராமரிப்பு பணி அல்லது தொழில்நுட்ப பணிகள் காரணமாகவே தண்ணீர் விநியோகம் தடைபடும். சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் மற்றும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதில் நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து தினம் தோறும் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தற்போது தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக பராமரிப்பு பணிகளை நடத்தி முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதன் காரணமாக வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற ஜூன் 2-ந்தேதி வரை 10 நாட்களுக்கு சென்னை மற்றும் தாம்பரம் பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது
எங்கெல்லாம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விநியோகம் செய்யப்படும்: சென்னை மாநகராட்சி 9-வது மண்டலமான தேனாம்பேட்டை பகுதியில் உள்ள மந்தைவெளி, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், நந்தனம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை மற்றும் 13-வது மண்டலமான அடையாறு பகுதிக்கு உட்பட்ட பெசன்ட் நகர், மடிவின்கரை, பேபிநகர், பெரியார் நகர், கருணாநிதி நகர், காஷேத்ரா காலனி, வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவள்ளுவர் நகர், ஏ.ஜி.எஸ்.காலனி போன்ற இடங்களில், நாளை முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.
இதேபோல் 14-வது மண்டலமான பெருங்குடி பகுதிக்கு உட்பட்ட கொட்டிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், காவேரி நகர், திருமலை நகர், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், காமாட்சி காலனி, ஜல்லடியம்பேட்டை மற்றும் 15-வது மண்டலமான சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள நீலாங்கரை, சரஸ்வதி நகர், ஒக்கியம்- துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், எழில் நகர், கண்ணகிநகர், உத்தண்டி, பனையூர், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி மற்றும் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீர் விநியோக முறையை கவனத்தில் கொண்டு தேவையான குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https//cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதேநேரம் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையும் இன்றி வழக்கம் போல் சீரான முறையில் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications