இதை கவனிங்க.. EB ஆப்ல போட்டோ போடலைனா டிஸ்மிஸ் தான்.. மின் வாரிய தலைவர் கடும் எச்சரிக்கை!
சென்னை: மின் வாரிய ஊழியர்கள் மின் விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் பணி நீக்கம், கட்டாய ஓய்வு போன்ற கடுமையான தண்டனைகள் சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளருக்கு வழங்கப்படும் என மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் எனப் பல்வேறு இடங்களில் மின்சார கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதில் மின் வாரிய ஊழியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. உயிரைப் பணயம் வைத்து மின் வாரிய ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

குறிப்பாக வீடுகள், மின் கம்பங்கள், ட்ரான்ஸ்பார்மர்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மின் வாரிய ஊழியர்கள் நேரில் செல்வார்கள். அவர்கள் மின்கம்பங்களில் ஏறி மின் ஒயர்களை பழுது பார்ப்பார்கள். சில நேரம் மின்சாரம் பாய்ந்து அவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
போதிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் இருத்தல், தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் பணிகளை மேற்கொள்ளுதல், முறையான கண்காணிப்பு இல்லாதது, கவனக்குறைவு போன்ற காரணங்களால் மின் வாரிய ஊழியர்கள் உயிரிழப்பது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.
மின்சாரம் பாய்கிறதா என முறையாக சோதிக்க வேண்டும், போதிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், பாதுகாப்பு உபகரணங்கள் பெரும்பாலான நேரங்களில் மின் வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
மின் விபத்துக்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் எனவும், அதனை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தும் புகைப்படத்தை பணிக்கு முன்னதாக டிஎன்இபி பாதுகாப்பு செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
இருப்பினும் விபத்துகள் தொடர்ந்து வருகின்றன. இது தொடர்பான மாதாந்திர ஆய்வில், விபத்து நேரிட்ட பகுதிகளில் புகைப்படங்களை செயலியில் பதிவு செய்யவில்லை என தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி, மின் வாரிய செயலியில் புகைப்படத்தை பதிவு செய்யாத நேர்வில் உயிரிழப்புகள் ஏற்படும் பட்சத்தில் கண்காணிப்பாளருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.
குறிப்பாக கட்டாய ஓய்வு, இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனைக்கு சம்பந்தப்பட்டவர் ஆளாக்கப்படுவார். உயிர் மிக முக்கியமானது. எனவே, பாதுகாப்பில் கவனம் செலுத்தி வழிகாட்டுதல்களை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என ராஜேஷ் லக்கானி அறிவுறுத்தியுள்ளார் என்று மின் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications