"திமுக- மதிமுக உறவு சீர்குலைய தவிக்கும் துரோகி.." துரை வைகோ காட்டம்.. ஸ்டாலினுக்கே கேடயமாம்!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கும் மதிமுக கேடயமாக இருக்கும்; திமுகவுடன் எந்த ஒரு உரசலுமே இல்லை என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் துரைவைகோ அளித்துள்ள விளக்கம்: திமுக- மதிமுக உறவு சீர்குலைந்து போகாதா என்று ஏங்கித் தவிக்கும் துரோகி,விஷ ஜந்துக்களுக்கு வேண்டுமானால் திமுக - மதிமுக உறவில் உரசல் என்கிற செய்தி தீனி போடலாம்.. ஆனால்,உண்மையில் திமுக தலைவரும், முதல்வருமான அண்ணன் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைவர் வைகோ அவர்கள் மீது கொண்டுள்ள பாசப் பிணைப்பு பெரியார் திடலில் ஏப்ரல்-25 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கூட வெளிப்பட்டது.

முதல்வருக்கு பாராட்டு
இந்திய மாநிலங்களின் முதல்வர்களில் முதன்மை பெற்ற முதல்வர் என்று ஊடகங்களும், ஏடுகளும் பாராட்டிப் போற்றும் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் தலைசிறந்த முதல்வர் பட்டியலில் தானும் இடம் பெற உடல் நலனைக் கூடப் பொருட்படுத்தாமல் ஓயாத கடல் அலை போன்று உழைத்துக் கொண்டே இருக்கிறார்.நேரம்,காலம் பார்ப்பதில்லை.தஞ்சையில் தேர் விபத்தில் உயிரிழத்தோருக்கு அஞ்சலி செலுத்தவும்,அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் விரைந்தாரே!.இப்படி தமிழ்நாட்டுக்காக உழைக்கும் முதல்வருக்கும்,அவரது அமைச்சரவை சகாக்களுக்கும்
நாங்கள் கேடயமாக இருப்போம் என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் நான் கூறி வருகிறேன்..

சீறுவது நாங்களே
திமுக அரசின் மீது ஏவப்படுகின்ற கணைகளை பிடுங்கி எடுத்து, எதிரிகளின் மீது பாய்ச்சுகின்ற வல்லமை கொண்டது மதிமுக எனபதை
அவர்களும் அறிவார்கள்... தலைவர் வைகோ அவர்கள் உடல் நலன் குன்றிய போது அதே அன்புடன் இல்லம் தேடி வந்து விசாரித்து சென்றார் திமுக தலைவர். ஆளும் திமுக அரசு மீது பா.ஜ.க அண்ணாமலை வீசி வருகின்ற அவதூறுகளுக்கு திமுகவை முந்திக் கொண்டு நான் பதிலடி
தந்திருக்கிறேன்.. அது நீட் தேர்வாக இருந்தாலும், ஆளுநர் விவகாரமாக இருந்தாலும் உடனுக்குடன் பாஜகவுக்கு நான் ஆதாரங்களுடன் தக்க பதிலை
நெத்தி அடியாக கொடுத்து வருகிறேன்..

இட்டு கட்டுகிறார்கள்
மதிமுக செயல்வீரர்கள் கூட்டங்களில் நம்பிக்கை ஊட்டி பேசி வருவது உண்மைதான். ஆளும் கட்சி கூட்டணியில் இப்போதுதான் கழகம் இடம் பெற்று இருக்கிறது.பொதுப் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவற்றுக்கு தீர்வு காண உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத்
தொண்டர்கள் மக்கள் பணி ஆற்ற ஆர்வம் கொள்ள வேண்டும். அப்போதுதான் கழகம் வளரும்.நீங்களும் வளர்வீர்கள் என்று என் உரையில் குறிப்பிட்டேன்.
இதை எல்லாம் இட்டுக்கட்டி மேதாவிலாசத்தை காட்டி உள்ளனர்.

திமுக ஆதரவு தொடரும்
இதனால் எல்லாம் நமது இலட்சியப் பயணத்தை தடுக்க முடியாது... நம் இலக்கு தெளிவானது; தடுமாற்றம் இல்லாதது; தமிழக முதல்வர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவில் நான் பேசும் போது, குறிப்பிட்டது போல, தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்ட நேரம்,இக்கட்டான சூழல்; கொரோனா பெருந்துயரம் ஒரு புறம்.. பொருளாதார நெருக்கடி மற்றொரு புறம்.. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு பத்து மாத காலமாக பம்பரமாக சுழன்று கொண்டே இருக்கிறார் முதல்வர். நாடு போற்றும் நல்லாட்சி நடக்கிறது; இராவணனுக்கு ஒரு இந்திரஜித்!.
வில்லுடை வேந்தன் அர்ஜூனனுக்கு ஒரு அபிமன்யு!.கிரேக்க மாமன்னர் பிலிப்புக்கு, ஒரு மாவீரன் அலெக்சாண்டர்.!.சோழப்பேரரசர் இராச இராசனுக்கு, ஒரு இராசேந்திர சோழன்!.மன்னர் ஹைதர் அலிக்கு, ஒரு திப்புச்சுல்தான்! மனிதருள் மாணிக்கம் பண்டித ஜவகர்லால் நேருவுக்கு ஒரு இந்திராகாந்தி!.முத்தமிழ் அறிஞர் ஐயா கலைஞருக்கு எங்கள்அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின்!. தொடரட்டும் அவர் நல்லாட்சி!. துலங்கட்டும் நம் தமிழ்நாடு!. இவ்வாறு துரைவைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications