துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ பாகம் 2 நாளை ரிலீஸ்! வெளியிட சென்னை வரும் சுப்ரியா சுலே!
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' புத்தகத்தின் இரண்டாவது பாகம் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தனது கணவர் குறித்தும் தங்களுடைய மணவாழ்க்கை குறித்தும் குமுதம் சினேகிதி இதழில் ஐந்து ஆண்டுகளாக தளபதியும் நானும் என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார்.

வாசகர்களின் மிகுந்த வரவேற்பு பெற்ற அந்த தொடரில் ஸ்டாலின் மற்றும் துர்கா ஆகியோருடைய மண வாழ்க்கை, ஸ்டாலினின் அரசியல் பயணம், அவர் சந்தித்த அரசியல் நெருக்கடிகள், மிசா கொடுமைகள், அவர் சந்தித்த பிரச்சனைகள், நெருக்கடிகள், சாதனைகள், அதனை உடன் நின்று தான் பார்த்தது குறித்தும், குடும்ப நிகழ்வுகள் குறித்தும் சுவாரஸ்யமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த புத்தகம் உயிர்மை பதிப்பகத்தின் மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி 'அவரும் நானும்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. மீனா குமாரி வெளியிட துர்கா ஸ்டாலினின் பேத்திகளான தன்மயா சபரீசன், நிலானி உதயநிதி ஆகியோர் பெற்றிருந்தனர். இந்த நிகழ்வில் அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' புத்தகத்தின் இரண்டாவது பாகம் மீண்டும் உயிர்மை பதிப்பகத்தால் புத்தகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை ஜூலை 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த நூல் வெளியிடப்படுகிறது.
இந்த நூலின் முதல் பிரதியை தேசியவாத காங்கிரஸ் - சரத் பவார் கட்சியைச் சேர்ந்த எம்.பி சுப்ரியா சூலே வெளியிட எழுத்தாளர் சிவசங்கரி பெற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் தமிழச்சி தங்கப்பாண்டியன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், பத்திரிகையாளர் லோகநாயகி, மேனாள் நீதிபதி பவானி சுப்பராயன், டாஃபே குழும நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன், கோவை சந்திரா - ஜி.ஆர்.ஜி நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். துர்கா ஸ்டாலின் ஏற்புரை வழங்குகிறார். ராஜேஷ் வைத்யாவின் வீணை இசை கச்சேரி நடைபெறுகிறது.
முதல் பாகம் வெளியாகி ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அதில் இடம்பெறாத புதிய தகவல்கள் இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகின்றன. இதில், கலைஞர் மறைவு, மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்றது, தமிழக முதலமைச்சராக அரியணை ஏறியது என பல முக்கிய நிகழ்வுகள் தொடர்பாகவும், அந்த சூழல்களில் தனது கணவர் ஸ்டாலினின் எண்ண ஓட்டங்களையும் துர்கா ஸ்டாலின் எழுத்தில் வடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications