சம்பவமே தனுஷ் வீட்டில் தான் நடந்திருக்கு.. வேலைக்கார பெண் ஈஸ்வரியின் லீலைகள்.. அதிரடி திருப்பம்
சென்னை: ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய வழக்கில் வேலைக்காரப் பெண் ஈஸ்வரியிடம் மேலும் 43 பவுன் தங்கநகைகள் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் 300 கிராம் நகைகளை மீட்க வேண்டியுள்ளது, விசாரணை தொடர்கிறது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலைபார்த்த பெண் ஈஸ்வரியிடம் , தொடர் விசாரணைக்கு பின் மேலும் 43 பவுன் தங்கநகைகள் மீட்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்துடன் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா போயஸ்கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அதில் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். லாக்கர் பெட்டியில் இருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகள் எப்படி மாயமானது என்று யோசித்த ஐஸ்வர்யா எப்படி தொலைந்தது என்று தெரியாமல் தவித்து வந்தார்.

போலீசார் விசாரணை
இதையடுத்து உடனே ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ரகசியமாக விசாரித்து வந்தார்கள். ரஜினிகாந்த் வீட்டில் நடந்த இந்த திருட்டு தொடர்பான வழக்கை வெளியில் சொல்லாமல் ரகசியமாக போலீசார் வைத்திருந்தனர்.

சொகுசு பங்களா
அதேநேரம் வீட்டின் லாக்கரை பற்றி அறிந்த வேலைக்கார பெண் மீது சந்தேகம் அடைந்த ஐஸ்வர்யா போலீசாரிடம் 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார். 3 பேரை பற்றியும் போலீசார் கடந்த ஒரு மாதமாக ரகசியமாக விசாரணை நடத்தினர். இதில் ஈஸ்வரியின் வங்கி கணக்கை ஆராய்ந்த போது தான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வேலைக்கார பெண் ஈஸ்வரி தான் நகைகளை திருடி சொகுசு பங்களா வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

2 மாடி வீடு
இந்த வழக்கில் அதிரடியாக ஐஸ்வர்யா வீட்டில் வேலைபார்த்த நம்பிக்கைக்குரிய வேலைக்காரி ஈஸ்வரியும், கார் டிரைவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டார்கள். 60 பவுன் தங்க, வைர நகைகள் மட்டும் திருட்டு போனதாக புகாரில் கூறி இருந்தாலும், 100 பவுன் தங்கநகைகளும், 30 கிராம் வைரமும், 4 கிலோ வெள்ளிப்பொருட்களும் மற்றும் திருடிய நகைகளை விற்று சோழிங்கநல்லூரில் நிலம் வாங்கி கட்டிய 2 மாடி வீட்டின் பத்திரங்களையும் மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

43 பவுன் நகைகள் மீட்பு
இதனிடையே ஈஸ்வரியின் திருட்டு லீலைகள் இதோடு நின்றிருக்க வாய்ப்பில்லை என்று கருதிய போலீசார், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டிலும் கைவரிசை காட்டி இருக்கலாம், என்று போலீசார் சந்தேகப்பட்டனர். இதனால் வேலைக்காரப்பெண் ஈஸ்வரி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகியோரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தார்கள் இந்த விசாரணையில் ஈஸ்வரி கொடுத்த தகவல் அடிப்படையில் மேலும் 43 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. இன்னும் 300 கிராம் நகைகள் மீட்கப்பட வேண்டி உள்ளதாகவும், விசாரணை தொடர்வதாகவும், போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் எப்படி
போலீசார் நடத்திய விசாரணையில், ரஜினிகாந்த் வீட்டில் வேலைக்காரப்பெண் ஈஸ்வரி கைவரிசை காட்டவில்லை என்றும், நடிகர் தனுசின் செயின்ட் மேரீஸ் சாலை அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வைத்துதான் நகைப்பெட்டி லாக்கரில் இருந்து நகைகள் திருடப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது என தெரிவித்தனர். இதனிடையே போலீஸ் காவலில் இருந்த ஈஸ்வரி, வெங்கடேசன் ஆகியோர் நேற்று மீண்டும் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications