வெள்ள பாதிப்பு.. சென்னை ஏரி-குளத்தில் 3 அடி நீர் இருப்பை குறைங்க.. கனமழையால் மாநகராட்சி புது அறிவுரை
சென்னை: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழையால் வெள்ள பாதிப்பை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்கள் என 175 நீர்நிலைகளில் 2 முதல் 3 அடி வரை நீர் அளவை குறைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த அறிவுரை யை சென்னை மாநகராட்சி வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் தாமதமாக வடகிழக்கு பருவமழை துவங்கியது. கடந்த மாதம் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கி தலைநகர் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பெய்து வருகிறது.
இதற்கிடையே தான் வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளையொட்டி நிலவுகிறது.

3 நாள் கனமழை
இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளைக்குள் நகரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் நாளை மறுதினம் வரை 3 நாட்கள் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதலே சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் விடிய விடிய மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் நேற்று மாலை முதல் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை விடியவிடிய பெய்தது. காலையிலும் பல இடங்களில் பெய்து வருகிறது. சென்னை கிண்டி, வடபழனி, மீனம்பாக்கம், அண்ணாசாலை, பல்லாவரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, பம்மல், அனக்காப்புதூர், அடையாறு, மாங்காடு, அசோக் நகர், சைதாப்பேட்டை, தியாகராயநகர், நந்தம்பாக்கம், வள்ளூவர் கோட்டம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

சென்னை மாநகராட்சி உஷார்
தற்போதைய சென்னை வடிகால் பணியால் சென்னையில் பல இடங்களில் மழையின்போது தேங்கிய நீர் வேகமாக வடிந்தன. இருப்பினும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் சென்னையில் கனமழையால் மாநகராட்சி நிர்வாகம் உஷாராகி உள்ளது. மழை வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் எங்கும் மழைநீர் தேங்காமல் இருப்பதில் சென்னை மாநகராட்சி அதிக கவனம் செலுத்தி வருகிறது.

3 அடி வரை தண்ணீர் குறைக்க
இந்நிலையில் தான் சென்னை நீர்நிலைகளில் தண்ணீரின் கொள்ளளவை குறைக்க மாநகராட்சி சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் ஏரி, குளங்கள் என 175 நீர்நிலைகள் உள்ள நிலையில் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி உஷாராகி இந்த அறிவுரையை பிறப்பித்துள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வில்லிவாக்கம், ரெட்டேரி முதல் சிறிய குளம் முதல் பெரிய ஏரிகள் வரையிலான நீர்நிலைகளில் தண்ணீரை வெளியேற்ற வேண்டும். ஏரி, குளங்களில் இரண்டு முதல் மூன்று அடி வரை நீர்மட்டத்தை குறைக்க வேண்டும்.

துவங்கிய நடவடிக்கை
இது மழை வெள்ளத்தை தடுக்க கைக்கொடுக்கும் என சென்னை மாநகராட்சி அறிவுரை வழங்கி உள்ளது. இந்த அறிவுரையை தொடர்ந்து ஏரி, குளங்களில் உள்ள நீரின் அளவை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்மூலம் சென்னையில் அதிகளவில் கனமழை பெய்தால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காமல் ஏரி, குளங்களில் தேங்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications