உதயநிதிய வரச் சொல்லட்டுமா? காதே கூசும் அளவுக்கு “பீப்" வார்த்தைகளால் அர்ச்சனை! லாட்ஜில் சிக்கிய ஜோடி
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தி இருந்த காரை எடுக்கச் சொன்ன போலீசாரை குடிபோதையில் இருந்த ஆணும், பெண்ணும் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை கூறி அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இளைஞர்களிடையே கஞ்சா மது உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகமாக இருக்கிறது. இதில் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடும் போலீசார் மிகவும் பாதிப்படைகின்றனர்.

மது போதையில் அல்லது கஞ்சா போதையில் சாலைகளில் சுற்றித் திரியும் இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டால் அவர்களை மிரட்டுவது, தாக்குதல் நடத்துவது என அத்துமீறல்கள் தொடர்கின்றன.
அதே நேரத்தில் போலீசாரின் பாதுகாப்பும் இது போன்ற நிகழ்வுகளால் கேள்விக்குறியாகி உள்ளது. ரவுடி என விரட்டுவது, அரசியல்வாதிகளின் உறவினர்கள் என மிரட்டுவது என அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது போலீசாரை ஒருவித மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது என்றே கூறலாம். அந்த வகையில் சென்னையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குடிபோதையில் நின்றிருந்த ஜோடியை தடுத்த போலீசாரை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் சர்வீஸ் சாலை மற்றும் கடற்கரை லூப் சாலை இருக்கிறது. இங்கு இரவு நேரங்களில் காதல் ஜோடிகளும் இளைஞர்களும் சுற்றி திரிவது வழக்கம். இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர். இந்நிலையில் நேற்று மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்திருக்கின்றனர்.
அப்போது அந்த சாலையில் காரை நிறுத்தி ஒரு ஆணும் பெண்ணும் இருந்ததாக கூறப்படுகிறது. அதை அடுத்து அங்கு சென்ற காவலர் சிலம்பரசன் காரை எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளார். அப்போது அந்த இருவரும் போலீசாரை மிக இழிவாக பேசியதோடு அநாகரீகமாக நடந்து கொண்டனர். மேலும் "நீங்கள் யார்" என இருவரிடமும் போலீசார் விசாரிக்கும் போது இருவரும், "என்னை வீடியோ எடுக்கிறீர்களா? இந்த போஸ் போதுமா.. இந்த போஸ் போதுமா" என கேலி கிண்டல் செய்திருக்கிறார்.
மேலும் "நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பாக்குறியா" என பேசியதோடு, "உன்னால் முடிந்ததை பாரு.. நான் குடித்து தான் இருக்கேன்.. என்னால் காரை எடுக்க முடியாது.. நாளை காலையில உங்க அட்ரஸ் எடுத்து எல்லாத்தையும் காலி பண்ணி விடுவேன்" என மிரட்டி உள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடிபோதையில் அநாகரிகமாக பேசிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கமென்ட் செய்தனர். இந்த நிலையில் போலீசாரில் முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த இருவரும் கணவன் மனைவி இல்லை என்பது தெரிய வந்தது. இதற்கிடையே காவல்துறையினரை ஆபாசமாக பேசிய தம்பதி மீது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சிலம்பரசன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் போலிசாரிடம் தகராறு செய்தது சென்னையை சேர்ந்த சந்திரமோகன் மற்றும் அவரது பெண் தோழியான தனலட்சுமி என்பது தெரியவந்தது. இருவரும் ஒன்றாக நேற்று முதல் சுற்றி வந்தது தெரிய வந்தது. இதற்கிடையே இருவரும் மயிலாப்பூரில் ஒரு தங்கும் விடுதியில் இருப்பது தெரியவந்த நிலையில், அங்கு சென்ற போலீசார் இருவரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications