"பஸ் விடுங்க.. இதுக்கு பொது போக்குவரத்தையே திறந்து விட்டுடலாமே".. கோரும் மக்கள்.. தொற்று பெருகுமா?
இபாஸ் அனுமதியால் சென்னைக்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்
சென்னை: மீண்டு வந்தது சென்னை என்று சந்தோஷப்படுவதா? அல்லது திரும்பவும் சென்னைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று கவலைப்படுவதா தெரியவில்லை.. சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் போனவர்கள் மீண்டும் திரும்ப ஆரம்பித்துள்ளனர். அதேபோல சென்னையிலிருந்து பலர் சொந்த ஊர்களுக்குப் போக ஆரம்பித்துள்ளனர்.
சென்னையில் ஏற்கனவே தொற்று அதிகரிக்க ஆரம்பித்துவிட்டதால், 2, 3 மாதங்களாக பலர் ஊரை காலி செய்து கொண்டு சொந்த ஊர் செல்ல தொடங்கினர்.. போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தாலும், டூவீலரிலேயே ஊர் வந்து சேர ஆரம்பித்தனர்.
இந்த சமயத்தில்தான் மற்ற மாவட்டங்களிலும் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது... தொற்றே இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட நீலகிரி போன்ற இடங்களிலும் ஒரே நாளில், 30, 40 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலை ஏற்பட ஆரம்பித்தது. அதனால், பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் திரும்பவும் சென்னைக்கே திரும்ப ஆரம்பித்தனர்.

ஃபிளைட்டுகள்
பஸ்கள் ஓடாவிட்டாலும், பிற மாவட்டங்களில் இருந்து, ஃபிளைட்டுகளை பிடித்து கொண்டாவது சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வந்தது.. சென்னை இப்படி சிக்கி கொண்டு விட்டதே என்று அளவுக்கு அதிகமாக வருத்தப்பட்ட நிலையில், அதிரடியாக யூடர்ன் போட்டு மீண்டு வந்தது மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்பட்டது.. இது தமிழக மக்களுக்கே கொஞ்சம் நிம்மதியையும் தந்தது.

அனுமதி
இந்த சமயத்தில்தான் இ பாஸ் அனுமதி கிடைத்துள்ளது.. தொற்று சூழ்ந்திருந்த சென்னை போன்ற மாநகரங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கவும், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்கவும்தான் இந்த இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது... ஆனால் உண்மையை சொல்ல போனால் இது ஒரு வகையில் தோல்விதான்.. மாவட்டங்களுக்கு மக்கள் படையெடுப்பு அதிகமாகிதான் வந்தது.

லஞ்சம்
இ பாஸ் இனியும் எதற்குத் தேவை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேட்டு வந்தன. அப்பாவி மக்களிடம் பல ஊர்களில் லஞ்சம் வாங்கிக் கொண்டு இ பாஸ்கள் விற்கப்படுவதாக வந்த சர்ச்சையைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இந்தக் கோரிக்கையை விடுத்து வந்தன. இ பாஸை வைத்து அரசியலும் நடந்து வந்தது.

சாமான்யர்கள்
அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட பிரபலங்களுக்கு மட்டும் இ-பாஸ் கிடைத்ததையும், எத்தனையோ சாமான்யர்களுக்கு அப்ளை செய்தும் இ-பாஸ் கிடைக்காததும் இந்த 5 மாதங்களில் கண்கூடாக கண்டோம்.. இருந்தாலும், அப்ளை செய்பவர்கள் எல்லாருக்கும் இ-பாஸ் வழங்குவதற்கு பதிலாக இந்த நடைமுறையையே ரத்து செய்வதால் நல்லா இருக்குமே என்பது பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது.

எதிர்க்கட்சிகள்
மேலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இ பாஸை நீக்கக் கோரி பிரச்சினை செய்து வந்ததால், மக்கள் அவர்கள் பக்கம் சாய்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இ பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அதை வழங்க தளர்வு செய்து உத்தரவிட்டது அரசு. அதன்படி தற்போது நேற்று முதல் இபாஸ் கேட்ட அனைவருக்கும் அது கொடுக்கப்படுகிறது. இங்குதான் வினையே ஆரம்பித்துள்ளது.

வேண்டுகோள்
பொதுமக்கள் இ-பாஸ் பெற்று கொண்டு ஊர்களுக்கு கிளம்பி செல்ல ஆரம்பித்துவிட்டனர்.. நேற்று ஒரே நாளில் மட்டும் ஒன்றே கால் லட்சம் இ பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் அதிர வைத்துள்ளது. அதுமட்டுமில்லை.. இ-பாஸ்-க்கு அனுமதி என்றதுமே இதுக்கு பஸ் விடலாமேன்னு ஒரு குரூப் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளது.. அடுத்து ரயில் விட சொல்வாங்க.. இப்படி பெரும்பாலானோர் கோரிக்கைக்கு செவிமடுத்து அரசு நடவடிக்கையே எடுத்தாலும், அதன் பாதிப்பு என்னமோ இதே மக்களுக்குதான்!

டிராபிக் ஜாம்
பலர், காசு பணம் செலவு செய்து வாகனங்களை வைத்துக் கொண்டு செல்வது சிரமமாக உள்ளது. மக்கள் நெரிசல் கண்ணுக்கு தெரிகிறது.. டிராபிக் ஜாம் ஆகிறது.. இப்போது, அரசு மீண்டும் பஸ்களை விட வேண்டும் என்று கோரியிருப்பது வேதனையாக உள்ளது.. பஸ் விட்டால், கூட்டம் கூட்டமாக மக்கள் பயணித்து கொத்துக் கொத்தாக கொரோனா பரவ ஏதுவாகி விடும்.

விளைவுகள்
மக்கள் கேட்கிறார்கள், எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கிறார்கள் எனவே நாங்கள் அனுமதிக்கிறோம் என்று அரசு எளிதாக கூறி விட்டுப் போய் விடும். ஆனால் அவஸ்தையும், சிரமமும் யாருக்கு ஏற்படும் என்றால் மக்களுக்குத்தான். அதை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். பஸ்கள் விட ஆரம்பித்தால் பெரும் சிக்கலாகி விடும். யாரையும், எதையும் கட்டுப்படுத்த முடியாத அவல நிலை ஏற்படும். அதன் விளைவை பல மாதங்களுக்கு மக்கள்தான் அனுபவிக்க நேரிடும்.

பாதிப்பு
தமிழகத்தில் இன்னும் கொரோனா பரவல் முடியவில்லை. தினசரி மரண எண்ணிக்கை 3 இலக்கமாக இருந்து வருகிறது. பாதிப்படைந்தோர் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 6000 என்ற அளவில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இப்படி மக்கள் அலை அலையாக கிளம்பி வெளியே வருவது மிகப் பெரிய அபாயத்தையே ஏற்படுத்தும்.
Recommended Video

கட்டுப்பாடுகள்
அவசர தேவைக்காகத்தான் அரசு நமக்கு உதவுகிறது என்பதை பொதுமக்களும் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.. இப்படி தேவையில்லாமல் இப்படி படை படையாக கிளம்புவதை விட்டு விட்டு இன்னும் ஓரிரு மாதங்களுக்காவது கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் நல்லா இருக்கும்.

சென்னை
நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் இப்படித்தான் குறைய ஆரம்பித்தது.. இதையடுத்து அங்கு தளர்வுகளை அறிவித்தனர். மக்களும் சுதந்திரமாக வெளியே வர ஆரம்பித்தனர். மக்களின் கவனக்குறைவால் மீண்டும் அங்கு தொற்று அதிகரித்து விட்டது. மறுபடியும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்து விட்டனர். இப்போது இ பாஸ் விதிமுறைகள் தளர்வால் சென்னைக்கும், பிற மாவட்டங்களுக்கும் மக்கள் அதிக அளவில் இடம் பெயருவதால் தொற்று அதிகரிக்கும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. மக்களே சுய கட்டுப்பாடு காத்து தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்த்தால் நல்லது.












Click it and Unblock the Notifications