ஆளுநர் மாளிகைக்கு ஓடிய எடப்பாடி.. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பதவி விலக வேண்டும் என ஆவேசம்
சென்னை: போதைப்பொருள் புழக்கத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து புகாரளித்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த மாதம் போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சூடோபெட்ரின் எனும் பொருள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் பற்றிய விபரம் தெரியவந்தது.
சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை ராஜஸ்தானில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் தான் ஜாபர் சாதிக் விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் பற்றிய விபரத்தை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். மேலும் விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநர் ஆர்என் ரவியிடம் வலியுறுத்தினார். இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. போதைப்பொருள் சர்வசாதாரணமாக கிடைக்கிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் தமிழகம் சீரழிந்துவிடும். போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விளக்கான அறிக்கையை ஆளுநரிடம் வழங்கினோம். போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். போதைப்பொருள் புழக்கத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் உதயநிதி பதவி விலக வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைதான ஜாபர் சாதிக் மீது மலேசியாவில் வழக்கு உள்ளது. 2019ல் போதைப்பொருள் கடத்தியதாக மலேசியாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோருடன் சேர்ந்து இருக்கும் போட்டோ வெளியாகி உள்ளது. மேலும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த இயக்குனரான ஒருவர் தயாரிக்கும் படத்துக்கும் நிதி வழங்கி உள்ளாராம். உயர் போலீஸ் அதிகாரியும் ஜாபர் சாதிக்கிற்கு நற்சான்று வழங்கி உள்ளார்.
இதனால் தான் சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரி பேட்டியே அளித்துள்ளார். இந்த விஷயத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினருக்கு தொடர்பு இருப்பதாக பேட்டியளித்துள்ளார். உரிய முறையில் தகுந்த விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை வெளிவரும்'' என ஆவேசமாக கூறினார்.












Click it and Unblock the Notifications