துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி? துணைக்கு வந்த ராமதாஸ்? எடுத்துக் கொடுத்த ஜெயக்குமார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்குப் பின்னணியில் துரைமுருகன் செயல்பாடுகள் இருப்பதாக திமுகவினர் சிலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

திமுக இளைஞரணி மாநாடு கடந்த ஆண்டு இறுதியில் நடைபெறுவதாக இருந்த நிலையில், மழை வெள்ளம் காரணமாக அது இந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அது நடந்த முடிந்த பிறகு உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பேச்சுகள் வெளிவரத் தொடங்கின.

DMK Udhayanidhi Stalin

ஆனால், அதைத் திட்டவட்டமாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் மறுத்தார். மீண்டும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகு அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் பற்றிய விவாதம் எழுந்தது. உடனடியாக கள்ளச்சாராய மரணங்கள் என சில சர்ச்சைகள் எழவே திமுக தலைமை அமைதி காத்து வந்தது.

இதனிடையே தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்தது. அதிலும் திமுக அமோக வெற்றியைப்பெற்றது. இதனையொட்டி உதயநிதி துணை முதல்வராகப் பதவியில் அமர்த்தப்படுவார் என்று தகவல் கசிந்தது. இந்த முறை வெறும் தகவல் அளவில் மட்டுமே இல்லாமல் சில அமைச்சர்களும் தங்களின் கருத்தை உதயநிதிக்கு ஆதரவாக முன்வைக்க தொடங்கினார்.

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் நிர்வாகத்தைக் கவனிப்பதற்காகவும் முடிவுகளை எடுப்பதற்காகவும் அந்த இடத்தில் நம்பிக்கைக்கு உரிய ஒருவர் இருப்பது நல்லது என்று கட்சித் தலைமை நம்பிக்கைக் கொள்வதாகவும் சிலர் கூறிவந்தனர். திமுக ஆட்சியையும் கட்சியையும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் உதயநிதி முழுதாக சினிமாவை விட்டு விலகினார். அப்போது கூட திமுக முதல் குடும்பத்தைச் சேர்ந்த சபரீசன், 'அவர் திரைத்துறை விட்டு விலகியது சரிதான். அவருக்கு நிறையப் பொறுப்புகள் காத்திருக்கின்றன' என்று பூடகமாகக் கூறியிருந்தார்.

முதலில் இளைஞரணி, அடுத்து சட்டமன்ற உறுப்பினர், அடுத்தபடியாக அமைச்சர் என அவருக்கு வேகவேகமாக பொறுப்புகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தத் துணை முதல்வர் என்ற பதவியை வழங்குவதில் மட்டும் சற்று தாமதம் கட்சிக்குள்ளாகவே நிலவி வருகிறது. 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்திருந்தால், அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் நடுவே துணை முதல்வர் பதவி எப்போதோ உதயநிதிக்கு வழங்கப்பட்டிருக்கும் என்று உடன்பிறப்புகள் சிலர் அடித்துச் சொல்கிறார்கள். ஆனால், கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாததால் திமுகவின் திட்டத்தில் சில மாற்றங்கள் நடந்தன.

இந்தநிலையில்தான் 20 ஆம் தேதி நடைபெற்ற இளைஞரணி 45வது ஆண்டு விழாவில் உதயநிதி பங்கேற்றுப் பேசினார். 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து மாவட்டம் வாரியாக திமுக இளைஞரணிக்கான சமூக வலைத்தள பக்கம் அன்று அவரால் தொடங்கப்பட்டது. விழா மேடையில் துணை முதலமைச்சர் பற்றிய பேச்சை ஓபன் செய்தார் உதயநிதி.

DMK Udhayanidhi Stalin

அப்படி ஒரு பதவி தனக்கு வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அவர் சொல்லவில்லை. எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிடமாட்டேன் எனப் பூடகமாகப் பேசி இருந்தார். ஆக, ஏதோ ஒரு புதிய பொறுப்பு வர உள்ளது என்பதை அவர் மறுக்கவில்லை.

இதனிடையே தான் செய்தியாளர்கள் துரைமுருகனைப் பார்த்து இந்தக் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, 'அங்கிங்கெனாதபடி இந்தக் குரல் ஒலிக்கிறது' என்றார். சரி இவரும் பச்சைக் கொடி காட்டிவிட்டார் என்று நினைக்கும் வேளையில் அடுத்து வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம் சீனியர் உங்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா? என்று முன்வைத்த கேள்விக்கு, 'கொடுத்தால் யார் வேண்டாம் என்று சொல்வார்கள்?' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

இந்தத் துணை முதல்வர் பதவி விவகாரம் பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேசும் போது, 'திமுக குடும்பக் கட்சி, குடும்ப அரசியல்' என்று ஒரு இடி இடித்தார். வழக்கமாக இதைப் போன்ற விசயங்களில் அது அந்தக் கட்சி விவகாரம் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படிச் சொல்லவில்லை.

அதேநேரத்தில் ஆங்கில பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'அது அந்தக் கட்சி விவகாரம்' என்று சொல்லிவிட்டு, அத்தோடு நிறுத்தாமல், 'துரைமுருகன் சீனியர். அவர் அண்ணா, கலைஞரைப் பார்த்தவர். அவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்கலாம்' என்று சொல்லி இருந்தார்.

இதனிடையே இந்த விவகாரத்தை நேரடியாகப் பேசாமல், டாக்டர் ராமதாஸ், "வன்னியர்கள் மீது திமுகவுக்கு வன்மம் ஏன்?" என்று ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் போட்டுள்ளார். மேலும் அவர், "திமுகவில் உள்ள 131 உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் வன்னியர்கள். அவர்களின் எண்ணிக்கை 23, அதாவது 17.55%. அதன்படி மொத்தமுள்ள 34 அமைச்சர்களில் 6 அமைச்சர் பதவிகள் வன்னியருக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது வழங்கப்பட்டிருப்பதோ வெறும் 3 அமைச்சர் பதவிகள் தான். இது தான் திமுகவின் வன்னியர் புறக்கணிப்பு" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

துரைமுருகன் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை துணை முதல்வராக முன்னிறுத்த வேண்டும் என மறைமுகமாக ராமதாஸ் பேசுவதைப் போல இந்தப் பதிவு அமைந்துள்ளது. திமுகவில் துரைமுருகன் பொதுச்செயலாளராக இருந்து வந்தாலும் அவருக்கு உரிய மரியாதை இல்லை என்று ஒரு பேச்சும் கட்சிக்குள் ஒலித்து வருகிறது. ஆனால், அவர் அதை மனதில் போட்டுப் புதைத்துக் கொண்டுவிட்டார் என்கிறார்கள் உபிகள்.

பொதுச்செயலாளராகத் துரை முருகன் பதவியேற்ற போது, கண்ணீர் மல்கப் பேசினார். சட்டசபையில் உதயநிதி அதன்பின்னர் இன்பநிதி கூடவும் நான் அரசியல் செய்வேன் என்று சொல்லி இருந்தார். அப்படி என்றால் அந்தப் பேச்சுகள் எல்லாம் பொய்யா? என்று உபிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

DMK Udhayanidhi Stalin

கட்சியின் அடையாளமாக முன்வைக்க ஒரு நட்சத்திர அந்தஸ்து தேவை. அது உதயநிதிக்குத்தான் உள்ளது. இளம் தலைமுறை மத்தியில் இவர்தான் இன்று திமுகவின் அடையாளம். ஆகவே அவருக்குத் துணை முதல்வர் தருவதே நியாயம் என்கிறார்கள் சிலர். இன்னொரு பக்கம் தனக்குக் கட்சியில் கிடைத்த பதவிகள் அனைத்தும் தாமதமாகவே கிடைத்தது.

அதைப்போன்று என் மகன் நிலை இருக்கக் கூடாது என்று ஸ்டாலின் கூறிவருவதாகவும் சொல்கிறார்கள். இடைத்தேர்தல் வெற்றியை ஒரு இனிப்பான செய்தியோடு கொண்டாடலாம் என்று இருந்த இளைஞரணிக்கு ஒரு முட்டுக் கொடுக்காமல் முட்டுக்கட்டையாக துரைமுருகன் மாறலாமா? என்றும் சில சீனியர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

இவருக்கு இவர் மகன் மீது கவலை, முதல்வருக்கோ அவர் மகன் மீது கவலை என்றார் திமுகவிலிருந்து விலகி இருக்கும் ஒரு முன்னாள் பெரும்புள்ளி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+