மெரினா கண்ணகி சிலை அருகே தலைக்கேறிய போதையில் பெண் மயக்கம்.. பசியால் அழுத சின்னஞ்சிறு குழந்தைகள்
சென்னை: சென்னை மெரினா கடற்கரை அருகே மது போதையில் மயக்கநிலையில் கிடந்த பெண்ணை அவருடன் பசியால் அழுது கொண்டிருந்த சிறு குழந்தைகளையும் போலீஸார் மீட்டனர்.
கண்ணகி சிலை அருகே 2 வயது பெண் குழந்தையும் 6 மாத ஆண் குழந்தையும் பசியால் அழுது கொண்டிருந்தனர். அப்போது அருகே பெண் ஒருவர் மயங்கி இருந்தார். இதை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தகவல் குழந்தைகளுக்கு பால் வாங்கிக் கொடுத்தனர். இதையடுத்து அந்த பெண் ஏன் மயக்க நிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள 108 ஆம்புலன்ஸுக்கு போலீஸார் தகவல் கொடுத்தனர்.
அப்போது அதிலிருந்த ஒரு செவிலியர் வந்து அந்த பெண்ணை எழுப்பிய போது அவர் குடிபோதையில் இருந்ததும் ஃபுல்லாக குடித்துவிட்டு குழந்தைகள் பசியால் அழுவது கூட தெரியாமல் தலைக்கேறிய போதையால் படுத்து கிடந்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் அந்த பெண், இரு குழந்தைகளின் தாய் என்பது தெரியவந்ததது.
இரவு நேரங்களில் குழந்தைகளுடன் மெரினாவில் வந்து தங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறாராம். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரையும் குழந்தைகளையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் அவர்கள் மூவரும் காப்பகத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நீதி கேட்டு மதுரையையே எரித்த கண்ணகி சிலை அருகே குடித்துவிட்டு குப்புற பெண் ஒருவர் வீழ்ந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு பால் கூட வாங்கித் தராமல் வயிறு முட்ட குடிப்பதற்கு இந்த பெண்ணுக்கு பணம் ஏது என தெரியவில்லை. ஒரு வேளை கடற்கரைக்கு வருவோரிடம் யாசகம் கேட்டு அந்த பணத்தில் இவர் குடித்தாரா? என்றும் தெரியவில்லை.
கைக்குழந்தைகளுடன் பெண் தவிக்கிறாரே என யாசகம் அளித்தால் அந்த பணத்தில் இவர் குடித்துவிட்டு குழந்தைகளை பட்டினி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பெண்ணுக்கு கவுன்சலிங் அளிக்கவும் அவர் மது போதையிலிருந்து விடுபடுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் காப்பகத்தில் எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications