குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கத்தையாக ‘ஃபைன்’.. 3 வாரத்தில் ரூ.2.61 கோடி வசூல்.. டிமிக்கி கொடுத்தா?
சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து ரூ.2,61,21,500 வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ரூ.2.61 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்க உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை போக்குவரத்து போலீசார் வசூலித்து வருகின்றனர். அதன்படி, மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராதத் தொகை அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். அவர்களிடம் அபராதம் வசூலிக்க 10 இடங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு கடந்த 3 வாரங்களில் ரூ.2 கோடியே 61 லட்சத்து 21,500 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

அபராதம்
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

2.61 கோடி வசூல்
ஒருசிலர் மட்டுமே அபராதம் செலுத்தும் நிலையில் பலர் அபராதம் செலுத்துவது இல்லை. இதனால் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனைத் தீர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசார் சிறப்பு முகாம் அமைத்து அபராதத் தொகையை வசூலித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த மூன்று வாரங்களில் 2,521 வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.2,61,21,500 வசூலிக்கப்பட்டுள்ளது.

அசையும் சொத்துகள்
குடித்து விட்டு மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் செலுத்தவில்லை என்றால் அவர்களின் வாகனங்கள் மட்டுமின்றி, அவர்களின் வீட்டில் உள்ள அசையும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும்" என போக்குவரத்து காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஆணை
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த அசையும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படலாம். மது போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கு இதுவரை 340 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்த செயல்பாட்டில் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications